Skip to main content

10. சீனப் பெருஞ்சுவருக்கு ஒரு பயணம்


                            

          வேனில் இருந்து பார்க்கும் போதே அதன் பிரம்மாண்டம் மலைக்க வைத்தது. மலை உச்சி முனைகளில் பெரும் பாலமாக தொடர்ச்சியாக  முடிவற்று நகர்கிறது பெருஞ்சுவர்..

           வேனிலிருந்து இறங்கி, ஒரு மேடான நிலப்பகுதியில் ஏறி உச்சிக்குச் சென்று கேபல் காருக்காக டிக்கெட் எடுத்துக் கொண்டோம். பெருஞ்சுவரை அடையும் முன்னர் இரு மருங்கிலும் நிறைய நினைவுபொருட்களை விற்கும் கடைகள். அங்கே பலர் ஆங்கிலம் நன்றாகப் பேசுகிறார்கள். சுற்றுலாப் பயணிகள் செல்லும் இடங்களிலெல்லாம் ஆங்கிலம் பேசும் சீனர்களைப் பார்க்க முடிகிறது. உணவு விடுதியில் நமக்கு என்ன வேண்டுமென்பதை சைகை மொழியில்தான் சொல்லவேண்டும். அல்லது மெனுவைக் காட்டிதான் ஆர்டர் கொடுக்கவேண்டும். ஏனெனில் பறப்பன, நடப்பன, ஊர்வன  எல்லாவற்றையும் விதம் விதமாக சமைத்து உண்ணும் இனம் சீன இனம். நன்றியுள்ள வாலாட்டும் பிராணியும், சிவன் கழுத்தில் சுற்றி படமெடுக்கும் ஊர்வனவும், நடிகர் ராமராஜனின் உற்ற நாலு கால் நண்பனும், எல்லா உணவகங்களிலும் கிடைக்கும்மாதலால் சீனாவில் உணவு சுவையானது என்கிறார்களோ என்னவோ!

ஒவ்வொரு முறையும்," நல்லா சொல்லுப்பா அத கொண்ணாந்து வச்சிரப் போறான்," என்று எச்சரிக்க வேண்டும்.சில சமயம் சாப்பிட்ட பிறகு, " அந்த பச்ச மொளகாவும் கேரட்டும் போட்டுக் கொண்ணாந்தான அது என்னா தெரிமா?" என்று நம்மை வாந்தியெடுக்கும் நிலைக்கு பயமுறுத்தி விளையாடுவார்கள்!

கேபல் காரில் ஒரு ஐந்து நிமிடத்தில் மலை உச்சியை அடைந்துவிடலாம். அங்கிருந்து கொஞ்ச தூரம் நடந்து பெருஞ்சுவரை ஸ்பரிசிக்க முடியும்.

கிட்டதட்ட 10 அடி உயரத்துக்கு அஜானுபாகுவாய் எழும்பி நிற்கிறது அந்தத் போர்த்தடைச்சுவர். ஆறடி அகலத்து உள்ளே நடந்து செல்ல இடமிருக்கிறது. சுவர் மலை உச்சியின் ஏற்ற இறக்கத்துக்குத் தகுந்தார்போல  கட்டப் பட்டிருக்கிறது.சுவரின் உள்நடைப் பாதையிலிருந்து வெளியே நம் பார்வை வெகு தூரத்துக்கு  பாய்கிறது. வெறும் கல் மலைகள். கல்லில் விளையும் மரம் செடிகளையே ஆங்காங்கே பார்க்கமுடிகிறது. எல்லா இடத்திலும்  போர்த்திக் கிடக்கிறது பனி. சுவரில் உள் பகுதியில் கூட வெயில் விழ விழ பனிக்கட்டி கறைந்து வழுக்கலாகிவிடுகிறது.

பெருஞ்சுவர் தென் சீன எல்லையில் கிழக்கிலிருந்து வடக்கு எல்லைவரை நீள்கிறது. இதன் கட்டுமானம் 7ஆம் நூற்றாண்டில் துவங்கி  14ஆம் நூற்றாண்டு வரை நீண்டிருக்கிறது.  ஷி ஹுவாங் தீ என்ற புகழ்பெற்ற சர்வாதிகாரிதான் பெருஞ்சுவரைக் கட்டத் தொடங்கியவன். நாடில்லாத வாழும் நோமாட் போன்றவர்களின் ஊடுருவலைத் தடுக்கும் காரணத்துக்காகத்தான் முதலில் சுவர் எழுப்பப் பட்டது. பின்னர் மஞ்சூரிய, மங்கோலிய படைகள் சீனாவைக் கைப்பற்றி விடக்கூடாது என்பதற்காக போர் அடிமைகளை வைத்தே இதனை மேலும் விரிவாக கட்ட முற்பட்டிருக்கிறார்கள். கிழக்கில் ஷன்ஹை குவானில் தொடங்கிய சுவர் வடக்கில் லொப் லேக், மங்கோலிய எல்லை வரை நீண்டு மூச்சு வாங்கி நிற்கிறது. அதன் அப்போதைய நீளம் 8850 கிலோ மீட்டராகும். அதாவது 5500 மைல்களாகும்.இப்போதைக்கு அதன் நீளம் கொஞ்சம்தான் குறைவு. அது சிதிலமடைந்ததுதான் காரணம். ஆனாலும் சீரமைப்பு எல்லா காலங்களில் நடந்தே வருகிறது.எத்தனை நூற்றாண்டுகளாக, எத்தனை லடசம் போர் அடிமைகளால் அது கட்டப் படிருக்கும் என்று சிந்தித்துப் பார்க்கவே முடியவில்லை. இப்பெருஞ்சுவர் மலை உச்சியை மட்டும் ஊடுறுத்துச் செல்லவில்லை, பாலைவனம் ஆறு என பல தடைகளைக்கடந்து நெடுஞ்சாலைபோல முடிவற்று கிடக்கிறது.

நீளும் சுவருக்கு இடையேயான அறை போன்ற ஒன்றை நீங்கள் படத்தில் பார்க்கும் இடம், காவலர்களுக்கான ஓய்விடங்கள். உள்ளே படுக்கை அறையும் இருக்கிறது. அதனை  watch tower  என்று அழைக்கிறார்கள். அங்கிருந்து எதிரிகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க முடியும்.

ஷி ஹுவாங் தீ என்ற சர்வாதிகார மன்னர்  மிகப் பலம் வாய்ந்த மன்னராகப் போற்றப்படுபவர். இவர் கின், வேய்,சௌ, யான், போன்ற மாநிலங்களைக் கைப்பற்றி கின் டினாஸ்டியை நிறுவுகிறார். அங்கெல்லாம் பெருஞ்சுவரைக் எழுப்பியும் இருக்கிறார்.( இவன்தான் கன்பூசியஸ் என்ற அறிஞரின் நூல்களை தீயிட்டுக் கொளுத்தியவன்)

நான் ஏற்கனவே சொன்னதுபோல சீனாவின் ஆகக் கடைசி ஆட்சி வம்சம் (டினாஸ்டியான) மிங் ராஜ பரம்பரையின் ஆட்சியின் போதே சுவர் வேலைகள் முடிந்திருக்கின்றன. மன்னராட்சி தொடர்ந்திருந்தால் சுவர் இன்னும் நீண்டிருக்கலாம். ஆனால் லீ என்ற போராளி மக்களைத் திரட்டிப் புரட்சி செய்து, மன்னராட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

இங்கேதான் வெகு நேரம் நின்றுநிழற்படங்கள் எடுத்தோம். ஒரு கிலோ மீட்டர் தூரம் பெருஞ்சுவரிலேயே நடந்து அதன் பிரம்மாண்டத்தை பார்த்து வியந்து போனோம்.
கீழே இறங்கி வந்த போது  நினைவுப் பொருட்கள் விற்கும் சிறு வனிகர்கள் நம்மை விடுவதாயில்லை. பிச்சுப் பிடுங்கி எடுத்து விடுவார்கள். ஆனால் இவர்களின் பிடுங்கல்கள் இந்திய அங்காடி வியாபாரிகளின் பிடுங்கல்கள் போலல்ல! இந்திய சிறு வனிகர்கள நம்மைப் பின்தொடர்ந்து வந்து செய்யும் பிடுங்கல்களோடு ஒப்பிடும்போது, சீனாவில் பரவாயில்லை என்றே தோன்றும். ஒருமுறை தாஜ்மஹால் பார்த்துவிட்டு வரும்போது வண்டிவரை வந்து பின்னர் ஒடும் வண்டியைத்தொடர்ந்து மூச்சு வாங்க தொடர்ந்தபடி வந்து வாங்கும்படி நச்சரித்தார்கள். இப்படி விரட்டும்போது சிலர் தொல்லை தாங்காமல் வாங்கியும் விடுவதால் இந்த விற்பனைத் தந்திரத்தை தொடர்து கடைபிடிக்கிறார்கள் இந்திய சிறு வனிகர்கள்.
மலையிலிருந்து இறங்கி வரும்போது பொருட்களை விலை பேசி வாங்குவதற்கே தாமதமாகிவிட்டது. மணி நான்குக்கு மேல் ஆகவே இருள் சூழ ஆரம்பித்தது. மைக்கல் உடனே புறப்படவேண்டும் பாதை வழுக்கலாக இருக்கும், மெதுவாகத்தன் செல்லவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். பிற நாட்டுப் பொருட்களின் மேல் உள்ள ஆசை யாரை விட்டது. 
நாங்கள் விடுதி வந்து சேரும் போது மணி ஏழரை யாகிவிட்டது. குளித்துவிட்டு விடுதியிலிருந்து நடை தூரத்திலுள்ள உணவகத்துக்கு செல்ல ஆரம்பித்தோம்.
வெளியே சில்லிட்ட குளிர்க் காற்று எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தது! ளிக்லாம். 










                கேபல் காரில்(கண்டிப்பாக அது இப்படிப் பக்கவாட்டில் நகரவில்லை).
                                  
                           மலைகளின் உச்சியில் பெர்ஞ்சுவர் நீள்கிறது
 
நாளாநாளாகுளிரின் வேகம் கூடிக்கொண்டே போகிது. நான் கட்டுரை எழுதும் இத்ருணம் குளிரைச் மாளிக்முடியாமல் சீனாவில் இறப்புகள் நிகழ்ந்வாறிருக்கின்றன என்று வல்ள் ருகின்ன.

தொடரும்..... 







Comments

ஆசிரியர் என்பதால், கதைகளையும் சரித்திர நிகழ்வுகளையும் மிக அருமையாக நுழைத்து கட்டுரையைச் சொல்லியுள்ள விதம் கவர்கிறது சார். என்னுடைய கனவு இடம் இந்த கிரேட்வோல், குளிரின் கடுமை பயங்கரமாகவே இருக்கின்றது. உணவு பற்றிய தகவல்கள் நகைச்சுவை.. அருமை. முடிந்துவிட்டதா? தொடரும்... என்கிற சொற்றொடர் காணோமே.
ko.punniavan said…
அன்புள்ள விஜி,

தொடரும் என்ற சொல்லை எழுத மறந்துவிட்டேன். இப்போது எழுதி விடுகிறேன். நீங்கள் பகுதி ஒன்பதை படித்தீர்களா? ஒரு கால் அதை நீங்கள் கடந்து வந்திருக்கலாம்.பாருங்கள்.

நன்றி.
விடுவேனா.. படித்தேன் சார். பின்னூட்டம் இடவில்லை. தொடருங்கள்.. தொடர்கிறேன்.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த