Skip to main content

2.சை.பீர்முகம்மது எனும் இலக்கிய வம்பாளி





2.  சை.பீர் அவர்களுக்கு உடல் நலம் குன்றி வருவதை அவரோடு உரையாடுவதிலிருந்து தெரிந்து கொண்டேன். மிகுந்த சோர்வாக இருந்தார். குரல் உற்சாகம் குன்றி ஒலித்தது.

நான் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். உங்கள் புலனத்துக்கு அனுப்பிவைக்கிறேன் என்றார்.

கட்டுரை இலக்கிய அரசியல் தொடர்பானது. சற்று காரசாரமாக இருந்தது. கைப்பேசியிலேயே தட்டச்சு செய்திருக்கிறார்.

நான் சொன்னேன் கட்டுரை நல்லா வந்திருக்கு. அதனை விடாமல் தொடருங்கள் என்றேன்.

அவர் குரலில் இப்போது உற்சாகம் தொணித்தது.கலை வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு அவர்கள் ஈடுபட்ட கலையைப் பற்றிப் பேசும்போது அவர்கள் பரவசமடைவதைப் பார்த்திருக்கிறேன். பிறவற்றைப் பற்றி உரையாடும்போது இல்லாத  மகிழ்ச்சி அவர்கள் சார்ந்த கலை இயக்கத்தைத் தொட்டுப் பேசும்போது முகிழ்ந்துவிடும். இது கலை நமக்குத் தருகின்ற பிரத்தியேக உற்சாக உணர்வு. நான் சை பீரிடம் நீங்கள் விடாமல் எதையாவது எழுதிக் கொண்டே இருங்கள். அந்தப் படைப்பை எழுதி முடிக்கும்போதும் பிறர் வாசிப்புக்குப் போகும்போது, அது பற்றிப் பேசப்படும் போதும் நீங்கள் உங்களை மீட்டுக்கொள்ள முடியும் என்றேன். அவர் நான் இந்தக் கட்டுரையை முடித்து நூலாக்கப் போகிறேன் என்றார். அவர் எழுதி முடித்துவிடுவார் என்றுதான் நினைத்தேன். சில காலம் அவரிடமிருந்து ஒரு செய்தியும் வரவில்லை.கடைசியாக புலனத்தில் வந்தது அவர் மறைந்துவிட்ட செய்தியே. ஒருகால் அது அவருக்கு விடுதலை கொடுத்திருக்கலாம். வெளியே போக முடியாத ஒரு இக்கட்டான சூழலில், இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிறரின் உதவியை நாடவேண்டிய கட்டயத்திலிருந்து அவர் விடுபட்டிருக்கிறார் என்பதே அவருக்கான விடுதலை என்று நினைக்கிறேன். 

மலேசிய இலக்கியத்துக்கு அவர் செய்த மாபெரும் பணி 1950 லிருந்து 1999 வரை வெளி வந்த சிறந்த 93 சிறுகதைகளைத் தொகுத்து வேரும் வாழ்வும் என்ற தலைப்பில் வெளியிட்டதாகும். அந்தக் கதைகளைத் தொகுக்கும்போது அவர் போட்ட உழைப்பை நான் நேரில் பார்த்தவன். இந்தத் தொகுப்பில் இடம்பெற்ற சிறுகதை ஆசிரியர்களிடமே அவர்கள் எழுதிய சிறுகதை கிடைக்காத பட்சத்தில் அவர் என்ன செய்திருக்க முடியும்? அந்த முயற்சியைக் கைவிட்டிருக்கலாம். ஆனால் அவர் தளர்ந்து போகவில்லை. 

ஒரு சம்பவம் உங்களுக்குச் சொல்ல வேண்டும்.

சீ. முத்துசாமியின் இரைகள் சிறுகதை கிடைக்குமா என்று என்னிடம் கேட்டார். இக்கதை மிக முக்கியமான கதை. நான் சேகரம் செய்யும் தொகுப்பில் இக்கதை இடம்பெறவில்லையென்றால் தது முழுமையடையாது என்றார். சீ.முத்துசாமியின் முதல் சிறுகதைத் தொகுப்பு என் அலமாரியில் எங்கோ இருப்பதாக என் நினைவைத் தட்டிக்கொண்டே இருந்தது. நான் தேடிப் பார்க்கிறேன் என்றேன். சீ.முத்துசாமியிடம் கேட்டீர்களா என்று கேட்டேன். முதலில் அவரைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அங்கே இங்கே கேட்டுத் தொடர்புகொண்டு விசாரித்தேன். அவரிடம் இல்லை என்று சொல்லிவிட்டார் என்றார். 

எனக்குச் சரியாக நினைவில்லை. பின்னர் நான் தேடி அவரிடம் கொடுத்தேன் என்று நினைக்கிறேன். இப்படித்தான் ஒவ்வொரு கதைக்கும் அவர் அலைமோதி இருக்கவேண்டும். 


"வேரும் வாழ்வும்" பெரும் தொகுப்பு வந்த கையோடு பல எழுத்தாளர்கள் தங்கள் கதை இடம்பெற்வில்லையே என்று குறைபட்டுக் கொண்டார்கள். இந்தத் தொகுப்பே அவரை உறிஞ்சிவிட்டிருந்தது. இதனை நாடு முழுதும் வெளியிட ஜெயகாந்தனை மலேசியாவுக்கு அழைத்து வந்திருந்தார்.  நான் அப்போது கெடா மாநில எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்தேன். சுஙைப்பட்டாணி காந்தி மண்டபத்தில் ஒரு வெளியீட்டுக்கு ஏற்பாடு செய்தேன். ஜெயகாந்தனும் பீர் முகம்மதுவும் என் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்ட பிறகு நிகழ்ச்சிக்குக் கொண்டு போனேன். நூற்றுக்கு மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். ஜெயகாந்தனுக்காக வந்த வாசகர் பெருமக்கள் அவர்கள். ஒரு நூல் 100 ரிங்கிட்டுக்கு விற்கப்பட்டது. 80 நூல்கள் வரை வாங்ககப்பட்டது. இப்படி சில முக்கிய நகரங்களில் நூலை அறிமுகம் செய்தார். ஆனால் நூலுக்கு செலவிட்ட பணம் வரவில்லை என்றார். சில நூல் வெளியீட்டுக்கு  குறைவான மக்களே வந்திருந்தனர் என்றார். இந்த நிலையில் அவர் எழுத்தாளர்களிடமிருந்து தங்கள் கதைகள் இடம்பெறவில்லை என்று வந்த கண்டனங்கள்  வேறு அவர் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது. இந்தப் பெரும் தொகுப்பு நிறைவானதாக இல்லை என்று அவர் எண்ணியிருக்க வேண்டும். உடனே இரண்டாவது தொகுப்புக்கான வேலையில் இறங்கினார். முதல் தொகுப்பு தன் கையைக் கடித்துவிட்ட தழும்பு மறையாமல் இருக்கும்போதே இன்னொரு தொகுப்புக்கான வேலையைத் துவங்க ஒரு அசாத்தியமான துணிச்சல் வேண்டும். அது அவருக்கு இருந்தது.


ரெ. கார்த்திகேசு போன்ற மிகப் பிரபலமான எழுத்தாளர்கள் கூட தங்கள் நூல்களைப் பதிப்பிக்க சுணக்கம் காட்டியதை நான் அறிவேன். அவரின் கடைசி நூலை எத்தனை பிரதிகள் போட்டீர்கள் என்று ஒருமுறை வினவினேன். அவர் சொன்ன தகவலில் திகைப்படைந்தேன். வெறும் 300 பிரதிகள் மட்டுமே போட்டேன் என்றார். 300 பிரதிகள்கூட விற்று முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது என்றார்.

 வரவேற்பில்லாத தமிழ் மக்களை நம்பி சை.பீர் இரண்டாவது தொகுப்புக்குள் தலையை விட்டது சிங்கத்தின் வாய்க்குள் தலையை விட்டதற்குச் சமம். சொந்தப் பணம் செலவழித்தாக வேண்டும். 

எழுதிற வேலையப் பாருய்யா? சொற்ப வாசகர்களை நம்பி இதையெல்லாம் செய்து ஏன் நட்டப்படவேண்டுமா என்று அறிவுறுத்தினேன். என்னையா பண்ண சொல்றீங்க தொல்லை தாங்கள, என்றார். அந்தத் தொல்லையை மலேசிய இலக்கிய வளர்ச்சிக்கான வழியாக மடைமாற்றும் உள்ளெண்ணம் அவருக்கு இருந்திருக்க வேண்டும். இரண்டாம் தொகுப்பும் போட்டாயிற்று. 

இரண்டாவது தொகுப்பு வெளிவந்தது. ஆனால் மேலும் பலர் தங்கள் கதை விடுபட்டுவிட்டது என்று முறையிட மூன்றாவது தொகுப்பையும் கொண்டுவந்தார்.  இதெல்லாம் செய்ய அவருக்கு ஏன் வேர்த்துவடிய வேண்டும். மலேசிய இலக்கியம் மலேசியாவைத் தமிழ் கூறு நல்லுகத்தில்   வேறெங்கும் போய்ச் சேர்ந்திருக்கவில்லை.  இந்த அடையாளத்துக்காகத்தான் அவர் அலைகழிந்துகொண்டிருந்தார்.

அவரின் இந்த உழைப்பை அங்கீகரிக்கவே வல்லினம் அமைப்பு  அவருக்கு 2019 ஆண்டு வல்லின விருதை வழங்கி கௌரவித்தது. சை பீரின் இந்தத் தொகுப்புப் பணிக்காக , பெரும் பணம் கொட்டிக்கிடக்கும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் எப்போதோ செய்திருக்க வேண்டிய கௌரவிப்புப் பணி இது. யாரெல்லாம் மலேசியத் தமிழ்  எழுத்தாளர் சங்க நடவடிக்கைகளை விமர்சிக்கிறார்களோ அவர்களையெல்லாம் அது மிகுந்து கவனத்தோடு குறித்து வைத்துக்கொள்ளும்.சை பீர்முகம்மது அதன் முன்னால் தலைவர் பெ.ராஜேந்திரனின் சில செயல்பாடுகளைத் தொடர்ந்து  விமர்சித்து வந்தார் என்பதை நீங்கள் கருத்தில் கொண்டால் நான் சொல்ல வருவது புரியும் . .  

தொடரும்....



Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...