Skip to main content

சிங்கப்பூரின் தங்க மீன்கள்- நாவல் பயிலரங்கு- பாகம் 3

 
சிங்கப்பூரின் தங்க மீன்கள்- நாவல் பயிலரங்கு-                                                   பாகம் 3

               எனக்குப் புது இடம் என்றால் கொஞ்சம் அலர்ஜி. தூக்கம் பிடிக்கவில்லை. நான் பின்னிரவு இரண்டு மணிக்குமேல்தான் தூங்கிப்பழக்கம். இந்த உடல்  அதற்குப் பழகிவிட்டது. வானொலியில் அலைவரிசை தேடிக்கொண்டிருந்த விதாயாசகர் வானொலியில் கைவைத்த படியே ஆழ்நிலை தியானத்துக்குள் போய்விட்டார். தூக்கமெல்லாம் ஒரு கொடுப்பினை. எனக்கு எப்போது தூக்கம் வருமோ?
அங் மோகியூ நூலக்த்தின் தமிழ்ப்பகுதியின் ஒரு மூலை.

 
 "காலை 9.30க்கெல்லாம் நாவல் பயிலரங்கு ஆரம்பித்துவிடவேண்டும் பாஸ்".  என்று பாலுமணிமாறன் எச்சரிக்கை  கொடுதபபடிதான் முதல் நாள் வழியனுப்பி வைத்தார். எட்டு மணிக்கெல்லாம் எழுந்து தயாராகிக்கொண்டிருந்தேன். வித்யா "யான்யா அவசரப்படுற...சொன்ன நேரத்துல தொட்ங்காதுய்யா," என்றார். "இது என்ன மலேசியாவா?" என்றேன். "ஆசியா ஊர் கலாச்சாரமெல்லாம் அப்படித்தான் இருக்கும்," என்றார்.
ஒன்பதுக்கெல்லாம் டேக்சி பிடித்து ஆங் மோ கியூ நூலகத்தைப் பிடித்தாயிற்று. எங்களுக்கு முன்னமேயே ஒரு ஆசிரியரும் ஒரு பெண்மணியும் காத்திருந்தனர்.
நூலகத்தின் ஒரு கதவு மட்டுமே திறந்து எங்களை வரவேற்றார் நூலக அதிகாரி. ஆனால் நூலகம் 10 மணிக்குத்தான் திறக்கப்படும் என்றார். நாங்கள் காத்திருப்பதைப் பார்த்தவர் கதவைத் திறந்து உள்ளே வரசொன்னார். பாலு வந்து கொண்டிருப்பதாக சொன்னார்.
நூலகத்தை  ஒரு சுற்று வந்தேன். தமிழ் நூல்கள் 1000க்கண்க்கில் மேல் தளத்தில் இருந்தன. அங்கேதான் இராம கண்ணபிரானின் இலக்கிய சேவையைக் கொண்டாடும் அறிக்கையைப் பார்த்தேன். கீழேயும் ஒன்று  அதுபோல  ஒட்டப்பட்டிருந்தது.சிறுபான்மை தமிழர்களுக்கு, அதுவும் சிங்கையில் ஒரு தமிழ் எழுத்தாளனை அங்கீகரிக்கும் பணபாடு என்னை மெய்சிலிர்க்கவைத்தது.(எனக்கு யாராவது சிங்கை குடியுரிமைக்கு சிபாரிசு செய்வீர்களா?)
சிங்கை எழுத்தாளர் இராம கண்ணபிரானுக்கு தேசிய நூலகம் விழா எடுக்கும் அறிவிப்பு.
மலேசியாவில் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாயிற்று அரசு அங்கீகாரம் என்பது தமிழ் எழுத்தாளனுக்குக் கைக்கு எட்டாத தூரத்தில்தான் இருக்கிறது. மலாய் எழுத்தாளர்களுக்கு எத்தனை வசதிகள், வாய்ப்புகள்?.  அவர்களுக்கு விமான டிக்கட், சொகுசு விடுதி , பணம், மரியாதை ,தேசிய விருது எல்லாம் உண்டு. தமிழ் எழுத்தாளர்களுக்கும் சீன எழுத்தாளர்களுக்கும் நாக்கு வழிக்க குச்சிகூடகொடுப்பதில்லை. மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் அவ்வப்போது கோரிக்கை விடுத்த பின்னர் மான்யம் கொடுக்கிறார்கள். ஆனால் தேசிய அங்கீகாரத்துக்கு இடமில்லை.(நான் இதையெல்லாம் வேறு எங்கு போய்ச் சொல்லி முட்டிக்கொள்வது?) நஜிப் நாற்காலியில் இருக்கும்போதே கேட்டு வாங்கி விடுதல் உத்தமம்.அவர் சிறுபான்மை வாக்கின் மேல் பிரதியேக கவனம் செலுத்துவதால்.

பாலு வந்து சேர்ந்துவிட்டார். அதற்கு முன்னர் பிரேமா மகாலிங்கம்  அங்குமிங்கும் ஓடி முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தியவண்ணம் இருந்தார். அவருக்குப் புன்னகை ஆடும் முகம்.
முதலில் என் அங்கம். நாவல் பயிலரங்கு. மூன்று மணிநேரம். நான்  ஒருமணி நேரத்துக்கு இடையிடையே  5 நிமிடங்கள் ஓய்வு கேட்டேன். பாலு உடன் பட்டார்.
மொத்தம் 37 சிலைடுகளில் என் உரைக்கான விஷயங்களை நுழைத்திருந்தேன். அதில் ஒரு நாவல் முழுமையாக எழுதுவதற்கான உள் விவகாரங்கள் முழுமையாக இருந்ததால் எனக்குக் கொஞ்சமும் பதற்றமில்லை. நாவல் செய்முறை தொழில் நுட்பமே என் பணி.

கலை மானுடர்க்குத் தரும் மன  ஓர்மையையும்,  சமன் செய்தலையும்   தொடக்கமாகச் சொல்லி என் உரையை ஆரம்பிதேன். பின்னர் ஒரு நண்பர் அது தனக்குப் புதிய செய்தியென்றும்  கலை சார்ந்த வாழ்வின் உன்னதத்தையும் உணர்ந்து கொண்டதாகச் சொன்னார். எனக்கு அது நிறைவாக இருந்தது.
நாவல் எழுத்தும் கலை சார்ந்தது.எழுத்துக் கலையில் தோயும் மனம் நாவலை எழுத விழையும் என்றும் சொன்னேன்.
என்னுடைய 37 உப  தலைப்புக்களிலான விஷயங்களில் பத்து உப தலைப்புகள் விவாததுக்கு உட்பட்டன. ஆரோக்கியமான விவாதமாக இருந்தது.

ஒரு படைப்பாளரின் நாவல் சுய அனுபவம் சார்ந்தே இருக்கவேண்டும், அது படைப்பாளனுக்கு மிக நெருக்கமான எழுத்தாக இருக்கும் என்று சொன்னேன்.
"கொலை பற்றி எழுதுவதென்றால், ஒருவன் கொலை செய்துவிட்டுத்தான் எழுத வேண்டுமா?" என்று கேட்டார் ஒருவர்.

 சுய அனுபவம் நேரடித்தன்மையைக் கொண்டது மட்டுமல்ல, நம் பார்வைக்கெட்டும் சௌகர்யமான தூரத்தில் நடக்கும் சம்பவங்களையும் உள் வாங்கி எழுதுதலும் சேர்த்தி என்றேன். பிறர் வாய்மொழியாக சொன்னதையும், நாம் வாசித்தவற்றிலிருந்தும் புற அனுபவத்தைப் பெறமுடியும். நாவல் புனைவு எழுத்தாகும். புனைவு இல்லாதது கற்பனை இல்லாதது. யதார்த்த வாழ்வினை மையமாக வைத்து கற்பனையைக் கலப்பதே புனைவெழுத்து. கொலையைப் பற்றி கற்பனை செய்தாலே அது ரத்தமும் சதியுமாக தெறித்து வருமல்லாவா?

புதுமைப் பித்தன் சுய அனுபவத்தை ரத்தமும் சதையுமாக அவதானித்து எழுதியவர். அவருடைய பிள்ளைமார் சமூக வாழ்க்கை பெரும்பாலும் அவர் கதைகளில் பிரதிபலித்தது. ப. சிங்காரத்தின் இரண்டாம் உலக யுத்த அனுபவமே அவரின் நாவலான 'புயலிலே ஒரு தோணி' கொண்டிருந்தது. என்னுடைய செலாஞ்சார் அம்பாட் என் சிறுவயதின் அனுபவமும், நான் செய்தியிலிருந்து வாசித்த தகவல்களையும் உள்ளடக்கியது. காடு நாவல் ஜெயமோகனின் சுய அனுபவம். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

நாவலுக்கு வாசக இடைவெளி பற்றிய என் கருத்துக்கு , வாசகனுக்கு எண்ணற்ற இடைவெளிகள் விட்டால் புரிந்து கொள்வது சிரமமாக இருக்காதா என்ற வினா சர்ச்சையைக் கிளப்பியது. எல்லாவற்றையும் நாவலாசிரியனே சொல்லிக்கொண்டு போனால் வாசகனுக்கான சிந்தனைத்திறப்பு இருக்காது என்று சொன்னேன். வாசிப்பு இன்பம் முழுமையாக கிட்டாமல் போகலாம்.  அது படிமத்தைக் கிளர்த்தவேண்டும். படிம நேர்த்தியே வாசக இடைவெளி என்று பதிலுரைத்தேன்.

இன்னொரு எழுத்தாளர் கணேஷ் பாபு அதற்கு நல்ல விளக்கம் அளித்தார். தேர்ந்த வாசகர் கணேஷ். அவர் முகநூலில் பின் நவீனம் பற்றிய ஒரு கட்டுரையை முன்னமேயே வாசித்திருந்தேன். பின் நவீன எழுத்துமுறை பற்றிய தொடக்க கால வாசகனுக்கு தோன்றும் பல சிக்கல்களை அது விடுவிப்பதாக இருந்தது. கணேஷ் பாபு வாசக இடைவெளியைப் பற்றி சற்று புரியும்படி சொன்னார்.  பொதுப்படையான நாவலாக்கம்  கருத்துக்கு  ஒத்த கருத்துள்ளவர்.

நாவல் எழுதுவதற்கு முன்னர் திட்ட வரையறை வேண்டாம்.அது மனதளவில் ஒரு சித்திரமாக இருந்தாலே போதும் என்றேன். பாலு மணிமாறன் அதற்கு எதிர்வினையாற்றினார். ஒரு திட்ட முன்வரைவை எழுதி வைத்துக் கொள்வதன் அவசியத்தைச் சொன்னார். ஒவ்வொரு அத்தியாயத்திலும் இன்னின்ன வற்றை எழுதப் போகிறேன் என்ற முன் திட்டமிடல் தொடக்க எழுத்தளர்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்றார். எனக்கும் அதில் கருத்து ஒற்றுமை இருந்தது. எழுதப் பழகிவிட்டவர்களுக்கு என் யோசனை உதவலாம் என்றேன்.

நாவலில் மெய்யியல் சிந்தனையைத் தொட்டும் விவாதங்கள் வந்தன. அதில் முக்கிய வினா ஒரு படைப்பாளனின் தத்துவ நோக்கு வாசகனுக்கு முரண்பட்டதாக இருக்க வாய்ப்பு உண்டு என்றார் ஒரு பங்கெடுப்பாளர். நாவலாசிரியன் தத்துவ நோக்கு வாசிப்பு ஓட்டத்துக்கு ஒத்து வரக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்தக் குறிப்பிட்ட  தத்துவப் பார்வை பொருத்தமாக இருக்காது என்று கருத்துரைத்தேன். எல்லா மெய்யியல் நோக்கும் பொருந்தும்படியாக இருக்கவேண்டும். பெரும்பாலும் அவை தர்க்கத்துக் குரியதாக இருந்ததில்லை. அது என் வாசிப்பனுபவம். நம்முடைய வாழ்வனுபவமும் நாவசாசிரியனின் எழுத்தும் ஒரே நேர்க்கோட்டில் சங்கமிப்பதாக இருந்தாலொழிய அதன் புரிதல் எளிதாகும்.

நாவலின் பாத்திர வார்ப்பை ஒரு முறை எழுதினால் போதுமா என்ற வினாவும் எழுந்தது. புதிதாக நாவல் எழுதுபவர்க்குத் தோன்றும் வினா இது. நாவல் முழுக்க ஒரு சில முக்கியப் பாத்திரங்கள் ஊடாடியபடியே இருக்கும். ஒரே பாத்த்ரம் தனக்கே முரணான பண்பைக் கொண்டிருக்க வாய்ப்பு உண்டு. எனவே பாத்திர வார்ப்பை நாவல் முழுக்க விரவி இருந்தால் அதன் சுவாரஸ்யம் கனமாகும் என்றேன்.
வினாவெழுப்பும் பாலுமணிமாறன் தங்கமீனின் துடுப்பு

ஒரு நல்ல நாவலுக்கு இருக்கவேண்டிய கவித்துவ சிந்தனை பற்றியும் விரிவாகப் பேசினேன். அந்த உபதலைப்பு நிறைவாக இருந்தது எனக்கும்.
நாவலின் அழகியல் பற்றி யாரும் வினா எழுப்பவில்லை. ஆனால் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் பேசும் போது உவமைகள் அவசியமா என்றார். நான் எழுதுவதில்லை என்றார்.. ஒரு நாவலாசிரியரின் ஆளுமை வெளிப்படும் இடம் அழகியல். அதனை வலிந்து நுழைக்க வேண்டிய அவசியமில்லை. அது களத்துக்கும், பாத்திரத் தன்மைக்கும் காட்சிப் படுத்தலின் போதும் தன்னிச்சையாக வந்து விழவேண்டும். அதில்தான் அழுத்தமும் அர்த்தமும் மிகும். அவருக்கும் அதில் ஒத்த கருத்து இருந்தது.

கோணங்கியின் ஒரு நாவல் தன்னை உள்ளிழுக்க வில்லை என்று சொன்னார். உள்ளபடியே நாவலாசிரியர்கள் நாவலை எழுதுவதில்லை. அது தன்னைத் தானே எழுதிக்கொள்கிறது. அதனால் சில எழுத்து உள்செல்வதில்லைதான்.

என் மூன்று மணி நேரத்தை நான் முறையாகவும் பொறுப்புணர்ச்சியோடும் கையாண்டேன் என்பது பாலு பங்கெடுத்தவர்களின் கருத்தைக் கேட்கும் போது தெரிந்துகொண்டேன். முன்பின் நாவலே எழுதியிராதவர்கள் அறிவிக்கப்பட்ட நாவல் போட்டியில் கலந்துகொள்ளப் போவதாகப் பெயர் கொடுத்தது  என் பயிலரங்கு வெற்றி பெற்றதற்கு ஒரு சான்று.

நாவல் பயிலரங்ரங்கு தங்களுக்கு நாவல் எழுதுவது பற்றிய தெளிவைக் கொடுத்தது என்று பத்து பேருக்கு மேல் கருத்துரைத்தனர். சிலர் இன்னின்ன பகுதிகள் தங்களைக் கவர்ந்ததாகச் சொன்னார்கள். கீழை கதிர்வேல்  தனக்கு நாவல் கொடுத்த கற்பிதத்தை தன் முகநூலில் எழுதியிருந்தார். அவரின் எழுத்து எனக்கு உவப்பாக இருந்தது. இன்னொரு வாசகியும் முகநூலில் பதிவு செய்திருந்தார். அவர் ஜெயந்தியின் ஆதர்ஸ வாசகர்.

விடைபெறுபோது நிறைய பேர் பயிலரஙகு பயனுள்ளதாக இருந்தது என்றார்கள். அதில் முகஸ்துதி இல்லையென்பதே ஆறுதல்.
எனக்கு என் படைப்பு நிறைவாக இருந்ததே எனக்கான் ஆன்ம திருப்தி.

இதில் மிக முக்கிய அங்கம் நான் குறிப்பிட்டது போன்ற நாவல் எழுதும் போட்டி. 4500 சிங் டாலர் பரிசு அறிவிக்கப்பட்டது. மூன்று சிறந்த கதைகளுக்குத் தலா ஆயிரமும், ஐந்து கதைகளுக்குத் தலா 300 வெள்ளியும் பரிசு என்று பாலு உற்சாக கைத்தட்டலுக்கு இடையே அறிவித்தார். என்னைத் தலையாய  மெண்டாரகவும் நியமித்தார்.

இதில் மிக உற்சாகமான செய்தி என்னவென்றால் சூர்ய ரத்னா ( கரிகாலன் சோழ விருதை தன் நாவலுக்காக வாங்கியவர்) பாலு தொலைபேசிக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பியதே. அதில் என் பயிலரங்கை சிலாகித்து சொன்ன வார்த்தைகள்.அது பற்றித் திரும்பத் திரும்பச் சொல்லி நெகிழ்ந்தார் நிகழ்ச்சி யின் நங்கூரம் பாலு.

அன்று இரவு மீண்டும் இலக்கிய சண்டை. என்னை பாலுவும் விதியாவும் கூட்டு சேர்ந்து கலாய்த்தனர். எனக்கொரு காலம் வரத்தானே செய்யும்?
இரவு உணவுக்குப் பின் எங்களை மீண்டும் விடுதியில் விட்டு விட்டு வீடு திரும்பினார். மறுநாள் காலை வருவதாக உறுதியளித்துவிட்டு.

மறுநாள் காலை ஏழுக்கெல்லாம் விடுதி பணியாளர் கதவைத் தட்டி கீழே ஒருவர் காத்திருப்பதாகச் சொன்னார். அறைத் தொலைபேசி வேலை செய்யவில்லை. தூங்கி எழுந்த முகம் இருவருக்கும். எனவே  அப்பணியாளரையே பாலுவை அழைத்து வரும்படி சொன்னேன்.
எங்களை வழியனுப்ப வந்தேன் என்றார். நாங்களே போய்விடுவேமோ ஏன் வீண் சிரமம் என்று நினைத்துக்கொண்டேன்.
எங்கள் இருவருக்கும் மனம் நிறைய அன்பும், பை நிறைய பண்பும் கொடுத்தனுப்பினார். அவ்வளவு பண்பை நான் எதிர்பார்க்கவில்லை.
பின்னர் வித்யாவை பேருந்தில் ஏற்றிவிட்டு, என்னை சாங்கி விமான நிலையத்துக்கு டேக்கிசியில் ஏற்றிவிட்டுத்தான் போனார். அலுவலக வேலை தேங்கிக் கிடப்பதாகச் சொன்னார்.
சிங்கையை விட்டு வர மனமில்லை. கண்ணிலேயே நின்றது அதன் நூதன வனப்பு.

(நாவல் பயிலரங்குக்கு ஒரு முனைவர் வந்திருந்ததைப் பாலு என்னிடம் பெருமையாகச் சொன்னார். இதனை முன்னமேயே சொல்லியிருந்தால் நான் தடுமாறியிருக்கக் கூடும்).

அம்புடுதேன்.



.

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...