சை. பீர் முகம்மதுவை நான் முதன் முதலில் சந்தித்தது கூலிம் தியான ஆஸ்ரமத்தில். என் நிஜம் என்ற முதல் சிறுகதைத் தொகுப்பு அங்கே வெளியிட ஏற்பாடாகியிருந்தது. 1999 வெளியான அந்நூலின் பின்னட்டையில் என்னை அறிமுகம் செய்து எழுதியிருந்தார். என் நூல் வெளியீட்டுக்கு அவரை அழைக்கவில்லை. மனிதன் தொலைதூரத்திலிருந்து வரவேண்டுமே என்ற காரணத்தால் அவருக்குச் தகவலை மட்டுமே அனுப்பியிருந்தேன். ஆனால் நிகழ்ச்சி துவங்க ஐந்து நிமிடத்துக்கு முன்னால் அவருடைய பழைய மெர்சடிஸ் ஆஸ்ரம வளாகத்துக்குள் நுழைந்தது. அதில்தான் அவருடைய வேரும் வாழ்வும் பெருந்தொகுப்பை அறிமுகம் செய்ய ஜெயகாந்தனை மலேசிய முழுதும் ஏற்றி வலம் வந்தார். சிரித்துக்கொண்டே காரிலிருந்து இறங்கியவரை ஓடிப்போய் வரவேற்றேன்.
"என்னையா இது வரேன்னு ஒரு வார்த்தை சொல்லலியே" என்றேன். அவருடன் சிங்கப்பூர் மணிமாறன், கவிஞர் க. இளமணி ஆகியோர் உடன் வந்திருந்தனர். அப்போதெல்லாம் கைப்பேசி கிடையாது. எல்லாம் கடிதப் போக்குவரத்துதான். கடிதம் பற்றிச் சொல்லும்போது அவர் கையெழுத்தின் கலையழகு நினைவைத் தட்டுகிறது. கையெழுத்து முத்து முத்தாய் எல்லாம் இருக்காது. ஒரே சீராய் இருக்கும்.எங்கேயும் வெட்டு குத்து இருக்காது. மை பேனாவால் எழுதியிருப்பார். அவர் கட்டுரை நடைபோலவே ஆற்றொழுக்கோடு இருக்கும். எழுத்து சற்றே சாய்ந்து நேர்க்கோடு போட்டது போல ஒரு ஒழுங்கு தென்படும். கோடில்லாத ஏட்டில் கோடு போட்டதுபோல எழுதுவது ஒரு கலை. அது அவருக்குக் கைகூடி இருந்தது.அவருடைய நிறுவன பெயர் பொதித்த கடித ஏடு அது.
"நீங்கெல்லாம் என்ன கூப்பிடுவீங்களா?" பெரிய பெரிய ஆளாப் பாத்துதான் கூப்பிடுவீங்க என்று எம் ஏ இளஞ்செல்வனைப் ஒரு பார்வை பார்த்தபடி சொன்னார்.
"அப்படியெல்லாம் இல்ல நீங்க வந்ததும் இந்நிகழ்ச்சி மேலும் சிற்ப்படைந்துவிட்டது," என்று சொன்னேன்."
அந்நிகழ்ச்சியில் அவரையும் பேச வைத்தேன். பீர் முகம்மதுவுக்கு முன் தயாரிப்பெல்லாம் தேவையற்ற ஒன்று. அபாரமான நினைவாற்றல் உள்ளவர். நீரோடை போல சல சலவென்று பேசிக்கொண்டே போவார். பேச்சு முதிர முதிர சுவாரஸ்யமும் மிகும். அது பெரும்பாலும் அனுபவப் பகிரவாகவே இருக்கும். சில சமயம் இவரை ஏன் மேடையில் பேச வைத்தோம் என்று ஏற்பாட்டாளரையே வருந்தவும் வைத்துவிடுவார். பின்னொரு சமயம் இப்படி சிக்கலில் மாட்ட வைத்துவிடுவார்.
ஒருமுறை நானும் நண்பர் செபெஸ்டியனும் சுங்கைப் பட்டாணியில் தமிழர் திருநாளை கொண்டாடுவோம் என்று அவசர முடிவெடுத்து மளமளவென செயலில் இறங்கிவிடோம். அப்பாது அமரர் நகைச்சுவை பேச்சாளர் சிற்சபேசன் மலேசியாவில் சில காலம் தங்கியிருந்தார். அவர் மட்டுமே நிகழ்ச்சியில் முதன்மை பேச்சாளராக அழைப்பு விடுத்திருந்தோம். அவர் இசைந்தார். நிகழச்சி நடைபெறும் தினத்தில் சை.பீர் முகப்பது தான் வேலை நிமித்தமாக பட்டர்வர்த் வந்திருப்பதாக சொன்னார். என் போதாத நேரம் அந்த கணத்தில் இருந்துதான் துவங்கியது என்று அறியாமல் இருந்திருக்கிறேன்.
"கண்டிப்பா வரேன்யா..." என்றார்.
தமிழ்மொழி இலக்கியம் சார்ந்து 30 நிமிடங்கள் பேசுங்கள் என்று மட்டும் சொன்னேன்.
பேசிக்கொண்டே இருந்தவர் சுங்னைப் பட்டாணி ஸ்ரீசுப்ரமணியர் தேவஸ்தானத்தைப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார். நிர்வாக உறுப்பினர்களுக்குள் பிரச்னை உண்டானதை, அதனால் அந்த ஆலயம் சீல் செய்யப்பட்டதைப் பற்றி விலாவாரியாக பேசத்தொடங்கிவிட்டார். நிகழ்ச்சி நடநதது அவ்வாலய அண்ணாசாமி மண்டபத்தில்தான். முன்னால் அமர்ந்திருக்கும் முக்கிய பிரமுகர்களில் ஒருவர் அவ்வாலயத் தலைவரும் ஒருவர். அவர் பேச்சு அந்த விவகாரம் தொட்டே வளர்ந்துகொண்டிருந்தது. நான் கீழிருந்தபடியே அதனைப்பேசவேண்டாம் என்று சங்கேத மொழியில் சொல்ல முயற்சி செய்துகொண்டிருந்தேன். அவர் என்னை கவனிக்காமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். அந்தச் சீல் சற்றே விவகாரம் ஓய்ந்திருந்த நேரம் அது
என் நல்ல நேரம் நிகழ்ச்சி முடிந்து ஓரிருவர் மட்டுமே அதுபற்றி என்னிடம் புகார் கூறினர். மற்றபடி பெரிதாக ஏதும் நடந்துவிடவில்லை.
"ஏன்யா மைக்க புடிச்சா இத பேசணும் இத பேசக்கூடாதுன்னு கூடவே தெரியாது?' என்றேன்.
"இப்ப என்னையா அதுக்கு? நடந்தததான சொன்னேன், நான் துலக்கன்னவாசி இதெல்லாம் பேசக்கூடாதுங்கிறியாய்யா," என்றார். தமிழ் கலை இலக்கிய நிகச்சிகளில் தனக்கான இடம் கொடுக்கபடாத வேளையில், அவராகவே தன்னைத் தாழ்வாக நினைத்துக்கொண்டு அந்த வார்த்தையை பயன்படுத்துவார். இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் பேசி இருக்கிறார். இப்படி வெளிப்படையாக பேசுவது அவருடைய இயல்பு என்று பின்னர் தெரிந்துகொண்டேன்.
நான் இனிமே இந்த ஆள மேடையில் பேச வாய்ப்பளிக்கக்கூடாது என அன்றே முடிவெடுத்துக் கொண்டேன். ஆனால் எங்கள் நட்பு எப்போதும் போலவே இயல்பாகவும் நெருக்கமாகவும் இருந்தது.
ஆனால் பல சமயங்களில் இலக்கியம் சார்ந்த விடயங்களில் அவரது கலகக் குரல் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் ஓங்கி ஒலித்தபடியே இருக்கும். அந்த நியாயக் குரல் இனி ஒலிக்காதே என்று எண்ணும்போது அவரின் இழப்பு உள்ளபடியே பேரிழப்புதான் என உணர்கிறேன்.
முற்றும்.
Comments