Skip to main content

யாருமற்றவர்களின் மறைவு


 

உடன் யாருமற்றவர்கள்

யாருமற்றவர்களாகவே

இறந்துபோகிறார்கள்

 

உள் தாழ்ப்பாளின்

முழு பாதுகாப்புடன்

நடந்தேறுகிறது அவர்கள் இறப்பு

 

திரும்ப அழைக்கக்கூடுமென்றே

நம்பித் தொலைக்கிறது

பதிலற்ற தொலைபேசி அழைப்புகள்

 

சேர்ந்தும் சேராது

நிரம்பி மினுக்கிட்டபடியே

காத்திருக்கின்றன

குறுந்தகவல்கள்

 

வேலையிடத்தின் பதிலற்ற அழைப்புகள்

பொறுப்பற்றவன் என்ற

நிர்வாகக் கோபத்தில்

கனன்றுவிடுகிறது

 

பிள்ளைகள் தொடர்புகள்

எரிச்சலூட்டி அடங்கும்போது

அப்பா எப்போதும் போலவே

வெளிநாடு சென்றிருக்கலாமென

ஆசுவாசப்படுகின்றன

 

 

தொந்தரவாகுமென்ற மருகலே

கதவு தட்டல்கள்

இரண்டு முறைக்குபிறகு

நிராகரித்துவிடுகின்றன

 

பதிலற்றபோது

கடன் கொடுத்தவன் மனம்

இவன் இறந்திருக்ககூடாதென்றே

வேண்டிக்கொள்கிறது

 

இறந்த பின்னும் நீடிக்கிறது

உயிரோடிருந்தபோது

நிலை கொண்ட

வீட்டின் மௌனம்

 

இருட்டிலிருந்து மீண்ட

மின்விசிரி வெளிச்சத்தில்

மேலும் இரைந்து

சுழன்றுகொண்டிருந்தது

 

தான் செத்துப்போனால்

யாருக்கும் தெரியாமல் போய்விடுலாம்

என்ற கவலை

இனி ஒருபோதும்

அதற்கில்லை

 

 

                         

Comments

மனதை என்னவோ செய்கின்றன இக்கவிதைவரிகள். இப்படித்தான் நடக்குமென்றால், நான் கூவிக்கொண்டு கூடிவாழவே ஆசைப்படுகிறேன்.
ko.punniavan said…
நன்றி விஜி. என் நண்பர் ஒருவர் தனித்து வாழும்போது உண்டான அனுபவம்.
ஐயா வணக்கம்.நான் கல்லூரி பேராசிரியர். என் மாணவர்களின் முனைவர் பட்டத்திற்காக மலேசிய படைப்புகளைத் தரலாம் என நினைத்துள்ளேன.தங்களின் படைப்புகள் மற்றும் ரெ. கார்த்திகேசு ஐயாவின் படைப்புகள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் எங்கு கிடைக்கும்?தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்.
ஐயா வணக்கம்.நான் கல்லூரி பேராசிரியர். என் மாணவர்களின் முனைவர் பட்டத்திற்காக மலேசிய படைப்புகளைத் தரலாம் என நினைத்துள்ளேன.தங்களின் படைப்புகள் மற்றும் ரெ. கார்த்திகேசு ஐயாவின் படைப்புகள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் எங்கு கிடைக்கும்?தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்.
ko.punniavan said…
பேராசிரியர் பிரேமலதா, நன்றி. தமிழகத்தில் எங்கள் நூல் கிடைப்பது அரிது. தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகத்தில்,ஆதிகுமணன் நூலகத்தில என்னுடைய முதல் மூன்று சிறுகதை தொகுப்புகள் சேகரித்து வைத்துள்ளார்கள். மற்றபடி கடைகளில் மலேசிய நூல்களை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் அன்புக்கு நன்றி.
மலேசியாவிலிருந்து ரெ.கா புலோக் போய்ப்பாருங்கள்.
MUNIANDY RAJ said…
அருமையான கவிதை. தனிமையின் மரணத்தில் காணாமல் போனவர்களின் அவலக்குரலாய் ஒலிக்கிறது..! தனிமையில் மரணிப்பது உண்மையில் கொடுமைதான்.... மிகச் சிறப்பான வரிகள்

Popular posts from this blog

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

யானையின் பாதத்தடம்

                                         இ ம்முறை வல்லினம் விருது பி.எம் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மூர்த்தியையுடனான என் அனுபவப் பகிர்வு இக்கட்டுரை.           மூர்த்தியை நான் முதன் முதலில் ஜித்ரா ஐ ஏ பி கல்விக் கழகத்தில்தான்   சந்தித்தேன். இது நடந்து கிட்டதட்ட 35/40 ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்கள் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு தற்செயல் அல்ல அது ஏதோ ஓர் ஏற்பாடு என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை. குளிர்சாதன வசதி இல்லாத அறை அது. இரவில்கூட வெக்கை உக்கிரமாகத் தாக்கும். 30 மைல்கள் ஓடிவிட்டது போல வியர்த்துக் கொட்டும். இரு முறை மும்முறை இரவில் குளித்தவுடனும் வியர்க்கும். இவ்வாறான கையறு நிலையில் உஷ்ணத்தைக் குறைக்க சில அசட்டுத்தனமான யோசனைகள் தோன்றுவது இயல்பு. உறக்கம் வராமல் தவித்துபோது , சிமிந்துத் தரையில் வாலி வாலியாக தண்ண...