Tuesday, July 12, 2016

தாய்லாந்தில் இரண்டு நாட்கள்- பகுதி 5

அன்று இரவு நிறைவான தூக்கம் கிடைத்தது. அதிகக் களைப்புதான் காரணம். தூக்கம் வராதவர்களுக்குப் பல்வேறு ஆலோசனைகள் சொல்லப்படுகின்றன. என் பங்குக்கு நானும் சொல்லிவைக்கிறேன். சாயங்கால நேரத்தில் உடல் களைக்க பயிற்சிகள் மேற்கொள்ளுங்கள். உடல் வலிக்க வலிக்க. அல்லது குனிந்து நிமிர்ந்து தோட்ட வேலை செய்யுங்கள். நன்றாகச் சாப்பிடுங்கள் பயிற்சி முடிந்து. இனிப்பு நீர் உள்ளவரகள் குறைந்த கேலரி உணவை அதிகம் சாப்பிடலாம். தினமும் சரியான நேரத்தில்உறங்கப் போவது மிக முக்கியம். உறங்கப்போகும் கால வரையறையைச் தள்ளிப்போடாதீர்கள். நாளாக நாளாக  11 மணி என்பது  பின்னரவு இரண்டு மூன்றுக்குத்தான் தூக்கம் வரும். உலகமே தூங்கிவிடும் நாம் மட்டுமே படுக்கையில் புரண்டுகொண்டிருப்போம். அதற்காக தூங்கும் உலகத்தைப் பார்த்து பொறாமை படாதீர்கள். தூக்கம் துக்கமாகிவிடும். நம்முடைய தூக்கம் கெடுவது கால அட்டவணையைக் கறாராகப்  பின்பற்றாததுதான் காரணம். இரண்டாவது, புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். கண்கள் தூக்கத்தை வேண்டி மல்லுக்கு நிற்கும் வரை நீயா நானா என்று சவாலுக்கு நில்லுங்கள். படுக்கை விளக்கு கைக்கெட்டிய தூரத்தில்தான் இருக்க வேண்டும். மூன்றாவது மெல்லிய இசையைக் கேளுங்கள். இந்த ஆலோசனைகள் 60 வயதைக் கடந்தவர்களுக்கு. அந்த வயதை கண்டிப்பாக எட்டிப்பிடிக்கப் போகிறவர்களுக்கும்.

மறுநாள் காலை என்னவெல்லாம் போய்ப் பார்க்கலாம் என்று லோபி பணிப்பெண்ணிடம் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் முக்கியமாச் சொன்ன இடம் தலாய் நோயிலுள்ள  வலசைப் பறவை சங்கமிக்கும் இடம். தலாய் நோய் கிட்டதட்ட 120 கிலோமீட்டர் தூரம். நெடுக்க  ஏரி. நீண்ட பாலங்கள். எங்களிடம் மோபைல் டாத்தா இல்லாததால் வேஸ் போட்டு இடத்தைத் தேட முடியவில்லை புற நகர்ப்பகுதியைத் தாண்டி கிராமப்புறத்துக்கு சாலை வழிகாட்டிப் பலகைகள் காட்டிக்கொண்டிருந்தன. முக்கால் வாசிப் பலகைகள் தாய் மொழியில் எழுதப் பட்டிருந்தன. சாலை பிரியும் முக்கிய  இடங்களில் மட்டுமே ஆங்கிலம்.

ஒரு சாலையில் தவறாக நுழைந்து, திரும்பி வந்து மீண்டும் தலாய் நோய் பதையைப் பிடித்தோம். ஒரு ஏரிப்பகுதியைப் படம் எடுக்க நிறுத்தினோம். சொங்க்லாக் முழுதும் ஒரே ஏரிதான். கடல்போல  சொங்க்லாக் நகரை சுற்றி அகன்று கிடக்கிறது. எத்தனை ஆயிரம் கில்லோமிட்டர் என்று தெரியவில்லை. மிக அகலம். பினாங்கு பாலத்தைப்போல இரண்டு பாலங்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. டோல் கிடையாது மக்களே. கோடிக்கணக்கான  டோல் வசூலிப்பு அடுத்த தேர்தலில்கோல்மால் செய்ய உதவும் என்ற 'தூர நோக்கு'  ஆளுங்கட்சிக்குக் கிடையாது.


ஒரு ஏரிக்கரையில் புத்தர் கோயில் இருந்தது. ரசிக்கும்  படியான காட்சி. இறங்கி படம் எடுக்கும் அளவுக்கே அதன் ரசனை இருந்தது. பெரிதாக ஒன்றும் இல்லை. பினாங்கு சயன் புத்தர் சிலைபோல பத்து மடங்கு பெரியது. கோயில் வளாகத்தின் திறந்த வெளியில் சயனித்துக் கிடந்தார். தாய் லாந்தில் பௌத்த சமய நெறிகள் முறையாகப் பின்பற்றப் படுகிறது. அங்குள்ள மக்களோடு பழகிப் பார்த்தாலே அந்த மென்மையும் தன்மையும் புலனாகிறது. தன் நாற்காலியில் வஜ்ரம் தடவி உட்கார்ந்துகொள்ள சமயத்தை ஒரு போராயுதமாகப் பயன் படுத்தும் கீழ்மை மனிதர்களை அங்கே பார்க்க முடியாது. மக்களை அச்சுறுத்தும் வகையில் சமயத்தை காலிகள் வைத்து மிரட்டுவதுமில்லை.

அங்கே ஒரு ஐஸ்கிரம் சாப்பிட்டோம். 25 பாட்தான். இங்கே அதன் விலை 5 ரிங்கிட் குறையாமல் இருக்கலாம்.

மீண்டும் காரை எடுத்து தலாய் நோய்க்குப் பயணமானோம். சிலரிடம் விசாரிக்க வேண்டியிருந்தது. ஆங்கிலம் அறுத்துப் போட்டாலும் வராது, பட்டணப் புறங்களிலும். பானு சொன்னார் இங்கே ஆங்கிலம் சொல்லிக் கொடுத்தால் ரத்த வாந்தி எடுக்க நேரிடும் என்று. நான் மலேசிய இடைநிலைப் பள்ளியில் கிட்டதட்ட எடுத்திருக்கிறேன். குறிப்பாக கிராமப் பகுதிகளில்.

தலாய் நோய்க்கு எப்படியோ வந்தடைந்தோம். அங்கே தாய் மன்னர் பிறந்தநாள் நினைவாக ஒரு புதிய சாலை அமைத்திருந்தார்கள். வயல் வெளியையும் ஏரியையும் கடந்து செல்லும் ஒரு அழகிய சாலை. வலசைப் பறவைகள் சாலையின் இருபுறத்திலும் பார்க்க முடிந்தது. இன்னும் 30 கிலோ மீட்டர் போனால் அங்கே பறவைகளைப் பார்க்கலாம் என்று சொன்னார்கள். கொஞ்ச தூரம் சென்று திரும்பிவிட்டோம். 30 தா? 300ஆ? என்ற குழப்பம்.பசி வயிற்றில் தாளமிடத் துவங்கியது. நாங்கள் வரும் வழியில் ஒரு சிறு பட்டணத்தைக் கடந்து வந்தோம் அங்கே பசி போக்கலாம் என்று திட்டம். திரும்பி விட்டோம்.

மீண்டும் பாதையைத் தவற விட்டோம். தலாய்  நோயாயைத் தேடித் த்ஏடி தலை நோய்தான் எடுத்தது.
ஒரு கடையில் இறங்கிக் கேட்டோம். ஒரு அழகிய பெண் தெளிவான ஆங்கிலத்தில் பேசினாள் திருஷ்டிப் பரிகாரமாய். எப்படி உனக்கு மட்டும் ஆங்கிலம் என்று கேட்டேன். நான் . புக்கெட்டில் வேலை செய்தேன் என்று சொன்னாள். அப்போ சரி.

தலாய் நோயில் ஓரிரவு தங்கி வலசைப் பறவைகளைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் பார்த்த நிறைவு கிடைக்கும் என்றாள். அதற்கு முன்னமேயே விடுதியைப் புக் செய்திருக்க வேண்டுமாம்.மீண்டும் விடுதி நோக்கிப் பயணம்.


நாளை முடியும்.....(தெரியல முடியுமாமுடியாதான்னு)


No comments: