Skip to main content

ஹோர்ஜ்டவுன் ஆனைத்துல இலக்கிய விழாவும் கரிகாற்சோழன் விருதும்.

6. ஜோர்ஜ்டவுன் ஆனைத்துல இலக்கிய விழாவும் கரிகாற்சோழன் விருதும்.



    நான் நீண்ட படைப்பிலக்கியம் எழுதுவதில் விருப்பம் இல்லாதவன். என் விருப்பம் அதுவாக இருந்தாலும், நான் ஒன்றைக் கூர்ந்து கவனிக்கிறேன் தொடங்கிவிட்டால் படைப்பு நம்மைத் தொடர்ந்து எழுத அறைகூவல் விடுத்துக்கொண்டே இருக்கும். அதுதான் கலையின் மகத்துவம்.தொடங்கியவுடனே நம் சிந்தனை முன்னோக்கிப் பாய்ந்துகொண்டே இருக்கிறது.இவ்வளவு அனுபவங்களா என்றே நாம் பிரமிக்கிறோம். நாம் கடந்துவந்த உப்புக்குதவாத செய்லகள்கூட அழகியலால் கவித்துவத்தால் அவை வாசிக்கத் தகுந்த சுவாரஸ்யத்தை தனக்குள்ளே புதைத்துவைத்துக்கொண்டு எழுதும்போது இன்னும் சீற்றத்தோடு வெளிப்பட்டுவிடுகின்றன. இயல்பாகவே கடிவாளம் இழுக்கப்பட்டவுடன் முன்னோக்கிப் பாயும் மனித சிந்தனை, படைப்பாற்றலின் வெளிப்பாடு, அதற்கு ஈடாக இயங்கும் மொழி நீண்ட படைப்புக்கு வழி வகுத்துவிடுகிறது. எனக்கு நாவல் எழுத வராது என்று என் நண்பர் சொன்னவுடன் நான் இதைத்தான் சொன்னேன். முதல் அத்தியாயத்தை எழுதிவிடுங்கள் பின்னர் அதுவாகவே இழுத்துவைத்துக்கொண்டு முன்னோக்கி செல்ல உந்தும் என்று. கலை மனிதனுக்குக் கொடுப்பது பரவசம் மட்டுமல்ல தன்னூக்கமும்ந்தான்.


விக்கோரியா கார்டன் விடுதி அறையின் குளிர்மை தூய்மை தனிமை என்னைக் கலைப்பு தீரத் தூங்கி எழ வைத்திருந்தது. விடுதி  வழங்கப்படும் காலை உணவு இந்நேரம் இருக்குமா/ கழுவி மூடியிருப்பார்களா என்ற சந்தேகம் வந்துவிட்டது. நல்ல வேளையாக நான் கடைசி ஆளாக போய் நின்றேன். நாசி லெமாவுக்கான கறி முடிந்து அதனை மௌசில்லாமல் ஆக்கிவிட்டிருந்தது. ரெண்டு ரொட்டித் துண்டை விழுங்கிவிட்டு யு ஏ பி கட்டட மேல் மாடிக்கு ஓடினேன். அந்த வளாகம் பட்டணத்துக்கே உரிய பரபரப்பு குறைந்திருந்தது. அது உயர்தர மக்கள் புழங்கும் இடம். அந்த வர்க்க மக்கள் எண்ணிக்கையில் குறைவானவர்கள்தானே. ஆனாலும் எல்லாத் துறையைலும் ஆக்ரமிப்பும் அதிகாரமும் கொண்டவர்கள் அந்தச் சிறுபான்மையினர்தான். 

நிகழ்ச்சிக்கு வருகிறேன், ஜெயமோகனைப் பார்க்கவேண்டும் என்று ஆவலுடன் இருந்தார். அவருடைய அறம், புறப்பாடு நூல்களை வாசித்துவிட்டு அவரோடு ஒரு படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். செபெஸ்டியனின் மனைவி வெளியே நின்றிருந்தார். செபெஸ்டியன் காரை நிறுத்திவிட்டு வருவதாகச் சொன்னார். நான் நிகழ்ச்சி நடக்கும் இடத்தைக் காட்டிவிட்டு படிகளில் ஏறி ஓடினேன்.


நவீனும் லதாவும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தனர். ஜெயமோகன் ஆங்கிலத்தில் பதிலுரைத்துக்கொண்டிருந்தார். எனக்கு ஆங்கிலம் வராது என்றே ஒருமுறை தன் வலைத்தளத்தில் எழுதியவர் இப்படி பொளந்து கட்டுகிறாரே என்று வியந்தேன், நிறைய அனைத்துல இலக்கிய அரங்கில் கலந்து கொண்டமையால் இந்த ஆங்கிலம் பேசும் ஆற்றல் கைகூடிவிட்டது அவருக்கு. அந்த அரங்கு பிற மொழி பேசும் வாசகர்களாலும் நிறைந்திருந்ததால் ஆங்கலத்திலும் பேச வேண்டியதாயிற்று.

அவர் சொன்ன ஒரு சவாலான வாக்கியம் 'நான் பிராண்ஸ் காப்காபோல வரவேண்டும்; என்பதே. சவடால் பேசும் முகநூல் போராளிகளுக்கு இச்செய்தி போய்ச் சேரவில்லை போலும். என்னைப் பொருத்தவரை அவர் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பரவலான வாசிப்புக்குப் போயிருந்தால் இந்நேரம் அவர் அனைத்துலக ஆளுமைகளில் யாரோவாகவோ இருந்திருப்பார். தமிழுக்கு உண்டான சோதனை மொழிபெயர்ப்பு இன்னும் சரியாகக் கைகூடவில்லை. சமீபத்தில் ஆங்கில மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் வெள்ளை யானை நாவல் ,  வந்த வேகத்திலெயே அமெரிக்காவில் அனைத்துலக புத்தகப் பரிசை வென்றிருக்கிறது.https://www.jeyamohan.in/175931/

சுதந்திரன் ஜெயமோகன்

அவருடைய நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நான் விடுதிக்கு ஓடினேன்.இரண்டுக்கெல்லாம் பினாங்கு விமான நிலையத்தில் இருக்கவேண்டும். என் மகனோடு தொடர்புகொண்டு என்னை விமான நிலையத்தில் இறக்கிவிடுமாறு முன்னமேயே சொல்லியிருந்தேன். நான் திருச்சிக்குப் போவதால் 2 மணி நேரத்துக்கு முன்னாலேயெ பினாங்கு விமான நிலையத்தில் இருந்தாக வேண்டும். 


இடையில்' டச் அண்ட் கோ' கார்டில் பணம் முடிந்துவிட்டமையால் வெளியேறும் வாசல் தடுப்பு திறக்காமல் முரண்டு பண்ணியது.காரை ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு விடுதியின் வரவேற்பறைக்கு ஓடினேன். உங்களுக்கு பார்க்கிங் கூட இலவசம் என்று என் அட்டையிலிருந்து கழிக்கப்பட்ட தொகையை மீண்டும் நிரப்பிக் கொடுத்தாள் வரவேற்பு அலுவலர். நான் அது தெரியாமல் விழித்திருக்கிறேன். ஜோர்ஜ் டௌன் இலக்கிய குழு இப்படி எந்தக் குறையில்லாமல் படைப்பாளர்களைக் கவனித்துக்கொண்டது. 

ஆனால் தமிழைப் பொறுத்தவரை ஒரு நல்ல படைப்பாளனை முடிந்தமட்டும் மூடியே வைக்கப்பார்க்கிறது. ஒரு அரசியல் வாதிக்குத் தரும் போலி விளம்பரத்தை போலி கௌரவத்தைக்கூட படைப்பாளனுக்குக் கொடுப்பதில்லை. இது சமூகச் சாபக்கேடு. படைப்பாளனேதான் தன் படைப்பு முயற்சியால் சமூகத்தைத் திரும்பிப்பார்க்க வைக்க வேண்டும். ஒருவகையில் இதுவும் நல்லதுதான் . தொடர்ந்து படைப்புச் செயல்பாட்டில் அவன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டே இருக்க இதுவும் ஒரு நல்ல யுக்திதான்.

விமான நிலையத்திலிருந்து கவிஞர் ஏ எஸ் ப்ராண்சிஸை தொடர்புகொண்டு திருச்சியில் தங்கும் வசதி பற்றி உறுதிசெய்துகொண்டேன். பிராண்சிஸ் 2018ஆம் ஆண்டுக்கான கரிகாற்சோழன் விருதுபெற முன்னமேயே போய்விட்டிருந்தார். கோவிட் அசுரப்பரவல் காரணமாக விருது நிகழ்ச்சிகள் தள்ளிப்போடப்பட்டு  28.11.22ல்தான் சாத்தியமானது.

பினாங்கிலிருந்து கோலால்ம்பூர் போய் அங்கிருந்து திருச்சிக்கு இரவு 8.15 மீண்டும் பயணம்.திருச்சியை இரவு 9.45 அடைந்ததும் ஒரு டேக்சியில் விடுதிக்குப் போவதாய்த் திட்டம். மறுநாள் அங்கிருந்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்குச் ஒன்றாய்ச் செல்லலாம் என்று முடிவெடுக்கப்பட்டிருந்தது.. அதற்கிடையில் மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் சைமன் அதே ஓட்டலுக்கு சற்றுத் தாமத்தித்து வந்த சேர்வதாக பிராண்சிஸ் சொன்னார். அவரோடு அன்பழகன் என்ற எழுத்தாளரும் ( 2019 ஆண்டுக்கான கரிகாற்சோழன் விருது பெறுபவர்) வருவதாகச் சொன்னார். எனவே நால்வரும் ஒரு வாடகைக்காரில் தஞ்சைக்குப் போய்விடலாம் என்று சொன்னார் பிராண்சிஸ். 

350 ரூபாய்க்கு ஒரு டேகிசியைப் பிடித்து, நான் பிரான்ஸிஸ் தங்கும் அறைக்குப் போனபோது அவர் போர்வைக்குள் இருந்தார்.கதவைத் திறந்தே வைத்திருந்தார். ஆனால் என் நுழைவு அவரை எழுப்பிவிட்டிருந்தது.

விடுதியின் விலை மிக அதிகம். அதற்குள் சைமனும் அன்பழகனும் வந்து சேர்ந்திருந்தனர். சைமன் பைகளை வைத்துவிட்டு உடனே இறங்கிப் போனார். 'இங்க வந்தா பால் சாப்பிடனும்ல ' என்றார். என்ன பால் என்று நான் விழிக்க..வாங்க என்றார்.


விடுதியின் கீழே சாலை பரபரப்பாக இருந்தது. இரவில் விற்கும் பாதாம் பாலுக்கு வரிசை கட்டி நின்றார்கள். ஆவி பிரியும் பால் (தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம் பாலுக்குக்கூட ஆவி பிரியுமா என்று) .  விற்கப்பட்டுக்கொண்டிருந்தது. பலவகை அங்காடிக் கடைகளும் இருந்தன. ஆனால் பாதாம் கடையில்தான் கூட்டம் மொய்த்துக்கொண்டிருந்தது. எனக்கு ஒந்று வாங்கி வந்தார்கள். பாலில் இனிப்பு அதிகமாக இருக்கும் என்பதால் வேண்டாம் என்றேன். ஆனால் நா தட்டிக்கொண்டே இருந்தது.


இணையுங்கள்....





Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த