Skip to main content

ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கியவிழாவும் கரிகாற்சோழன் விருதும்.


5.ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கியவிழாவும் கரிகாற்சோழன் விருதும்.



சுங்கை கோப் பிரம்ம வித்யாரண்யத்திலிருந்து  காரை ஓட்டிக்கொண்டு மலையிலிருந்து கீழிறங்குவது ஓர் இனிமையான அனுபவம்.  பச்சை பூத்து மலர்ந்து நிலைத்த நிலம். வானத்தில் நீலத்தை மறைத்து தன் நிறத்தையே முன்னிலைப்படுத்துக்கொள்ளும் சுயநலம். செம்பனைக் காட்டின் நடுவே கடல் நாகம்போல வளைந்து  நெளிந்து கீழிறங்கும் தார் சாலை. முன்னர் மண்சாலை.வழி நெடுக்க சாலையைத் தொட்டு வழியனுப்பும் செம்பனை இலைத் தோரணம். செம்பனைப் பழங்கள் ரத்தச் சிவப்பில் குலையாய்  குலையாய் தாய்மை பொங்கி நிற்கும். அடி மண்ணிலிருந்து கிளம்பி மட்டைகளுக்கிடையே குடிபெயர்ந்துவிட்ட கரிய வைரக்கல் என பழுக்கக் காத்திருக்கும் செம்பனை குலைகள்.  செம்பனைக் காட்டுக்குள் நுழைந்தாலே குளிர்மை அப்பும். நான் செம்பனை எஸ்டேட்டில் வேலை செய்தவன், எனவே பார்த்தாலே பசுமை நிறைந்துவிடும். இந்தப் பசுமைப் பயணம் மேலும் சற்று நேரம் நீடிக்கக்கூடாதா என்று மனம் ஏங்கும்.

நான் நேராக ஜோர்ஜ்டௌன் விக்டோரியா கார்டன் விடுதியை அடைந்தேன்.  பினாங்கு அனைத்துலக இலக்கிய அமைப்பு கொடுத்த வசதியை அந்த விடுதியில் நவம்பர் 23/24/25/26/27 தேதிகளில் பயன்படுத்திக்கொள்ள முடியும். நான் 24 இரவு தங்கிவிட்டு கிளம்பிவிட்டேன். 26ல்தான் மீண்டும் வருவேன் என்று சொல்லிவிட்டுத்தான் சாவியை ஒப்படைத்தேன். நான் மீண்டும் போனபோது என்னைப்பார்த்துமே என் அறைச் சாவியைக் கொடுத்துவிட்டார் அலுவலர்.

மீண்டும் ஒரு குளியல் போட்டு 4.45 வாக்கில் நிகழ்ச்சி நடக்கும் யு ஏ பி கட்டடத்தின் நிகழ்ச்சி மண்டபத்துக்குப் போய்விட்டேன். இந்த இடத்துக்கு விக்டோரியா கார்டனிலிருந்து 3 நிமிடம் நடந்தால் சேர்ந்துவிடலாம். எல்லாமே பக்கம் பக்கம்தான். ஏற்பாட்டாளர்கள் படைப்பாளர்களுக்கு எந்த வகைச் சிரமத்தையும் கொடுக்கக்கூடாது என்று பொறுப்பு மிக்க ஏற்பாடு. 


என் இளவல் டாகடர் ஹரி 25ம் தேதி இளைய எழுத்தாளர்களுக்கான ஒரு கலந்துரையாடலில் கலந்து உரையாடியதும் இதே இடத்தில்தான். நான் 25ம் தேதி முழுதும் பிரம்ம வித்யாரண்யத்தில் இருந்ததால் ஹரியின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை.

டாக்டர் ஹரி

அந்தக் கட்டடத்துக்கு ஒட்டிய அறையில் உலகம் முழுதும் இருந்து வந்த எழுத்தாளர்களின் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. எல்லாம் ஆங்கில நூல்கள். அங்கு விற்கப்பட்ட நூல்களில் சிங்கை லதாவின் நூல்கள் மட்டுமே தமிழ் நூல்கள். தெரிந்திருந்தால் என் கையறுவைக் கொண்டுபோயிருப்பேன். விற்கிறதோ இல்லையோ அனைத்துலக எழுத்தாளர் கண்கள் அவற்றைத் தொட்டுவிட்டாவது சென்றிருக்கும். தமிழர்கள் தமிழ் மொழி புனைவுகளை வாசிப்பவர்கள் அரிதினும் அரிதானவர்கள். அவர்கள் அறிவியல் தொழில்நுட்பக் கருவிகளின் 'காலணித்துவ கொத்தடிமை அதிகாரத்தில்' சிக்கிக்கொண்டார்கள். தப்பிப்பிழைத்து வருவது சிரமம்.  எக்கேடாவது கெட்டுப் போகட்டும்!அது அதளபாதாளம்

நான் 4.45க்குப் போனபோது கூட்டம் சேர்ந்துகொண்டிருந்தது. பெரும்பாலும் கோலாலம்பூர் ஈப்போவிலிருந்து வல்லினம் அழைத்துவந்த வாசகர்கள்/எழுத்தாளர்கள். உப்சி பல்கலை மாணவர்கள் சிலரும் வந்திருந்தனர். வல்லினம் மெனக்கிடவில்லையென்றால் அந்த 100 பேர் கூட சேர்ந்திருக்க வாய்ப்பில்லை. பினாங்கு எழுத்தாளர்கள் யாருமே வரவில்லை. அங்கே தமிழ் எழுத்தாளர் சங்கம் இருக்கிறது. தமிழ் மொழி சார்ந்து இயங்கும் இயக்கங்களும் இருக்கின்றன.ஆங்கில இலக்கிய இடத்துக்கு ஈடாக தமிழ் இலக்கியத்துக்குத் தரப்பட்ட அனைத்துலக அங்கீகாரம் இது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளாமல் தவறவிடலாமா?  கடந்த ஆண்டுகளில் அவ்வாறான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமையால் தமிழுக்கான இடம் தரமுடியாமல் போயிற்று என்று ஏற்பட்டாளர்கள் குறைபட்டிருக்கிறார்கள்.அதனால் தமிழை நம்மைப்போலவே அவர்களும் சீண்டவில்லை. நானும் முன்னமேயே நிகழ்ச்சி தகவலை பினாங்கு எழுத்தாளர்களுக்கு அனுப்பி வைத்திருந்தேன். வருவதாகச் சொன்னவர்களின் ஒருவர் முகத்தைக்கூடப் பார்க்கவில்லை. கெடா மாநில எழுத்தாளர் சங்கத்திலிருந்து ஐந்தாறு பேர் வந்திருந்தார்கள்.

எனக்குத் தமிழ்தான் மூச்சு 

ஆனால் அதைப் பிறர்மேல் விடமாட்டேன்

என்று ஞானக்கூத்தன் நக்கலடித்தது நினைவுக்கு வருகிறது.  

கைகட்டிக்கொண்டு பீஷ்மர்

நிகழ்ச்சி துவங்க பத்து நிமிடங்கள் தாமதமாகியது. பீஷ்மர் வந்து சேரவில்லை. அவர் வந்ததும் தொடங்கலாம் என்று காத்திருந்தோம். அவர் உலக நாடுகளில் உள்ள எழுத்தியக்கத்தின் நடவடிக்கைகளை கூர்ந்து நோக்கி விமர்சன்ம் செய்பவர் எனவே அவருக்குத் தரவேண்டிய பீடத்தை தருவதே நியாயம். அவர் வந்தவுடன் உரயாடல் நிகழ்ச்சி தொடங்கியது.

அர்வின்,லதா, கோ.புண்ணியவான், அ.பாண்டியன்

லதா , அ.பாண்டியன், நான் பங்குகொள்ளும் உரையாடல் நிகழ்ச்சி அது. இளம் எழுத்தாளர் அர்வின்குமார் வினாக்காரர். சபைக்கும் வாய்ப்பு தரப்பட்டது. மேடைபேச்சைவிடவும் உரையாடல் நிகழ்ச்சி, பங்கெடுப்பவர்களை முன்னிலைப் படுத்தும் ( audiance centered) வண்ணம் அமையும். ஏனெனில் பார்வையாளர்கள் எதிர்பார்ப்பதை மேடைப் பேச்சு ஒருபோதும் தரமுடியாது.உரையாடல் அதனை சரியாக நிவர்த்தி செய்துவிடும். சிங்கப்பூர் மலேசிய இலக்கியம் எதை நோக்கி நகர்கிறது. அதன் ஒற்றுமை வேற்றுமை என்ன என்பதைச் சுற்றியே வினாக்கள் கேட்கப்பட்டன.  மலேசிய இலக்கியச் செயல்பாட்டில் ரசனை விமர்சனம் ஏன் தவிர்க்கப்பட்டே வந்திருக்கிறது என்பதைத் தோட்டு நான் விளக்கினேன். மலேசிய இலக்கிய விமர்னத்தால் எழுத்தாளர்கள் சோர்ந்துவிடுவார்கள் என்ற எண்ணமே தலையாயதாய் இருந்ததால் விமர்சனம் செய்யப்படவில்லை. வெறும் முகமனுக்காக முதுகு சொரிந்துவிடப்பட்டது எனபதே என் விளக்கமாக இருந்தது. அ. பாண்டியன் கூடுதலாக ஒன்றைச் சொன்னார். சமீபத்தில் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பில்' இந்நூலின் எழுதப்பட்ட சிறுகதைகளை யாருக்கும் விமர்சிக்க அனுமதி இல்லை' என்று கட்டம்போட்டு எழுதியிருந்தார் நூலாசிரியர். அந்த அளவுக்கு விமர்சனத்தின் மீது பீதி உண்டாகியிருக்கிறது. ஒரு பொருள் சபைக்கு வந்துவிட்டதென்றால் அதைப்பற்றி யாரும் பேசலாம் என்பது நடப்பியல் அடிப்பட்டை. அந்த அளவுக்கே இருக்கிறது மலேசியாவில் விமர்சனத்தின் மீதான புரிதல். நாம் இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

ஜெமோ, கோ.புண்ணியவான், பி.கிருஷ்ணன், ம.நவீன்

அந்த உரையாடல் நிகழ்ச்சிக்குப் பின்னர் கொஞ்சம் கூடுதல் நேரத்தை அனுமதித்தார்கள் ஏற்பாட்டாளர்கள். சிங்கை பி கிருஷ்ணனோடு ஒர் உரையாடலுக்கு உடனடியாக ஏற்பாடு செய்தார் நவீன். கணேஷ்பாபு அதனை நெறிபடுத்தினார். அதன் பின்னர் அவருடைய நூல்களை வெளியீடு செய்தார் ஜெயமோகன் . நான் அதனைப் பெற்றுக்கொண்டேன்.

கணேஷ் பாபு, பி.கிருஷ்ணன்

அந்நிகழ்ச்சி நிறைவாகவே  முடிந்தது.

அன்று இரவு ஜெயமோகன், அருண்மொழிநங்கை, ஜி எஸ் எஸ் வி நவீன் அவருடைய மனைவி ஆகியோரை அழைத்துக்கொண்டு ஆனந்தபவன் உணவகம் சென்றேன். நான் பணப்பெர்ஸை எடுத்துப் போகவில்லை. அது விடுதியிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன். அதனை எடுக்க ஓடினேன். ஜெயமோகன் எங்கே ஓடுகிறார் என்று கேட்டார். நான் காரணத்தைச் சொன்னேன். பரவால்ல வாங்க என்றார்.

பெரும்பாலான மலேசிய உணவின் பெயர்களைத் தெரிந்து வைத்திருந்தார்கள் அவர்கள். மீ கோரேங், தே தாரிக் என்றே ஆர்டர் கொடுத்தார்கள். 

அருண்மொழியும் ஜி எஸ் எஸ் வி நவீன் தம்பதிகளும் பரோட்டா சாப்பீட்டார்கள். பரோட்டா தொடக்க காலத்தில் எந்த ஊர் உணவு என்று கேட்டார் ஜெ. எல்லோரும் இந்தியா என்றனர். இல்லை அது அரபு நாட்டு உணவு. கோதுமை அங்கே முக்கிய உணவுப் பொருள் எனவே சுட்டு சாப்பிடும் முறை அங்கிருந்தே துவங்கியது என்றார். எதைப்பற்றியும் சொல்வதற்கு விஷய ஞானம் உள்ளவர் ஜெ.

பில்லை ஜி எஸ் எஸ் வி நவீன்தான் கட்டினார். எனக்கு இது ஜன்மக் கடன். உணவு முடிந்து விடுதிக்குத் திரும்பிவிட்டேன். மறுநாள்  மாலை மணி 4.00 க்கு பினாங்கு விமான நிலயத்திலிருந்து திருச்சிக்குப் பயணம். காலையில் ஜெயமோகனுடன் ஓர் உரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டுவிட்டு புறபாட்டு விடுவேன்.


இணையுங்கள்.......




Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...