Skip to main content

சிங்கப்பூரின் தங்கமீன்கள்- நாவல் பயிலரங்கு.

சிங்கப்பூரின் தங்கமீன்கள்

இரண்டு வாரங்களுக்கு முன்னால் சிங்கப்பூர் தங்கமீன் வாசகர் வட்டத்திலிருந்து கவிஞர் பாலு மணிமாறன் அழைத்திருந்தார்.ஏப்ரல் 9 /10 தேதிகளில் சிங்கை வரமுடியுமா என்று கேட்டிருந்தார். நாவல் பயிலரங்கு நடத்தித் தரவேண்டும் என்று கேட்டார். எனக்குத் சற்று திகைப்பை ஊட்டியது அவர் கேட்டது. பிரபஞ்சன் வருவதாக அறிவிப்பு வந்ததே என்றேன். உடல் நலக்குறைவால் அவர் பயணம் செய்ய இயலாது என்றார். அவரிடம் இட்ட பணியைத்தான் உங்களிடம் தருவதாக இருக்கிறேன் நீங்கள் வரவேண்டும் என்றார். அதில் கட்டாயம் என்ற வார்த்தை சேர்க்கவில்லையே தவிர தொனியில் அது தெறித்திருந்தது. என்னால் அதனை ஏற்கவும் முடியவில்லை இழக்கவும் மனமில்லை. நான் திணறினேன் பதில் சொல்ல. "சும்மா வாங்க பாஸ், ரொம்ப யோசிக்காதீங்க, உங்கள் திறமை எனக்குத் தெரியாதா!".என்று என்னை ஏற்றிவிட்டார். நான் சரி வருகிறேன் என்று சொல்லிவிட்டு பின்னால் பதற்றத்தையும் ஏற்றிக்கொண்டேன்."எப்போ நிகழ்ச்சி?" என்றேன். 9/10 தேதிகளில் என்றார். எண்ணிப்பார்த்தேன் பத்தே நாட்கள்தான் எஞ்சி இருந்தன. ஒரு நாள் கருத்தரங்கு என்று  சொல்லிப்பார்த்தேன். மனம் பகீரென்றது.சற்று முன்னர் ஏற்றுக்கொண்ட மனம் , இப்போது பின்வாங்க ஆரம்பித்தது. இதை ஏன் ஏற்றுக்கொண்டேன். அவரை மீண்டும் அழைத்து வேண்டாமென்று சொல்லிவிடலாமா என்ற மனம் துன்புறுத்தியது.வேண்டாம் வாக்கு் கொடுத்துவிட்டோம்.  பிரபஞ்சனின் ஆளுமைக்கு சற்றே நிகராக என்னையும் வைத்துப் பார்த்திருக்கிறாரே என்ற சுயமதிப்பீடு என்னை ஆறுதல் செய்தது.  காலை வாறிவிடக்கூடாது .  மனம் சமாதனாமாகிக்கொண்டிருந்தது. 

சிறுகதைப் பயிலரங்குகளைப் பலமுறை நடத்தியிருக்கிறேன். தங்கமீன் அழைப்பின் பேரிலும் ஒரிரு முறை சிங்கை சென்று வந்திருக்கிறேன். களம் எனக்கு பழக்கமானதுதான். சரி இனியும் தயங்கக்கூடாது என்று என் மூன்று மணி நேர பேச்சுக்குத் தயார் செய்ய ஆரம்பித்தேன். ஜெயமோகன், எஸ் ரா, சில அகப்பக்கங்கள் எனக்கு சிலவற்றைக் கற்கக் கொடுத்தன. என் மூன்று நாவல்கள் எனக்குக் கொடுத்த நேரடி அனுபவங்கள் எனக்குப் பெரிதும் வழித்துணயாக தோள் கோர்த்து நின்றன. நாவல்கள் எழுதிய அனுபவமே என் தயாரிப்புக்கு முழு முற்றான உறுதுணையாக  இருந்தது.

சிங்கயின் தங்க மீன்கள்.
பத்து நாட்களில் முடித்தாக வேண்டும் என்ற முனைப்பு பிற வேலைகளைத் தள்ளிப்போட வைத்தது. பயிலரங்குக்கான தகவல்கள் சேரச் சேர  உற்சாகம் கூடியது. ஒரு வேலையைத் துவங்குவதற்கு முன்னர் அது நம்மால் ஆகாது, வேண்டாம், என்ற பின்வாங்கல் எண்ணத்துக்கு இடம் தந்தால்   அந்த செயல் துவக்கம் காணாமலேயே முறிந்து விழுந்து விடும். மாறாக அது தொடர்பான வேலையைத் துவங்கி, அந்தத் தேடலில் கிடைக்கும் தொடக்க கண்டடைவுகள் நம்மை உற்சாகப்படுத்தி மேற்கொண்டு முன்னே நகரவைக்கும் என்பதை பல வேளைகளில் நான் அடைந்த கற்பிதம். ஆறே நாட்களில் மூன்று மணி நேர பேச்சுக்கான விஷயம் முழுதும் கிடைக்கப்பெற்றேன். ஆனால் மனம் அமைதியடையவில்லை. இன்னும் இன்னும் இறுக்கமும் அழுத்தமும் சேர வேண்டும் என மனம் உந்தித் தள்ளிக்கொண்டே இருந்தது. முழுமை பெற்ற ஒன்றே படைப்பு வேளையில் பதற்றத்துக்கு இடம் தராது. பலமுறை நான் தயாரித்துச் சென்றவற்றை நிறைவாகப் படைக்க முடியாமல் மனம் சோர்வுற்றிருக்கிறேன். ழுழுமையான முன்தயாரிப்பு நிலையில் உள்ள உழைப்பு பயிலரங்கு தருணத்தை ஏமாற்றியது இல்லை.      எனவே நாவல்   பயிலரங்குக்குத் தேவையான விஷயங்கள் என்னைத் தூங்கவிடாமல் உசுப்பியவண்ணம் இருந்தது. நள்ளிரவுகளில்  சிந்தனைகள் கிளர்த்திய புது அம்சங்களை அப்போதே எழுந்து மடிக்கணினியை எழுப்பி சேர்த்துக்கொண்டே இருந்தேன். 'என்ன வேலை முடிஞ்டசிருச்சா?' என்று என் மனைவி என்னை விசாரிக்கும் அளவுக்கு நான் முழுமூச்சான ஈடுபாட்டில் முனைப்பாக இருந்திருக்கிறேன் என்று நான் மகிழ்ந்துகொண்டேன். அதிகமாக எழுத்து வேலை இருக்கும்போது மனைவி அடுக்களை பணியிலிருந்து எனக்கு விடுப்பு கொடுத்துவிடுவாள் என் மனைவி. (பாவம் பொழச்சி போட்டம்)



முதல் இரண்டு நாள் நிகழ்வின் கலந்து சிறப்பித்த தங்க மீன்கள்.

இடையில் பாலு மணிமாறன், "அழைத்து என்ன பாஸ் முடிச்சிட்டீங்களா?" என்று கேட்டுக்கொண்டே இருந்தார். "முடிச்சிட்டேன், பைனல் டச்சஸ் கொடுத்துக்கிட்டிருக்கேன்," என்றேன். அப்படியா பாஸ்,ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, எனக்கு அனுப்பிவையுங்கள் " என்றார். நான் படிக்கணும் சிங்கப்பூர் சட்டதிட்டங்களுக்கு முரணாக ஏதும் இருக்கக் கூடாது, அதனால் நான் பார்க்கணும் " என்றார். நான் அனுப்பிவைத்தேன். அரை மணி கழித்து,                    " பக்காவா இருக்கு பாஸ்" என்றார். எனக்குள் தன்னம்பிக்கை ஆழமாக வேரோடத் தொடங்கியது. எட்டாம் தேதி அதற்குத் தேவையான் எல்லாம் நிறைவாக பூர்த்தியானது. மீண்டும் அழைத்தார் பாலு. பாஸ் "பைனல் டச்சஸ் முடிஞ்சா?" என்றார்.   ஆம் என்றேன். அனுப்பி வையுங்கள் என்றார். என்னைவிட அவரின் ஈடுபாடும் பொறுப்புணர்ச்சியும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பளர் இல்லையா?  பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தங்கமீன் வழி வாசகர்களையும் எழுத்தாளர்களையும் உருவாக்க இடைவிடாது அயராத உழைப்பை வழங்கியவர் பாலு. அதோடு சிங்கப்பூர் தமிழ் வளர்ச்சிக்காக பிரத்தியேக சிரத்தையை வழங்கும் நாடு என்ற படியால் எங்கேயும் குழறுபடிகள் இருக்கக் கூடாது என்பதில் எனக்கும் கவனம் மிகுந்திருந்தது. அந்தப் பிரத்தியேக கவனமே என் தயாரிப்பு எனக்கு புத்தம் புதிய படிப்பினையை ஆராதித்திருந்தது. அறிவுப்பூர்வ தேடல் ஆன்மாவை நிரப்பும் என்பது தேடுபவருக்கு மட்டுமே கிட்டும் தரிசனம். என் தேடல் தங்கமீன் எனக்களித்த வாய்ப்பு.

நானும் வித்யாவும் கலந்துரையாடலில்

ஆறாம் தேதி வாக்கில் ஏர் ஆசியா விமான நிறுவனத்தில் சிங்கை போக வர டிக்கட் பெற்றுக்கொண்டேன். 9ம் தேதி காலை பதினொன்றே கால் மணிக்குச் சிங்கையை அடைய வேண்டும்.கோலாலம்பூரிலிருந்து நண்பர் பத்திரிகையாளர் வித்யாசகரும் நாவல் குறித்த தன் பத்திரிகை அனுபவத்தைப் பேச வருகிறார் என்று பாலு சொல்லியிருந்தார். எனக்கு அது என் மனச் சுமையைத் தணிப்பதாக இருந்தது. அன்று காலையிலேயே என் மகன் பினாங்கில் வாங்கிய கோண்டோ குடியிருப்புப் பகுதிக்கு புதுமனைப் புகுவிழாவுக்கு என்னை அழைத்திருந்தான்.  அதனை முடித்துவிட்டு காலை மணி எட்டரைக்கு பினாங்கு விமானத தளத்துக்கு வந்துவிட்டிருந்தேன்.

காலை 11.15க்கு சிங்கையின் விமான நிலையமான சாங்கியில் கால் பதிக்கிறேன். எம் ஆர் டி எடுத்து என் 'போஸ் விடுதி' இருக்கும் காளாங் சென்று சேர்ந்தேன். ஆனால் ஹோட்டல் லெவென்ண்டர் பகுதியில் இருந்தது. அங்கிருந்து இன்னொரு எம் ஆர் டி எடுக்க வேண்டும். அருகில்தான் இருக்கிறது என்றார் ஒரு பணியாள்.அந்த பாலத்தைத் தாண்டியதும் ஹோட்டல் தெரியும் என்றார். நடை பழக்கத்தை நான் விரும்புபவன் இது இன்றைக்கான நடைப்பயிற்சியாக இருக்கட்டுமே என்று எண்ணி நடக்கத் தொடங்கினேன். பாலம் ஏறி இறங்கியது பாஸ் ஹோட்டல் கண்ணில் தெரிந்தது. குறைந்தது நான்கு கிலோமீட்டர் தூரம். காலை வெயில் இதமாக இருந்தது. வியர்க்க வியர்க்க விடுதையை அடைந்தேன். அறை தயாராக இருந்தது. எந்த பிக்கல் பிடுங்களும் இல்லாமல் முன் ஏற்பாடு பக்காவாக இருந்தது. அறை சிங்கையின் ஒரு பகுதியைத் திறந்து காட்டி இருந்தது. கட்டடங்கள் முகில் கூட்டங்களை முத்தமிட்டுக் கொண்டிருந்தன. சற்று நேரம்  குளித்து விடலாம் என்று ஆடை கலைந்தேன். கதவு தட்டும் ஓசை வந்தது. வித்யாசகர் வந்துவிட்டார் போலும் என்று நினைத்து கதவைத் திறந்தேன். ஒரு விடுதி பணியாளர், உங்களுக்காக யாரோ ஒருவர் கீழ்த்தளத்தில் காத்திருக்கிறார் என்றார். போய்ப் பார்த்தால் யாரையும் காணவில்லை. லாபிக்கு வெளியே கண்கள் பாய்ந்தன. பாலு மணிமாறன் பதற்றமாக அங்குமிங்கும் நடமாடியபடி இருந்தார். அருகில் போய்க் கைகுளுக்கி விட்டு என்ன என்றேன். வித்யாசாகர் டேக்சியில் வருகிறார். காத்திருக்கிறேன் என்றார். அரைமணியில் அவரும் வந்து சேர்ந்தார். பகல் உணவுக்குப் போகலாம் என்றார். நான் காளாங்கிலேயே ஒரு இந்திய முஸ்லிம் கடையில் பகலுணவைமுடித்துவிட்டிருந்தேன் என்றேன். கனவாய்த் துண்டுளைத்தான் கடிக்க முடியவில்லை. முத்திய கனவாயோ!
"பாரவால்ல போஸ் கூட வாங்க, பலகாரம் சாப்பிடுங்க" என்றார். கிளம்பிவிட்டோம். உணவின் வாசம் நான் இங்கே சாப்பிடும் வாய்ப்பை இழந்துவிட்ட எண்ணத்தைக் கிளர்த்தியது.

சாப்பிடக் கிளம்பிய போதே  மழை பிடித்துக்கொண்டது. எங்கள் ஊரில் மூன்று மாதமாய்க் காணாத மழை சிங்கையில் சஸ்பரிசித்த போது எனக்கு இளமை திரும்பியிருந்தது. மழையின் வாசத்தையும் அதன் ஈரத்தையும் சுவைக்க சிங்கப்பூர் வரை வரவேண்டியிருக்கிறது. காணாமற்போன பொருள் கைப்பிடி வரைக்கும் தாவிக்கொண்டு வந்து சேர்ந்ததுபோல ஓர் உணர்வு.மழையில் கொஞ்சம் நனைந்தபடியே என் இனிமையை நான் ஆராதித்தேன். அழகான ஊரில் அற்புதத் தருணம். கொடிய கோடையில் கொப்பளிக்கும் வெப்பத்தில் வாழ்ந்து பார்த்தவருக்கே மழையின் குழந்தைத்தன்மை புரியும். எங்கள் ஊரிலும் மழை பெய்திருக்குமா என்ற சின்னதாய் ஏக்கம் துளிர்த்தது.

 சரி மாலை ஆறறைக்கு அங் மோ கியூ லைப்பரரியில் சந்திப்போம் என்று எங்களை விடுதியில் விட்டு விட்டுக் கிளம்பிவிட்டார் பாலு. மலேசிய சிங்கை இலக்கியக் குறித்த ஒரு கலந்துரையாடல் அது. வித்யாசகர் என்ன பேசுவது என்று கேட்டுக்கொண்டே இருந்தார். உங்கள் பத்திரிகை அனுபத்தைச் சொல்லுங்கள் என்றேன். நான் அதற்கு  முன் தாயாரிப்பு எதுவும் செய்யவில்லை. என் முக்கால் வாசி வாழக்கை இலக்கியத்தில் கலந்திருக்கிறது எனவே பேசுவதற்கு நிறையவே இருந்தது.
தங்கமீனின் தீவிர செயல்பாட்டாளர் பிரேமா மகாலிங்கம் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தார். எங்களைப் பார்த்ததும் முகம் மலர் வரவேற்றார்.

நிகழ்ச்சி துவங்குவதற்கு முன் நூலகத்தை பார்வையிட்டேன். ஆயிரக்கணக்கான தமிழ் நூல்கள். மலேசியாவில்  இருக்கின்ற மலாயாப் பல்கலைக் கழக நூலகத்தை மூட ஆபத்து வரத் துவங்கிய காலக்கட்டம் இது. எல்லாருக்கும் பொதுவாக இருந்த இந்நூலகத்தை பயன்டுத்துவர் எண்ணிக்கை அரிதாகிக் கொண்டிருக்கிறது என்ற காரணம் காட்டுகிறார்களாம். எல்லாவற்றிலும் இனபேதம். நூலகம் என்ன செய்தது இவர்களை? தமிழ்க்கல்விக்கு வாய்ப்பைக் குறைத்த அரசுதானே அடிப்படை காரணம் நூலகப் பயன்பாட்டுக்கு ஆள் இல்லாமல் போனது. ஆனால் சிங்கையில் இனங்களுக்கிடையே பேதங்கள் பார்ப்பதில்லை. இது தமிழ் மொழி மாதம். சிங்கையில் நீண்ட காலம் இலக்கியத்துக்குப் பங்களிப்பு செய்த மூத்த தமிழ் எழுத்தாளர் இராம கண்ணபிரானைக் கொண்டாடும் வகையில்  நூலகத்தில் அவருடனான தேனீர்' என்ற  ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்திருந்தது நூலகம். அதனை அவரின் படத்தோடு அறிவிப்பு  மூன்று இடங்களில்  ஒட்டியிருந்தது. அதுதான் சிங்கை.இது அவருக்கு செய்யும் எவ்வளவு பெரிய கௌரவம்?

ஐம்பது பேருக்குமேல் நூலகத்தில் கூடிவிட்டார்கள். நல்ல மழைக்குப் பிறகான கூட்டம். மழை அவர்களைத் தடுக்கவில்லை. எதிர்பார்த்த எண்ணிக்கைதான் என்றார் பாலு.பாலு என்னை அறிமுகம் செய்து முதலில் பேசச் சொன்னார். நான் மலேசிய இலக்கிய வளர்ச்சி வீழ்ச்சியை 60கள் துவங்கி 2016 வரை மூன்று காலக்கட்டமாகப் பிரித்துப் பேசினேன்.பதினைந்து நிமிடத்துக்கும் குறைவாகவே நேரம் எடுத்துக் கொண்டேன். வித்யாசாகர் தன் அறிமுக உரையை 20நிமிடங்கள் பேசினார். சிரிப்பலைகளைக் கிளப்பி, சிங்கை முகங்களில் புன்னகை அழகில் பூரிக்க வைத்திருந்தார்.

பின்னர் கேள்வி பதில் அங்கம். இருவரும் மாறி மாறி பதிலளித்தோம். சிங்கை எழுத்தாளர் இராஜ கணேஷ் தன் முக நூலில் அழகாக அதனைப் பதிவு செய்திருந்தார். தெளிவான எழுத்து. எனக்கு எம்ஜி சூரேஸின் நடையை நினைவு படுத்தினார்.
Balu Manimaran  முக நூல் இந்தத் தளத்தில் அவரின் கட்டுரையை வாசிக்கலாம்.

வலது பக்கம் கோடியில் கணேஷ்பாபு. இராஜ கணேசும் படத்தில் இருக்கிறார்.

எழுத்தாளர்கள் சூர்ய ரத்னா, ஜெயந்தி சங்கர்


பாலுமணிமாறன் நட்ட நடுவில்- உயரமான தோற்றத்தில்.


நாளை தொடரும்....

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...