Skip to main content

சை.பீர் முகம்மது எனும் இலக்கிய வம்பாளி

 சை. பீர் முகம்மது என்னும் இலக்கிய வம்பாளி.





சை.பீர்முகம்மது வெள்ளைச் சட்டையில் .,எம் ஏ இளஞ்செல்வன் இல்லத்தில் ஒருமுறை சந்தித்துக் கொண்டபோது.




 நான் சை, பீர் முகம்மதுவை ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் சந்தித்தேன். நீரிழிவு நோயின் காரணமாக அவருடைய  ஒரு கால் நீக்கப்பட்டிருந்தது அவர் சொல்லியே தெரிய வந்தது. உடலுறுப்பின் முக்கியமான ஒரு உறுப்பை இழக்கும்போது உண்டான கவலை அவரை எந்த அளவுக்குப் பாதித்திருக்கும் என்று என்னால் உணரமுடிந்தது.  அவருக்கு ஆறுதல் சொல்லும் பொருட்டு அவர் இல்லத்துக்கே தேடிப் போனேன். அவர் காலை இழந்து சில மாதங்கள் கழிந்திருந்ததால் அவர் இயல்பாகத்தான் இருந்தார்.அதனால் நானும் என் சோகத்தை அவரிடம் கொட்டும் எண்ணத்தைக் கைவிட்டேன்.  எப்போதும் போலவே  நடந்துகொண்டேன். அந்த இழப்பை தன் மனதளவில் மூடிக்கொண்டதைப் போல இருந்தது அவர் அந்தக் காலை கைலியால் மூடியிருந்தந்து, நோய்மையில் உள்ளவர்களிடம் அந்தக் குறிப்பிட்ட நோய் பற்றி பேச்சை வளர்ப்பது அந்த நோயின் எண்ணத்தைக் கடுமையாக்குவதற்கு ஒப்பானதாகும். இந்த ஞானம் நாம் கடுமையான நோயை எதிர்கொள்ளும்போது மட்டுமே தன்னிச்சையாகவே  உண்டாகிவிடும்.

அவரின் பேச்சு இலக்கியத்தைச் சுற்றியே இருந்தது. அவர் கடைசியாக எழுதிய 'அக்கினி வளையங்கள்' பற்றிக் கேட்டுக் கொண்டே இருந்தார். ஒரு சக படைப்பாளனின் அபிப்பிராயம் எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை மேன்மேலும் உணரவைத்த தருணம் அது. நான் சிலமுறை அவரிடம் தொலைபேசி வழியாக நாவலைப் பற்றி, அதனை வாசிக்க வாசிக்க என் கருத்தைச் சொல்லிக்கொண்டே இருந்தேன். அது அவருக்குப் போதவில்லைபோலும்.  ஒரு படைப்பாளன் தன் படைப்பைப் பற்றி எவ்வளவுதான் பாராட்டிப் பேசினாலும் அவர்கள் அதுபற்றி மேலும் அதிகமாகவும் விரிவாகவும் பேசப்படுவதையே விரும்புகிறார்கள்.  ஒரு புனைவாளன் என்ற முறையில் நானும் அதனை உணர்ந்திருக்கிறேன்.நான் நாவலின் பல்வேறு இடங்களைச் சுட்டிக்காட்டி விதந்தோதிக் கொண்டிருந்தேன்.  நாட்டின் வரலாற்றின் ஒரு இருண்ட  காலக்கட்டத்தின்  பதிவாக அது இருந்தது. கதையை நகர்த்திச் சென்ற விதமும் கம்யூனிஸ்டுகளின் நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தையும் சொன்ன நல்ல நாவல் என்றேன். இந்த கம்யூனீஸ்டிட்டின் தார்மீகப் போராட்டத்தை பிரிட்டிசார்கள் திசைதிருப்பியும், பேசியும், எழுதியும் வந்தார்கள். அதனாலேயே மலாயா கம்யூனிஸ்டுகளைப் பயஙகரவாதிகள் என்று திரித்துப் பரவவிட்டிருந்தார்கள், அதற்கு அவர்கள் தங்களின் காலனித்துவ அதிகார்த்தைப் பயன்படுத்தினார்கள்.இன்றளவும் மக்கள் கம்னியூஸ்டுகளை பயங்கரவாதிகள் என்றே சொல்லி வருகிறார்கள். ஆனால் 'அக்கினி வளையங்கள்' அதற்கான மாற்றுக் கருத்தியலை முன்வைத்தது. அது உண்மையான வரலாறை பதிவு செய்திருந்தது. 

"கொற ஒன்னும் இல்லியா" என்று வினவினார். 

"இருக்கு " என்றேன். அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது என்று அடுத்த கணத்திலேயே தோணியது.

"என்னா? என்றார்,

"நல்ல மொழிநடை அந்தக் கதைக்களத்தை மேலும் வலிமையாக்கியிருக்கும்" என்றேன். நீங்கள் கட்டுரைகளில் கொண்டுவந்த செறிவான நடையை இந்தப் புனைவிலும் கொண்டுவந்திருக்கலாம் என்றேன். அவர் தலையாட்டிக் கொண்டு மீண்டும் கேட்டார் நாவல்." உங்களுக்குப் பிடிக்கவில்லையா? " நான் பிடித்திருக்கிறது என்று அழுத்தம் திருத்தமாக சொல்லவேண்டும் என்ற நோக்கத்தில் ஏவப்பட்ட சந்தேகம் அது.

மொழிநடை மட்டும்தான் பிடிக்கவில்லை கதை ஓட்டம் அதனை ஈடு செய்துவிட்டது " என்றேன், அவர் முகம் அப்போது சற்று மலர்ந்திருந்தது. ஒரு இரண்டு மணி நேரம் அவரோடு கழித்துவிட்டு வீடு திரும்பிவிட்டேன். விடைபெறுமுன் என் கையைப் பற்றி ரொம்ப தூரமிருந்து மெனக்கெட்டு வந்திருக்கீங்க, ரொம்ப நன்றியா" என்றார். அவரின் சொற்கள் அந்த இழப்பின் சோகத்தைப் பிரதிபலித்தது. 

அப்போதுதான் அவர் வீட்டில் தமிழ் மொழி புழக்கமே இல்லாததை கவனித்தேன், சை.பீர் முகம்மது என்ற எழுத்தாளரோடு அந்த இந்து இஸ்லாமிய குடும்பத்திலும் அவருக்குப் பிறகு  தமிழ் மொழியின் பயன்பாடு இல்லாமல் போகப்போகிறது என்று உணர்ந்தபோது மனம் அவர் இழந்த காலை கவனித்தபோது உண்டான அதே சோகம் தாக்கியது.

அதன் பின்னர் ஒரு வாரத்துக்கு ஒரு முறையாவது நான் அவரை அழைத்துப் பேசிக்கொண்டிருந்தேன். வாசிப்பு எழுத்தும் மட்டுமே உங்களை இந்தத் துயரிலிருந்து மீட்டெடுக்கும் என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். அவர் முன்பைப்போல வாசிக்க முடியவில்லை என்று பதிலிறுத்திக் கொண்டே இருந்தார். உங்கள் கையறு நாவலைக் கூட இன்னும் தொடவே இல்லை என்றார். ஆனால் சில மாதங்களுக்கும் பிறகு அதனை வாசித்து முடித்திருந்தது தெரிந்தது. தேசிய நில நிதி கூட்டுறவுக் கழக  அறவாரியத்தின் புத்தகப் போட்டியில் உங்கள் நாவல் சிறந்த நூலுக்கான பரிசைப் பெறும் என்று எதிர்பார்த்தேன். என்ன இப்படிப் பண்ணிட்டாய்ங்க? என்று என்னையே திரும்பக் கேட்டார். அந்த நாவல் தமிழ்நாட்டிலும் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் பரவலான கவனத்தை ஈர்த்திருந்தது அவருக்குத் தெரிந்திருந்தது.

யாரோ என்னைப் பிடிக்காத உள்நாட்டு ;முனைவர் நடுவர்"  சந்தர்ப்பம் பார்த்துக் காலை வாரி விட்டிருக்கலாம் என்று மட்டும் சொன்னேன்.அவர் ஒரு பெண்பால் முனைவர் என்று மட்டும் நம்பத் தகுந்த வாடாரங்களின் சொற்கள் காதுகளை உரசி சென்றிருந்தது. அவர் புனைவிலக்கியத்தைப் படிப்பவரும் அல்ல படைப்பவரும் அல்ல என்று மட்டும் சொன்னார். தேசிய நில நிதிச் சங்க அறவாரியம் நடுவர்கள் ஒவ்வொருவரும்




போட்ட  மதிப்பெண் முடிவு அறிக்கையை வாங்கிப் பார்க்கவேண்டும் என்று மட்டும் சொன்னார். அவர்கள் மதிப்பெண்கள் பாரிய வித்தியாசம் இருந்தால் யார் சகுனித்தனம் செய்தது என்று தெரிந்திருக்கும் என்றார்.கலை இலக்கிய  அறவாரியம் அவ்வாறு செய்கிறதா என்று தெரியவில்லை. இனிமேலாவது மோசடியைத் தவிர்க்க அப்படிச் செய்தல் உத்தமம். 

அந்த நிலையிலும் தன்னுடைய இலக்கியப் போராளி குணத்திலிருந்து அவர் பிறழவில்லை என் எண்ணவைத்தது  அவருடனான இந்த உரையாடல்,


தொடரும்...



Comments

Nedunilam said…
சை பீர்முகமது. மலேசியாவில் நான் சந்திக்க விரும்பிய எழுத்தாளர். நேர்முக அறிமுகம் கிடையாது. எனது, 'Memory Lane' பதிவொன்றில் மலேசியாவில் நான் அறிந்திருந்த சில எழுத்தாளர்களின் பெயர்களை குறிப்பிட்டிருந்த போது,எனது ஞாபக தவறால் அவரின் பெயர் விடுபட்டிருந்தது. தனது பின்னூட்டத்தில் 'மலேசியாவில் நான் எல்லாம் எழுத்தாளர் கிடையாது' என்று கோபித்துக்கொண்டிருந்தார். நான் சொன்னேன். "சார், மலேசியாவில் நான் ஒரு அநாமதேயன்.எனது ஞாபக மறதியால் இந்த தவறு நேர்ந்துவிட்டது. மன்னித்துவிடுங்கள். எனது ஆசான் ஜெயகாந்தனுடன் நெருங்கி பழகியவர் நீங்கள். உங்களைச் சந்திக்க மிகவும் ஆவலாய் உள்ளேன்" என்றேன். அவர் அதற்கு பதிலளிக்கவேவில்லை. கோ. பு. மூலம் முயன்றபோது தனது சுகவீனத்தால் யாரையும் சந்திக்க விரும்பாதது தெரிந்தது.
இனி, நிரந்தரமாகவே சந்திக்க முடியாமல் போனது.
எனினும், தனது உடல்/உள துன்பத்திலிருந்து இறுதியில் அவர் மிகவும் ஏங்கியிருக்கக்கூடிய ஒரு நிம்மதி வந்து கிடைத்ததில் என் மனம் சாந்தியடையவே செய்கிறது. சந்திப்போம் சை பீர் சார்.
Nedunilam said…
This comment has been removed by the author.
Nedunilam said…
This comment has been removed by the author.
ko.punniavan said…
நன்றி ஸ்ரீராமுலு,

நீங்கள் எழுதிய பதிவு நெடுநிலன் என்ற பெயரில் பதிவாகியுள்ளது.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற வருகிறார்கள்

                                                                       குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற                                                                                  வருகிறார்கள்     பேராக்கின் குரோஹ் சிற்றூர் மலை உச்சியில் அமைந்த  வனப்பான ஊர். பாலிங்கிலிருந்து மெல்ல ஏறும் மலைபாதையில் அரை மணி நேரத்தில் குரோஹ்வை அடைந்துவிடலாம். நானும் என் மனைவியும் அதிகாலை ஆறரைக்குக் கிளம்பிவிட்டோம். அது என் வழக்கமல்ல. காலை 10.00 வரை தூங்கிக்கொண்டிருப்பவன் நான். குரோஹ் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு பால்ராஜ் 21.2.25 ல்  தாய்மொழி நாள் கொண்டாட்டத்துக்குச் சிறப்பு விருந்த...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...