Sunday, July 10, 2016

தாய்லாந்தில் இரண்டு நாட்கள்...பகுதி 4

4..தாய்லாந்தில் இரண்டு நாட்கள்
தாய்லாந்தின்  இப்போதைய மன்னர்.

விடுதி அறை ஏழாவது மாடியில் இருந்தது. அறை கண்ணாடிக் கதவு வழியாக கடல் அலைகள்  எங்ளை அழைத்து அணைத்துக் கொள்ளத் துடித்துக் கொண்டே இருந்தது.

காணக் காணக் கடல் சலிப்பதில்லையே ஏன்?  நீர் இலயல்பாகவே தண்மையானது. மனதைச் சமன் செய்யும் தன்மை மிக்கது.  கொஞ்ச நேரம் கடலைப் பார்த்தால் எல்லாத் துயரும் அலையில் அடித்துச் சென்று விடும். உலகில் அதிகம் பயணிகள் செல்லுமிடம் நீர் நிலைகளாகத்தான் இருக்க முடியும். தண்ணீர் என்று அதற்குப் பெயெரிட்டதே நம் சான்றோரின் அறிவுடமையைக் காட்டுகிறது. குளித்தாலும் குடித்தாலும் பார்த்தாலும் அது தரும் பரவசம் அலாதியானது. ஐரோப்பியன் கண்டு பிடித்த மது வஸ்த்களைக்கூட நாம் லாவகமாகத் 'தண்ணி' என்று பெயரிட்டு அதிலும் 'தண்மையை' அடைந்து சமன் செய்துகொள்கிறோம்.

நான்தான் முதலில் அறைக்குச் சென்றேன். களைப்பில் சற்று நேரம் கண்ணயர்ந்துவிட்டு பின்னர் வெளியே போகலாம்..  முதலில் கடலோரம் நடைப் பயிற்சி செய்யலாம் என்றே முடிவெடுத்திருந்தோம். ஆனால் சுங்கச்சாவடியில் சாவடியாகக் காத்திருந்ததும், வெயிலில் பசியோடு பயணித்ததும் உடலைச் சக்கையாக்கிவிட்டிருந்தது. உடல் படுக்கையில் சாயவே யத்தனித்தது/

 அவர் அறைக்குத் தாமதமாகத்தான் வந்தார். வந்தவர் அறையைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்தார்.

"நான் நெனச்சேன்," என்று வில்லங்கமாக ஆரம்பித்தார்.

"தோ பாத்தீங்களா கண்ணாடிக் கதவு இடது பக்கம் நகரவில்லை. அது பழுதாகிவிட்டது என்றார். ஒரு சுவர் விளக்கின் மேல் கண்ணாடியும் காணாமல் போயிருந்தது. தொலைபேசியில் அழைத்தார்.

"நாம சொல்லலனா. காலி பண்ணும் போது நீங்கதான் ஒடச்சதுக்கு நஸ்ட ஈடு கட்டணும்னு சொல்லிடுவாங்க. ரூம  மாத்துர்றதுதான் நல்லது," என்றார்.

அவங்ககிட்ட சொன்னா போதாதா, ரூம வேற மாத்தணுமா என்றேன். நான் கைலிக்கு மாறி  ஓய்வெடுக்கும் மனநிலைக்கு ஆளாகியிருந்தேன்.

"இல்ல வேற ரூம கேப்போம்."

"சீ வியூ ரொம்ப நல்லாருக்கு பானு"

" சீ வியூ உள்ள வேற ரூம கேப்போம்." என்று கொக்காய் நின்றார்.

சரி வாதிட விடுமுறைக்கு வரவில்லை. இன்னொரு அறைக்கு மாற்றினார்கள். அது முன்புள்ள அறை கொடுத்த விசாலமான காட்சியைக் கொடுக்கவில்லை. ஒன்றை அடைந்தால் ஒன்றை இழக்க நேரிடுகிற்து.
அந்த அறையிலும் கண்ணாடிக் கதவு ஒரு பக்கம் இயஙவில்லை. எல்லா அறையிலும் பாதுகாப்புக்காகவே இந்த முன்னேற்பாடு.

அறையில் இணையம் கிடைக்கவில்லை. "நான் கீழே போய் கேட்கிறேன்" என்றார். அவர் முகத்தில் கடுகு வெடித்தது. நானும் சில இணைய தளங்களை தினசரி வாசிப்பவன். எனக்கும் கோபம் வந்தது.

கீழே  இறங்கிப் போனார் பானு.

திரும்ப வரும்போது லாபியில் மட்டும்தான் கிடைக்கும் என்றார்கள் என்றார். நான் சண்டை போட்டுவிட்டு வந்தேன் என்றார். தொடர்பு கொள்ள இணையம் வழி வாட்சாப்பு, முகநூலும் மட்டுமே எங்களுக்கான வசதி அப்போது. சரி விடுங்க என்றேன். நியாயத்த கேக்கணும் என்றார். "பணம் கொடுத்தாச்சு. நியாயம் செத்துப் போச்சு," என்றேன்.  (மலேசிய சமீபத்திய அரசியல் தில்லுமுல்லுக்கு இந்த தத்துவத்தை ஒப்பு நோக்கிப் பார்க்கும் படி தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்).

உறவுகளைக்  கொஞ்ச நேரம் தொடர்பு கொள்ளப் போறோம். அவ்வளவுதானே. ஆனால்  வெளியூரிலிருந்து உடனடியாகத் தொடர்பு கிடைக்காதுதான்.

கீழே போய் உணவருந்திவிட்டு மீண்டும் அறைக்கு வந்தோம். அந்தி நேரத்தில் கடற்கரையில் உள்ளூர் மக்களே நிறைந்திருந்தனர்.வெள்ளையர்கள் கருப்பர்கள் ஜப்பானியர்கள் யாரையும் காணவில்லை. சொங்லாக் முன்னர் அந்நியர் விடுமுறையைக் கழிக்கும் பிரசித்தி பெற்ற இடம்.

கடலோரம் இரண்டொரு பல்கலைக் கழகங்கள், விடுதிகள் பெயர் சம்ஸ்கிருதத்தில் இருந்தன.  அதில் ஒன்று ராஜமங்கலா கடல்கன்னி விடுதி. ராஜா- மங்கலம் என்று பிரித்தால் பொருள் வந்துவிடும். சொங்லாக் பட்டணத்தில் ராஜபாட் பலக்லைக் கழகம் ஒன்றையும் பார்த்தோம். இதனை நான் ராஜ பாட்டை என்று மொழிபெயெர்த்துக் கொண்டேன். அரசர் அரசிகளுக்கு விரிக்கப்படும் மஞ்சள் கார்ப்பெட் நடைப் பாதை. பாட்டை என்று சொல்லை மருவியே இச்சொல் வந்திருக்கக் கூடும். இந்து சாம்ராஜ்யம் கிழக்காசியா முழுதும் கொடி நாட்டிய ஆதாரங்கள், அதன் தொன்ம அகழ்வாய்வுகள் மூலமும், அதன் மொழி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நீட்சி கண்டதன் மூலமும், பௌத்த , இந்து சாம்ராஜ்யங்களின் அடையாளங்களாக இன்றும் காண் முடிகிறது. அங்குள்ள பள்ளிகள் வித்யா என்று முடிகிற சொல் காணக்கிடக்கிறது. உதாரணமாக பூமிபால் வித்யா.... என்று பள்ளிப் பெயரை நாடு முழுவதும் காணலாம். வித்யா என்றால் சம்ஸ்கிருதத்தில் வித்தை. வித்தை பயிலும் இடம் குருகுலம். இப்போது பள்ளி என்று   அதனை மொழியாக்கம் செய்து கொள்ளலாம்.
அந்தி சாயச் சாய உல்லாசப் பயணிகள் கூட்டம் கடற்கரையில் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

கடல் , கெண்டை மீன்கள் புரண்டு புரண்டு துள்ளுவது போன்று பள்பளத்துக் கொண்டே இருந்தது.சூரியன் தனக்கான ராஜ பாட்டையைப் போட்டுகொண்டதுபோல கீழிறங்கிய கதிர்கள் கடலில் ஒரு நேர்க் கோட்டில் பயணித்து கடற்கரையைத் தொட்டிருந்தது.  கடலின் வண்ணத்தை சிவப்பாக்கி தக தகக்க் வைத்திருந்தது கடல்.

தமிழ் நாட்டின் கன்னியா குமரியின் சூர்ய உதயமும், அஸ்தமனமும் மிகவும் ரம்மியமானது.  ஆனால் கடற்கரையில் மனிதக் கழிவுகளை மிதித்துவிடாமல் கவனமாக நடக்க வேண்டும்.

தாய்லாந்துக்குப் போய்வந்த பிறகு, எனக்கும் சம்ஸ்கிருத மொழி வந்துவிடும் போலிருக்கிறது. ஏற்கனவே நான் இந்த மொழியை கதைகளில் உபயோகித்து கண்டனத்துக்கு உள்ளானவன். என் முதல் சிறுகதைத் தொகுப்புக்கு 'நிஜம்' என்று பெயரிட்டுச் சர்ச்சைக்கு உள்ளானேன். என் தனிப்பட்ட கருத்து என்னவென்றால் மொழிக்கலப்பு ஒரு கிண்ணத்தில் உப்பும் இனிப்பும் கலந்ததுபோல கலந்து விட்டது. தனித் தமிழ் மொழியில் கதை கவிதை எழுதுவத்ற்கு மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டால்தான் சாத்தியமாகும். ஆனால் கதை உற்பத்தியாகும் வேகத்துக்கு மொழி தடையாக இருந்தால் புனைவு சிதையலாம். (யாரும் என் வலைப்பூவில் கருத்து கூறுவதில்லை . நான் கிளப்பிய இந்தக் கூற்றுக்காவது கண்டனம் தெரிவித்து என் கருத்துப் பெட்டியை நிறைவு செய்யலாம்.)
கதிரவன் போட்டுக்கொண்ட ராஜ பாட்டைகடற்கரையில் வாடகைக்கு விடப் படும் மோட்டர் சைக்கிள்.
 தொடரும்....


No comments: