யாருமற்றவர்களின் மறைவு


 

உடன் யாருமற்றவர்கள்

யாருமற்றவர்களாகவே

இறந்துபோகிறார்கள்

 

உள் தாழ்ப்பாளின்

முழு பாதுகாப்புடன்

நடந்தேறுகிறது அவர்கள் இறப்பு

 

திரும்ப அழைக்கக்கூடுமென்றே

நம்பித் தொலைக்கிறது

பதிலற்ற தொலைபேசி அழைப்புகள்

 

சேர்ந்தும் சேராது

நிரம்பி மினுக்கிட்டபடியே

காத்திருக்கின்றன

குறுந்தகவல்கள்

 

வேலையிடத்தின் பதிலற்ற அழைப்புகள்

பொறுப்பற்றவன் என்ற

நிர்வாகக் கோபத்தில்

கனன்றுவிடுகிறது

 

பிள்ளைகள் தொடர்புகள்

எரிச்சலூட்டி அடங்கும்போது

அப்பா எப்போதும் போலவே

வெளிநாடு சென்றிருக்கலாமென

ஆசுவாசப்படுகின்றன

 

 

தொந்தரவாகுமென்ற மருகலே

கதவு தட்டல்கள்

இரண்டு முறைக்குபிறகு

நிராகரித்துவிடுகின்றன

 

பதிலற்றபோது

கடன் கொடுத்தவன் மனம்

இவன் இறந்திருக்ககூடாதென்றே

வேண்டிக்கொள்கிறது

 

இறந்த பின்னும் நீடிக்கிறது

உயிரோடிருந்தபோது

நிலை கொண்ட

வீட்டின் மௌனம்

 

இருட்டிலிருந்து மீண்ட

மின்விசிரி வெளிச்சத்தில்

மேலும் இரைந்து

சுழன்றுகொண்டிருந்தது

 

தான் செத்துப்போனால்

யாருக்கும் தெரியாமல் போய்விடுலாம்

என்ற கவலை

இனி ஒருபோதும்

அதற்கில்லை

 

 

                         

Comments

மனதை என்னவோ செய்கின்றன இக்கவிதைவரிகள். இப்படித்தான் நடக்குமென்றால், நான் கூவிக்கொண்டு கூடிவாழவே ஆசைப்படுகிறேன்.
ko.punniavan said…
நன்றி விஜி. என் நண்பர் ஒருவர் தனித்து வாழும்போது உண்டான அனுபவம்.
ஐயா வணக்கம்.நான் கல்லூரி பேராசிரியர். என் மாணவர்களின் முனைவர் பட்டத்திற்காக மலேசிய படைப்புகளைத் தரலாம் என நினைத்துள்ளேன.தங்களின் படைப்புகள் மற்றும் ரெ. கார்த்திகேசு ஐயாவின் படைப்புகள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் எங்கு கிடைக்கும்?தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்.
ஐயா வணக்கம்.நான் கல்லூரி பேராசிரியர். என் மாணவர்களின் முனைவர் பட்டத்திற்காக மலேசிய படைப்புகளைத் தரலாம் என நினைத்துள்ளேன.தங்களின் படைப்புகள் மற்றும் ரெ. கார்த்திகேசு ஐயாவின் படைப்புகள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் எங்கு கிடைக்கும்?தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்.
ko.punniavan said…
பேராசிரியர் பிரேமலதா, நன்றி. தமிழகத்தில் எங்கள் நூல் கிடைப்பது அரிது. தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகத்தில்,ஆதிகுமணன் நூலகத்தில என்னுடைய முதல் மூன்று சிறுகதை தொகுப்புகள் சேகரித்து வைத்துள்ளார்கள். மற்றபடி கடைகளில் மலேசிய நூல்களை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் அன்புக்கு நன்றி.
மலேசியாவிலிருந்து ரெ.கா புலோக் போய்ப்பாருங்கள்.
KAVIN said…
அருமையான கவிதை. தனிமையின் மரணத்தில் காணாமல் போனவர்களின் அவலக்குரலாய் ஒலிக்கிறது..! தனிமையில் மரணிப்பது உண்மையில் கொடுமைதான்.... மிகச் சிறப்பான வரிகள்