இருபதுக்கும் எழுபதுக்கும் வெகுதூரம். ஒரு மிகப்பெரிய தலைமுறை இடைவெளி உண்டாகும் வயது. இந்த இடைவெளியை இல்லாமல் ஆக்குவது , இலக்கியப் பிணைப்பு மட்டுமே. நான் என்ன சொல்ல வருகிறேன் என்று இந்நேரம் உங்களுக்குப் புரிந்திருந்தால் இலக்கியத்தில் உங்களுக்குப் பரிட்சயம் இருந்திருக்கும். அப்படி இல்லையென்றால்... தலையைக் கொஞ்சம் சொரிந்துக்கொள்ளுங்கள்.இது ஒரு பயணக் கட்டுரை என்பதை மேலேயே குறிப்பிட்டுவிட்டேன். எனவே, இருபதும் எழுபதும் இணைந்து போகும் பயணமிது. கடந்த மார்ச் மாத முடிவிலிருந்து எங்கேயும் பயணம் செய்யவில்லை. பாதங்கள் அரித்துக் கொண்டே இருந்தன. எங்காவது போக வேண்டும். கொஞ்சம் வீட்டுச் சூழலிலிருந்து வேறிடம் தேடிப் போகவேண்டும் என்று உள்மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. பயணம் நம்மைச் சுத்திகரிக்கும். வாழ்வனுபவச்சேகரம் அதிகரிக்கும். ஆன்மா புனிதப்படும். வேறு மனிதர்கள், வேறு இடம், புதிய காற்று, புதிய சூழல், இவற்றை அனுபவிக்க வேண்டும். வரலாற்றுப்பூர்வமான இடங்களை இன்னும் ஆழமாக அறிந்துகொள்ள வேண்டும். ஆனால், யாராவதொருவரின் துணையோடுதான் போகவேண்டும் என்ற நிர்பந்தம் எனக்கு. தனியாகப் பயணம் செய்து அனுபவமில்லை. என் மனைவியை அழைத்தால் வரமாட்டாள். அவளது திசை வேறு எனதுத் திசை வேறு. திசையென்பதை நீங்கள் விருப்பம் என்றே மொழிபெயர்த்துக் கொள்ளலாம். சேலைக் கடையில் அவளோடு நான் நின்றால், எனக்கு அரை நொடியில் கால் கடுக்கெடுத்துவிடும். புத்தகக் கடையில் என்னோடு அவள் நின்றால், அவளுக்குக் கால் கடுத்துவிடும். புது இடம் போய் இருவருக்கும் ஏன் கால் கடுக்க வேண்டும். தமிழ்நாட்டில்தான் தமிழ்ப் புத்தகங்கள் வாங்க உசிதமான இடம் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே, அவளோடு செல்வது உசிதமல்ல. சதா சோபாவும் மடிக்கணிணியுமாய் இருப்பது சல்லையை உண்டாக்கியது. அதனால், இந்தச் சூழலை ஒரு வெளியூர் பயணம் சமன் செய்துவிடும். ஆனால், மனைவியிடம் அனுமதி வாங்குவது அவ்வளவு எளிதில் நடந்துவிடாது. இந்த வயதில் நான், தனியாகப் போவதைக் கடுமையாக எதிர்ப்பவள். எனவே, ஒரு சந்தர்ப்பம் தேடிக் கொண்டிருந்தேன். அது, ஹரியின் மூலம் வாய்க்குமென்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் வீட்டிற்கு அடிக்கடி என்னைப் பார்க்க வருவார். பயணத்திட்டம் என் மனதில் ஓடிக்கொண்டே இருந்த தருணமது. நானும் மனைவியும் ஹரியும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, தான் தமிழ் நாடு செல்லவிருப்பதாக ஹரி சொன்னார். நானும் வருவதாகச் சொன்னேன். அவள் அதுவரை விளையாட்டாகத்தான் பேசிக் கொள்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கக் கூடும். இது சீரியஸாக முடியும் என்று முன்னமே அறிந்திருந்தால், உடனுக்குடன் முற்றுப்புள்ளியை வைத்துவிடுவாள். நான் ஹரி உடனிருந்தபோதுதான் வருகிறேன் என்று சொன்னவுடன் அவள் தடையேதும் சொல்லாமல் அனுமதித்துவிட்டாள். அதற்குப் பின், பயணப்பணிகள் அனைத்தும் ஹரியால் துரிதப்படுத்தப்பட்டது. 22 அதிகாலையில் பயணம் என்று முடிவாகியது.
ஆனால், 20 -ஆம் திகதி மணி 12 நண்பகல் அளவில், நான் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் விருந்துபசரிப்பில் கலந்துகொண்டிருந்த தருணத்தில், ஹரியின் அழைப்புத் தகவல் என்னை விதிர்க்கவைத்தது. சார், நமதுக் கடப்பிதழ் , பயணம் முடியும் இறுதி நாளிலிருந்து குறைந்த பட்சம் ஆறு மாதத்திற்கு உயிர்ப்போடு இருக்க வேண்டும். நமதுக் கடப்பிதழ் 3 மாதத்தில் காலாவதியாகப் போகிறது”. என்று சொன்னார். அன்று வெள்ளிக்கிழமை, சுங்கைப்பட்டாணியில் விடுமுறை, பினாங்கில்தான் எடுக்க இயலும். அதுவும், எஞ்சியிருக்கும் அரைநாளில் எப்படி சாத்தியப்படும்? கடப்பிதழ் காலாவதியானால், பயணம் முறிந்துவிடும் என்ற பதற்றம் மேலெழவே, வாயில் வைத்தச் சோற்றைத் தட்டில் வைத்துவிட்டுக் காரை எடுத்துக் கொண்டு செபராங் ஜாயா நோக்கிக் கிளம்ப வேண்டியதாயிற்று. வழியில் 2 சிவப்பு சமிக்ஞை விளக்கையும் பொருட்படுத்தாது கடக்க வேண்டிய வேகத்தில் இருந்தேன். நேரத்தில் போய் சேர வேண்டும் என்பதற்காக.
மீண்டும் ஹரி அழைத்தார்.
“சார், கார ஓரமா நிறுத்திட்டு, உங்க கடப்பிதழை எடுத்துப் பாருங்க....”
“ஏன் ஹரி?”
“நமதுக் கடப்பிதழ் 2021-இல்தான் காலாவதியாகிறது சார்...”
நானும் திறந்து பார்த்தேன். 2021-இல்தான் முடிகிறது.
நிகழும்...
Comments