4.ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கியவிழாவும் கரிகாற்சோழன் விருதும்.
நான் கலந்துகொள்ளும் உரையாடல் நிகழ்ச்சி மாலை 5.00 மணிக்கு பினாங்கில் நடக்கவிருந்தது. இது எனக்கு முதல் அனைத்துலக மேடை என்பதால் சற்றே பதட்டமாகத்தான் இருந்தது. மேடை ஏறுபவர் பெரும்பாலானவர்க்கு பதட்ட உணர்வு தவிர்க்க முடியாதது. எத்தனையோ மேடையைக் கண்டாயிற்று ஆனால் இந்தப் பதட்ட உணர்வுமட்டும் கழட்டிக்கொள்வதில்லை. மேடை ஏறியவுடன் அது தானாகவே கழண்டு கொள்கிறது. அறிவுப்பூர்வமான நிகழ்ச்சி என்பதாலும் அறிவார்ந்து பேசவேண்டும் என்பதாலும், அதுவும் அறிவார்ந்த சூழலில் பேசவேண்டும் என்பதால் உண்டாகும் உள்ளுணர்வு அது. அந்தப் படபடப்பு ஜெயமோகன் போன்ற இமையங்களுக்கே உண்டாகிறதென்றால் நான் எம்மாத்திரம்? உள்ளபடியே நிஜ வாழ்க்கையில் அனுபவிப்பதைவிட கற்பனையில்தான் நிறைய உணர்ச்சிக்கொந்தளிப்பை அனுபவிக்கிறோம்..
இந்நிகழ்ச்சியில் சிங்கையின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் கனகலாதாவும் மலேசியாவின் நண்பர் அ. பாண்டியனும் பேசவிருக்கிறார்கள்.மலேசிய தீவிர இலக்கிய உலகின் தன்னை அழுத்தமாக நிறுவிக்கொள்ளும் வகையில் படைப்புகளைத் தந்துகொண்டிருக்கும் அர்வின் குமார் நிகழ்ச்சியை நடத்துனராக நியமிக்கப்பட்டிருந்தார்.இதில் என்ன விஷேசம் என்றால் நாங்கள் நால்வருமே வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அந்தந்தக் காலக்கட்ட இலக்கிய வளர்சிதை மாற்றங்களை /நடவடிக்கைகளை சொல்வதில் சுவாரஸ்யம் மிகும் அல்லவா?
நான் நேராக பினாங்குக்கு செல்ல முடியாது. காலை 9.00 மணிக்கு சிங்கை பி.கிருஷ்ணன் அரங்கு வித்யாரண்யத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஜோர்ஜ்டௌன் இலக்கிய விழா நிகழ்ச்சிகளில் மைய அரங்கம் இது. வல்லினம் இதற்காகத் தீவிரமாக உழைத்தது நிகழ்ச்சி நடக்கும் போது நிரூபனமானது. அவர் மொழிபெயர்த்த ஷேக்ஹ்க்ஸ்பியர் நூல்கள் விற்பனைக்கு தயார்செய்யப்பட்டிருந்தது அதில் முக்கியமானது. அபாரமான உழைப்பு அது.
வல்லின நிறுவனர் ம. நவீனின் உற்சாகமான இலக்கிய முன்னெடுப்பைப் பல ஆண்டு காலமாக நான் பார்த்து வருகிறேன். நிகழ்ச்சிகளை நேர்த்தியாக ஒருங்கு செய்வதிலும், அவை சரியாக நடக்க ஓடியாடி முழு கவனம் செலுத்துவதையும் நான் தூர இருந்து அவதானித்து வருகிறேன். தன்னையும் மேம்படுத்திக்கொண்டு தன்னிடம் வரும் இளவல்கள்களையும் இலக்கியத்தில் தீவிரமாக ஈடுபடச்செய்வதில் அவர் காட்டும் அக்கறையை நான் வியந்து நோக்கியிருக்கிறேன். பொதுவாகவே மலேசிய படைப்பிலக்கியத்தின் தரம் நோக்கி நகர்த்துவதில் மிகுந்த அக்கறையையும் தொய்வில்லாமல் காட்டுபவர். வல்லினம் தோற்றச்செயல்பாட்டை ஒரு பெருநிகழ்வு என்று முன்பு ஒருநாள் ஜெ சொன்னது நிதர்சனமானது.
பெரியவர் பி. கிருஷ்ணனைக் கொண்டாடும் நிகச்சியில் அவரும் உடன் இருப்பது அதனைவிடவும் அவசியம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக 91 வயதானவரை கடல்கடந்து கொண்டுவருவது எளிதான ஒன்று அல்ல! லதா வந்தால் நான் வருவேன் என்ற உறுதியோடு அவர் வந்திருந்தார். கலை இயல்பாகவே ஒரு படைப்பாளனை உற்சாகம் குறையாமல் வைத்திருக்கும் என்பதற்கு வாழும் உதாரணம் கிருஷ்ணன். உடற் சோர்ந்த நிலையிலும் உள்ளம் வாடாதிருந்தது அவருக்கு. கலை தன் ஆன்மாவை படைப்பாளினிடம் முழுமையாகவே ஒப்படைத்துவிடுகிறது போலும்.
நான் சற்று தாமதமாகத்தான் வித்யாரண்யத்திற்குப் போனேன். எனக்கு சியாடிக்கா என்ற முதெலும்பு பிறழ் நோயுண்டு. பல இரவுகளில் என்னோடு பொருதியவாறிருக்கும். அதற்கு சிகிழ்ச்சை மருத்துவம் இல்லையென்பதால் நான் பொருதித்தான் ஜெயிக்கவேண்டியுள்ளது. அது ஜெயித்துவிடுகிறது என்று சொல்வது ஒரு போராளியின் தன்னம்பிக்கைக்கு இழுக்கல்லவா?
இரவெல்லாம்
உன் நினைவுகள் /
கொசுக்கள்/
என்ற அப்துல் ரஹ்மான் ஹைக்கூவை இங்கே நான் நினைவுகூர்வது என் இரவுச் சமரை விவரிக்கவே.
ஜி எஸ் எஸ் வி நவீன், பி.கிருஷ்ணன்,அருண்மகிழ்நன் |
சிங்கப்பூர் பி.கிருஷ்ணன் அரங்கு மிக நேர்த்தியாக ஒருங்கு செய்யப்பட்டிருந்தது. மண்டபம் நிறைந்து உயிர்ப்போடு இருந்தது. இந்த ஜோர்ஜ்டௌன் இலக்கிய கொண்டாட்டத்தில் மிக முக்கியமான நிகழ்ச்சி இது. பி. கிருஷ்ணன் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியத்தில் இயங்கிவருபவர். இங்கே கி ராஜநாராயனன் நினைவுக்கு வருகிறார். அவருக்கு ஈடான உழைப்பை நல்கியவர். எண்ணற்ற நூல்களை கொடுத்தவர். அடுத்த ஆண்டும் இன்னொரு நூலைக் கொடுக்கும் கனவை ஏந்திக்கொண்டிருப்பவர் அந்தக் கனவு சாத்தியமாகும் நம்பிக்கை அவர் பேச்சில் இருந்தது எத்துணை உவப்பானது!
கணேஷ் பாபு |
அ. பாண்டியன், சிங்கை அழகுநிலா, லதா, கணேஷ் பாபு, அர்வின் குமார்,ஜிஸ் எஸ்வி நவீன், அருண்மொழி நங்கை ஆகியோர் பெரியவர் கிருஷ்ணனின் பல்வேறு படைப்புகள் சார்ந்து பேசினர். முனைவர் இளம்பூரணன் நிகழ்ச்சியை ஒரு டன்ங்கு செய்தார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் சபையில் வைக்கப்பட்டது. ஒன்றில் இருந்தது பிறிதொன்றில் மீள்பார்வை செய்யப்படவில்லை என்பதே அதன் சிறப்பாக அமைந்தது.
பெரியவர் கிருஷ்ணன் ஏற்புரையாற்றும்போது குரலில் தெளிவும் உச்சரிப்பில் தூய்மையும் இருந்தது. அவர் கொஞ்சம் மூச்சு சுவாசித்துப் பேசியிருக்கவேண்டும். ஒரே மூச்சில் பேசுவதுபோல இருந்தது. அதனால் சில நிமிடங்களிலேயே அசந்து போனார். அவரைத் தாங்கி வந்து இருக்கையில் அமரவைக்க வேண்டியதாயிற்று. அவரின் உற்சாகத்திற்கு முதுமை பெரும் சவாலாக இருந்திருக்கிறது.
நிகழ்ச்சி முடிந்து நான் மணி ஒன்றரைக்கு அங்கிருந்து பினாங்கு நிகழ்ச்சி நடக்கும் விடுதிக்குக் கிளம்பிவிட்டேன். விருந்தினர்களை தங்கள் காரில் ஏற்றிவர நடந்த போட்டியில் நான் பின்வாங்கிவிட்டேன். விருந்தோம்பலில் நாம் எப்போதுமே சுணங்கியதில்லை அல்லவா?
இணையுங்கள்....
Comments