மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்


கோ.புண்ணியவான்.

பகுதி 1

மலேசிய படைப்பிலக்கியத்தின் வரலாறு 1876 லேயே தொடங்கிவிட்டதாக ஆய்வாளர்கள் தக்க சான்றுகளோடு முன்வைக்கிறார்கள். பினாங்கில் 1876 ல் தங்கை நேசன் என்ற தலைப்பில் மலேசியாவின் முதல் பத்திரிகை அச்சாகி வருகிறது.மலேசியாவில் புனையப்பட்ட முதல் இலக்கிய வடிவம் மரபுக்கவிதைதான்.ஆனால் முதல் புதுக்கவிதை பிறந்தது 1964 ஆம் ஆண்டுதான்.

மலேசியாவில் புதுக்கவிதை விதை நடப்பட்டு இன்றைக்கு கிட்டதட்ட அரை நூற்றாண்டை எட்டிப்பிடிக்கவிருக்கிறது.

முதல் மரபு மீறிய கவிதை கள்ளப்பார்ட்டுகள் என்ற தலைப்பில் சி.கமலநாதனால் எழுதப்பட்டு தமிழ் முரசு ஞாயிறு பதிப்பில் வெளியானது.இது பிரசுரமான ஆண்டு 1964.மதியின்றிப் பிதற்றுவதும்

இங்கு

உள்ளதைத்தின்று,

ஊதிப்பெருப்பதல்லால்

உருப்படியாய் செய்வதென்ன?

என்று அடியெடுத்துக்கொடுக்கிறார் சி. கமலநாதன். இவரே மலேசிப்புதுக்கவிதைகளின் முன்னோடி என்று தயங்காமல் குறிப்பிடலாம்.இவரைத் தொடர்ந்து பைரோஜி நாராயணன், எம்.துரைராஜ், அக்கினி, ராஜகுமாரன், ஆதிகுமணன், எம்.ஏ. இளஞ்செல்வன் என புதுக்கவிதைக்கான முதல் தலைமுறை எழுத்தாளர்கள் தோன்றுகிறார்கள்.

புதுக்கவிதைக்கு அல்லது மரபு மீறிய கள்ளப்பார்ட்டுக்கு தமிழ் முரசு சுவீகரித்திருந்தாலும் அதனை உச்சி முகர்ந்து உளப்பூர்வமாக அங்கீகாரம் கொடுத்தது அன்றைய தமிழ் மலர் நாளேடு.இருப்பினும் பல்வேறு காரணங்களால் புதுக்கவிதை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.அப்போது மரபுக்கவிதைகள் ஆழாமாகக்காலூன்றி, யாப்பறிந்து நிறைய எழுதாளர்களையும் அதற்கான விரிந்த வாசக வரவேற்பையும் அது பெற்றிருந்ததால் யாப்பை முறித்த இந்த புதிய வடிவம் வரவேற்பைப் பெறத்தவறியது. இந்த வடிவம் மரபு சார்ந்த மொழியை அழித்தொழித்துவிடும் என்ற அவர்களின் பாசிஸ மனோபாவமும், தார்மீகக் கோபமுமே புதுக்கவிதை வளர்ச்சியைக் கொழுந்திலேயே கிள்ளி எரிந்து விடுவதற்கான காரணியாகவும் அமைந்தது.அன்றைக்கு வெளியாகிக்கொண்டிருந்த பத்திரிகைகளும் வார மாத ஏடுகளும், மரபுக்கவிதைக்குக்கிடைத்த மரியாதையைக் காரணமாகக்காட்டி, புதுக்கவிதைக்கான வாசலைத் திறந்துவிட மறுத்தன.யாப்பிலக்கணத்தோடு எழுதப்படுவதே கவிதை, மற்றவையெல்லாம் கவிதைகளாக ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்த்தரப்பிலிருந்து (மரபுக்கவிஞர்களும், அதனை ஆதரிப்பவர்களும் ) குரல் கொடுத்து ‘கொடி பிடிக்க’ஆரம்பித்தனர். பின்னர் இதுவே கவிதை ஆர்வலர்களிடையே அச்சு ஊடகம் வழி ஒரு காத்திரமான சர்ச்சையை ஆரம்பித்து வைத்தது.

Comments