Skip to main content

மறக்கப்பட்ட ஆளுமை (அநங்கம் கட்டுரை)

எம் ஏ இளஞ்செல்வன் மாரடைப்பால் திடீர் மரணமுற்ற தகவல் கிடைத்தபோது நான் மலாயா பல்கலைக்கழக துணைவேந்தர் மண்டப வாயிலின் எழுத்துலக நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தேன்.டாக்டர் கிருஷ்ணன் மணியம்தான் என்னை நெருங்கி அவர் இறந்து போன செய்தியை என்னிடம் சொன்னார்.அவரின் வசிப்பிடத்துக்கு அருகாமையிலேயே வசிக்கும் எனக்கு கோலாலம்பூருக்குப்போன பிறகுதான் செய்திகிடைத்தது ஒரு துர்ரதிர்ஸ்டம்.மனம் பல்கலலைக்கழக மண்டபத்திலிருந்து அப்போதே விடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த எனக்கு ஒரு இலக்கியவாதியின் மரணச்செய்தி ஒரு இலக்கியப்பேராண்மையின் மரணமாகவே என்னைக் கருதவைத்தது. ஏனெனில் எம் ஏ இளஞ்செல்வனை ஒரு நண்பராக பார்த்ததைவிடவும்,ஒரு சக எழுத்தாளனாக அவதானித்ததைவிடவும்,சக தலைமை ஆசிரிய நண்பனாகப் பழகியதைவிடவும்,ஒரு இலக்கிய மேலாண்மையை பிரம்மிப்போடு அன்னாந்து பார்க்கும் மன நிலைக்கு நான் தள்ளப்பட்டிருந்தேன்.அவருடைய சிறுகதைகளை வாசித்த பிறகு அவரை அமானுடமாக பார்ப்பதை ஒரு தரிசனமாகவே மேற்கொண்டேன். அவருடைய சிறுகதைகள் முற்றிலும் வேறொரு தளத்தில் இயங்கி இந்நாட்டின் பிற சிறுகதைகளைவிட தனித்துக்காட்டும் தன்மையைக்கொண்டதாக இருந்தது என்னை மிகுந்த வியப்புக்கு உள்ளாக்கிய வண்ணம் இருந்தது. அப்போது நான் எழுத்துலக வட்டத்துக்குள் நுழையாமல் வெறும் வாசகனாகவே வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த காலம். அவரின் எழுத்துமேல் கொண்ட ஈர்ப்புதான் என்னையும் எழ்த்துலகுக்கு, ஒரு எறும்பு தன் இரையை மெல்ல இழுத்துச்செல்வதுபோல் என்னையும் இழுத்துச்சென்றிருக்கக்கூடும்.
இந்தியன் மூவி நீயூஸை எஸ்.எஸ் சர்மாவை ஆசிரியராக்கொண்டு இயங்கிக்கொண்டிருந்த காலத்தில்தான் பிரதி மாதமும் அவருடைய ஆரம்பகால கதைகளும், துணுக்குக்கட்டுரைகளும் பக்கத்து வீட்டு அக்கா மூலம் எனக்குவாசிக்கக்
கிடைத்துக்கொண்டிருந்தது. அப்போதெல்லாம் அதனை மாதாமாதம் காசுகொடுத்து வாங்கும் சக்தி என்னிடம் இருந்ததில்லை. இருந்தாலும் அதன் வண்ணக்கோலம்,சினிமா காட்டும் உடற்கவர்ச்சி என்னை அதனைப்படிக்க துண்டிக்கொண்டிருந்தது.அவர் எழுதிய எல்லா எழுத்துப்படிவத்திலும் அவரின் புகைப்படம் போடப்பட்டிருக்கும்.சினிமா இதழாக வெளிவந்து கொண்டிருந்த அந்த இதழில் அவருடைய புகைப்படமும் ஒரு சினிமா நட்சத்திர முகத்துக்கு ஈடான அழகோடு காட்சிதரும்.அந்த மசாலா இதழில் அவர் எழுதிய ஒரு கதையோடு நான் மிக நெருக்கமானேன்.அவர் கதையோடு பரீட்சையமாவதற்கு அதுதான் புள்ளையார் சுழியாக அமைந்திருக்கக்கூடும்.அந்தக்கதை கொஞ்சம் நீல சமாசாரங்களை உள்ளடக்கியிருந்தது.புதிதாகத் திருமணம் முடிந்த இரண்டு தம்பதியினரில் ஒருவர் வீட்டில் சந்திக்கின்றனர்.அவர்கள் மேல் தட்டு வர்க்கத்தினர் என்பதை கதையில் அழகுற காட்சிப்படுத்துகிறார்.ஒருவர் தன் நண்பரின் மனைவியை அழைத்துக்கொண்டு தன்னுடைய பிரம்மாண்டமான வீட்டைச்சுற்றிக்காட்ட அழைத்துச்செல்கிறார்.அதேபோல இவரின் மனைவியும் தன் கணவருடைய நண்பரை அழைத்துக்கொண்டு போகிறார்.ஒரே திசையில் பேசிக்கொண்டு போனவர்கள் பேச்சு சுவாரஸ்யத்தில் வெவ்வேறு திசைக்கு மாறிவிடுகிறார்கள். வீட்டின் சுற்றுப்புறம்,பூங்கா,வீட்டை அலங்கரிக்கும் அழகுப்பொருட்கள், அறைகள் என அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கும் வேளையில் அவர்கள் மெல்ல மெல்லஅன்னியோன்யம் ஆகிறார்கள்.
பேசிக்கொண்டு போகும்போதே தன்னிச்சையாக உரசலும் தொடுதலும் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிடுகிறது.படுக்கை அறையைக் காட்டிக்கொண்டிருக்கும்போது படுக்கைக்கட்டில், மெத்தை, பட்டுவிரிப்பு,மெல்லிய இசை, அறைசூழல் ,அது தரும் கதகதப்பு,போதாக்குறைக்குப் புதிய துணை அவர்களை மெய் மறக்கச்செய்து உடல் உறவுவரை காந்தமென கவர்ந்துவிடுகிறது.வேறொரு படுக்கை அறையில் இவளின் கணவனுக்கும்,இவனின் மனைவிக்கும் இதே காட்சியைக்காட்டுகிறார் கதாசிரியர்.அதன் பிறகு வீட்டில் உணவருந்திவிட்டு ஒன்றும் நடவாததுபோல் விடைபெற்றுக்கொள்கிறார்கள்.கதை முடிந்துவிடுகிறது.ஆம் கதை முடிந்துவிடுகிறது. வசதி படைத்தவர்களின் மனப்போக்கைப்படம்பிடித்துக்காட்டும், அங்கதக் கதையாக இது அமைந்திருந்தது.கதையை வாசித்தவர்கள் இது நம்முடைய பண்பாட்டுக்கு முரணானது,கதாசிரியன் ஒழுக்கக்கேடான கதையை எழுதுகிறான், என்றெல்லாம் அப்போது அவரின் மீது காத்திரமான கல்லெறிகள் வீசினார்கள்.இதுதான் இளஞ்செல்வனின் பலம்.யாரும் எழுதத்துணியாத விஷயத்தை தன்னுடைய கதைக்களனாக்கி பின்னர் தன் கதையும் தானும் ஒருசேர சர்ச்சைக்குள்ளாகி பேசப்பட்டுவிடுவார். இந்தக்கதையை வாசிக்கும்போது எனக்குப்பதினெட்டு வயதிருக்கும். என் வயதும் கதையின் உள்ளார்த்தம் என்னை (கதையின் கரு, உள்ளீட்டையும் பொருட்படுத்தாமல்) கதைக்குள் லயிக்கச்செய்திருந்தது.அதற்குப்பிறகுதான் அவரின் கதையைத் தேடிப்படிக்க மும்முறம் காட்டினேன்.
சிறுகதையின் வடிவம் உள்ளடக்கம் இன்னதென்று எனக்குப்போதித்த கதை ,அவர் எழுதி சர்ச்சையையெல்லாம் தாண்டி தெருச்சண்டைவரை வந்து சச்சரவை உண்டு பண்ணிய கதை ‘பொசா’ என்ற கதை.தமிழ் நேசனில் வெளியாகியிருந்தது.தனக்கு மிக அருகாமையில் நடந்த சம்பவத்தையோ,தானே ஒரு பாத்திரமாக இயங்கிய ஒன்றையோ மிகச்சுவரஸ்யமான கதையாக வடித்தெடுக்க முடியும் என்பதற்கன சான்றாக நிறுவப்பட்ட கதை ‘பொசா’.இக்கதையின் நாயகன் ஏதோ ஒரு காரணத்துக்காக, நிஜ வாழ்க்கையில் அவரோடு பிணக்கை ஏற்படுத்திக்கொண்டவர்.இந்தக்கதையை அவர் எழுதும்போது பொசா என்றால் என்ன என்று விளக்கம் தந்துவிட்டு கதைக்குள் நுழைகிறார் இளஞ்செல்வன். பொசா என்ற தலைப்பிட்டபின் கதையைச்சொல்லிக்கொண்டு போயிருக்கலாம்.ஆனால் எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்று சொல்வதுபோல் பொசா என்பது யாரைக்குறிக்கும் என்று சொல்வதிலிருந்தே தோளுறித்துக்காட்டும் அவரின் துணிச்சல் வெளிப்படுகிறது. அவரின் இந்த அறிமுகம் வாசகனை நத்தையின் தலையென கதைக்குள்ளிழுத்துக் கதையை நட்புவட்டத்திலும், கதைக்களம் எடுக்கப்பட்ட வட்டாரத்திலும் பரவலாக பேசவைத்து விடுகிறது.ஏனெனில் அக்கதை அவர்களுக்கு மிக அறிமுகமான ஒருவரின் கதை. அதைப்பற்றி பேசவைத்தது மட்டுமின்றி பாத்திரத்தை ஏளனமாக்கிச் சிரிக்கவும் வைத்திருந்தது. அதற்குப்பிறகுதான் கதையின் எழுத்து விமர்சனத்தையும் தாண்டி தெருச்சண்டைவரை நீண்டுவிடுகிறது.கதையைவிடவும் அந்தத்தெருச்சண்டை பிரபலமாவதற்கு கதையே வழிவிட்டிருந்தது என்பதுதான் கொசுறுச்செய்தி.அடர்த்தியான பாத்திரத்தன்மைக்கு முகாந்திரமான இடத்தைக்கொடுத்து புனையப்பட்ட இக்கதை இன்றுவரை நம்மை பேசவைத்துவிடுகிறது. இந்தக்கதையை வாசித்த பிறகு அவரின் மீதான மோகத்தை என்னுள் கோப்பையில் ஊற்றப்படும் நீர்போல நிரம்பியவண்ணம் இருந்தது..
எழுபதுகளின் இறுதியில் மலேசிய சிறுகதை உலகின் மிகப்பெரிய ஆளுமையாக திகழ்ந்தவர் எம் ஏ இளஞ்செல்வன்.அவரின் இழைப்பு உளி, டுக்கா சித்தா,தெருப்புழுதி..ஆத்ம வீணையின் அமர சுருதிகள்,சேதாரம்,.பாக்கி,நொண்டி வாத்து,வித்தியாசமான ஒருத்தி, போன்ற கதைகள் அவரை மிக உச்சத்துக்குக் கொண்டு சென்றவை. இவற்றுள் டுக்கா சித்தா என்ற சிறுகதை எஸ் பி.எம்.மில் மலாய் மொழியில் சிறப்புத்தேர்ச்சி பெறாத ஓர் இளைஞனின் முற்போக்கான சிந்தனையை முன்னிலைப்படுத்தி பின்னப்பட்ட சிறுகதை.தன்னோடு படித்த, தன்னைவிட குறைவான மதிபெண்கள் பெற்ற மலாய் நண்பர்களுக்கு விரைவிலேயே வேலை கிடைத்துவிட, தான் எவ்வளவு அலைந்தும் வேலை கிடைக்காமல் அவதியுறுவதைக் காத்திரத்தோடு சொல்கிறது கதை.சிறுபான்மையினரை ஒரு பொருட்டாகக் கருதாத அரசின் பிற்போக்கைs சுட்டிக்காட்டுவதோடு, சுயமுயற்சி யாரையும் முன்னுக்கு கொண்டுபோய்விடும் என்பதை தன் காட்டமான கதையாடலின் வழி நீரூபிக்கிறார் இளஞ்செல்வன்.வேலைக்காக நேர்முகத்தேர்வுக்குச்சென்றுவரும் நாயகன் ஒவ்வொருமுறையும் இந்த வேலை கண்டிப்பாய்க்கிடைத்துவிடும் என்று நம்பிக்கையோடு இருக்கும் ஒவ்வொரு வேளையிலும், தனக்கு வரும் கடிதங்கள் ‘டெஙான் டுக்கா சித்தாஞா’ (வருத்தத்தோடு தெரிவிப்பது என்னவென்றால்) என்ற தொடங்கி இந்த வேலை தேர்வில் தான்தோல்விகண்ட செய்தியையே தாங்கி வருவது பின்னாளில் எதிர்பார்த்த வழக்கமாகிவிடுகிறது. மனம் நொந்து நூலாகிபோன சந்தர்ப்பத்தில்தான் தன்னோடு படித்த ஒரு சீன நண்பரை சுங்கைப்பட்டாணி மருத்துவ மனை வாசலில் சந்திக்கிறான் நாயகன்.(அப்போது அவர் வசித்த வீடருகேதான் அந்த மருத்துவமனை இருந்தது)அரசு வேலையை எதிர்பாராமல், தன் தந்தையின் சிறு வியாபாரத்தில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டு தன் வாழ்க்கைப்படிகளில் வெற்றியோடும் வெறியோடும் ஏறிச்செல்வதை அறிந்து ,தானும் சுயகாலில் நிற்க முனைந்து அதில் ஈடுபட்டு வெற்றிநடை போடுகிறான்.ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் இயங்குவதும்,தான் குடும்பத்தையும் அதில் ஈடுபடவைப்பதும்,தினமும் வியாபாரம் முடிந்து கல்லா கட்டும்போது கிடைக்கும் ஆதாயத்தையும் கணக்குப்பார்த்து, அத்துறையில் தன் ஒளிமயமான எதிர்காலத்தை பார்க்கமுடியும் எனவும் நம்பிக்கைகொள்ளும் நேரத்தில்தான், முன்பு ஒருமுறை அவன் நேர்முகத்தேர்வுக்குச்சென்று வந்த வேலை ஒன்றில் சேரும்படி உத்தரவு வருகிறது.இப்போது கடிதம் எழுதுவது அவன் முறையாகிறது.ஒரு கதையின் வெற்றியை அதன் அலாதியான முடிவு முன்வைத்து உச்சம் அடைகிறது கதை.அப்போது ’டெஙான் டுக்க சித்தாஞா நான் இந்த வேலை ஏற்றுக்கொள்ளமுடியாது, என்று எழுதுகிறான்.கதையை வாசிக்கும் வேலை தேடும் இளஞனுக்குப் புதிய நம்பிக்கை ரத்தம் பாய்ச்சும் கதை இது.கதையில் கண்டிப்பாய் சமூகப்பிரக்ஞை வேண்டும் என்று கேட்பவருக்கும் சரி, கதையின் முடிவு எதிர்பாராத திருப்பத்தை தரவேண்டும் என்று சொல்பவருக்கும் சரி,கதை முடிந்து கடைசி வரியில்தான் தொடங்கவேண்டும் என்று அறிவுறுத்துபருக்கும் சரி, இக்கதை முழு திருப்தியை கொடுத்துவிடுவதில் பின்வாங்கவில்லை.உணர்வுப்பூர்வமாக நகர்த்தப்பட்ட இக்கதை வாசகனை சென்றடைவதிலும் அவனை சுய பரிசோதனை செய்துவைப்பதிலும் முழு வெற்றி பெறுகிறது.
இளஞ்செல்வன் கதை சொல்லும் பாங்கு புதிய பாணியை அறிமுகப்புடுத்தியதால் பரவலான வாசகப்பெருமக்களை சென்று அடைந்தது.இன்றைக்கு கோட்பாட்டியல் பற்றி நிறையப்பேசுகிறோம். இதனை சத்தமில்லாமல் அன்றே அறிமுகப்படுத்தியவர் இளஞ்செல்வன்.அதற்கு மிகபொருத்தமான கதை ‘பாக்கி’.பெண்ணடிமைத்தனத்தையும்,ஆணாதிக்க மனோபாவத்தையும் கதையின் கருப்பொருளாக்கி புனையப்பட்டது. தோட்டப்புறத்துப்பெண்களைக்கதைக்களமாக கொண்ட இது கனையாழி இதழிலும் வெளியிடப்பட்டது.கணவனுக்கு முன்னாலேயே விடிகாலையிலேயே எழுந்து ரப்பர் மர்க்காட்டுக்கு செல்பவள், வீட்டுக்குத்திரும்பிய பின்னரும் வீட்டு வேலையில் மூழ்கி இரவு உறங்கப்போகும்வரை ஒயாமல் வேலை செய்கிறாள்.அக்கடா என்று சிமிந்துத்தரையில் பாயை விரித்து களைப்போடு படுக்கும் தருணத்தில் கள்ளுக்கடையில் குடித்துக் கும்மாளமிட்டுவிtடு வந்த கணவன் அவளை களவிக்காகத் தொடுகிறான்.”இது ஒன்னு பாக்கி இருக்கா” என் முனகியவாறே உடல் களைப்பால் துவண்டுபோன நேரத்திலும் கணவனின் ஆசைக்கு உட்ன்படுகிறாள் மனைவி.பெண்ணிய சிந்தனை சார்ந்த காதாலட்சணத்தைப் பிசிறில்லாமல் பிரதிபலிக்கிறது கதை.பெண் வர்க்கத்தைப் பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாக்குவதையும், அவர்களின் உடல் உழைப்பையும் ஈவிரக்கமின்றி உறிஞ்சும் ஆணாதிக்க வழமையையும் கொஞ்சம் அசைத்துப்பார்க்கும் கதையாக இது வெளிப்பட்டிருந்தது. எனக்குத்தெரிந்து மலேசியப் பெண் எழுத்தாளர்கள்கூட, பெண்களுக்கு எதிரான வக்கிரங்களை எழுதியதாக எனக்கு நினைவில்லை.
அவர் எழுதிய முக்கால்வாசிக்கதைகள் இன்றளவும் உயிர்ப்போடு இயங்குபவை.அவரின் கதை சொல்லும் பாங்கு,கதைக்களன்,வீர்யம் மிகுந்த சொல்லாடல் மலேசியக் கதையுலகுக்கு இன்றளவும் பெருமை சேர்ப்பவை.
கோ.புண்ணியவான்

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...