Skip to main content

பயணக் கட்டுரை 3 - இருபதும் எழுபதும்


3. விழுமிய மறுப்பு     


டாக்டர் மிமி-யின் வீட்டைக் கண்டுபிடிக்கச் சற்றே சிரமமாகத்தான் இருந்தது. நான் ஹரியிடம் சொன்னேன், நாம் தமிழ் நாடு வந்துவிட்ட தகவலை அழைத்துச் சொல்லிவிட்டால் அவர்கள் பதற்றமில்லாமல் இருப்பார்கள் என்று. முதன் முதலாக ஒருவர் நம்மை வரவேற்கக் காத்திருக்கிறார் அவருக்கு பதற்றம் தரவேண்டாம் என்றேன். வேண்டாம்,  அவர்களுக்கு நாம் இன்ப அதிர்ச்சி கொடுப்போம் என்றார் . ஆனால் அப்போதே ஒரு மணி நேரத் தாமதம் உண்டாகிவிட்டது . இதோ இதோ என்று வந்துவிட்டோம் என்று ஆட்டோ ஓட்டுனர் கூறிக்கொண்டே இடத்தைத் தவறவிட்டு கண் கொண்டே இருந்தார். மாதாகோட்டையில் கிருஸ்துவ நண்பர்கள் அதிகம் போல தோன்றியது. கிரிஸ்துமஸ் பெருநாள் கொண்டாட்டக் கலை கூடியிருந்தது. அங்கே, ஓர் அழகிய தேவாலயம் மாதாகோட்டை என்ற ஊர் பெயருக்குப்  பொருத்தமாக அமைந்திருந்தது. ஒருவழியாக அவரது வீட்டைக் கண்டுபிடித்ததில் நிம்மதியாக இருந்தது. மாதாகோட்டை சேவேரியர் தெருவில் ஒரு வீட்டின்முன் இறங்கி மருத்துவர் மிமி-யின் இல்லம் குறித்து விசாரித்தோம். அவர், எதிர்வீட்டைக் காட்டினார். எதிர் வீட்டின் மேல் தளத்தில் மருத்துவர் மிமி கையசைத்துப்  புன்னகைத்தபடி எங்களுக்காகக் காத்திருந்தார். திருச்சியில் வந்திறங்கி, நேரே தஞ்சைக்கு வந்துவிடுங்கள். கண்டிப்பாக எங்கள் வீட்டில்தான் தங்க வேண்டும் என்பது அவரது அன்புக் கட்டளை.வலிந்து சொன்னதால் அந்த கரிசனத்தைத் தவிர்க்க இயலவில்லை. எங்களது வருகைக்காக நீண்ட நேரம் எதிர்பார்த்து நின்றதே, எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பாக இருந்தது.       
மருத்துவர் மிமி, ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் அவசரப் பிரிவு மருத்துவ விரிவுரையாளராகப்  பணியாற்றி வருகிறார். ஹரியின் விரிவுரையாளர். ரஷிய கேர்ஸ்க் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற அவர், தனது மேற்படிப்பைத் தமிழ்நாட்டில் மதுரையில் தொடர்ந்தவர். எங்களுக்கு முன்பின் அறிமுகமில்லாத அவரது கணவரும் எங்களை அன்பொழுக வரவேற்றார். புதிய இடத்துக்கு வந்திருக்கறோம் என்ற எங்கள் கூச்சத்தை விலகச்செய்தார்கள். அவரும், மருத்துவர் மிமியைப் போலவே அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவ நிபுணர். அன்றைய பணிக்குப் போகும் நேரம் நெருங்கிவிட்டாலும்  எங்களது குடும்பத்தோடு தொடர்பில் இருக்க    செறிவட்டை இரண்டைத் தயார் செய்து, எங்களது கைப்பேசியிலும் அதனைப் பொருத்திக் கொடுத்துவிட்டுத்தான் மருத்துவ மனை போனார். உடனே, வீட்டோடுத் தொடர்பு கொண்டோம். நலமோடு வந்து சேர்ந்துவிட்ட செய்தியையும் சொன்னோம். மிமி யின் அம்மாவும் உடனிருந்தார்கள்.விலங்கியல் துறையில் முதுகலை முடித்திருந்தார்கள். அவரின் புன்னகை முகம் கண்களில் நிற்கிறது. நாங்கள் வெகு நேரம் வயிற்றுக்கு உணவு கொடுக்காத காரணத்தால், பசி கடுமையாக இருந்தது. மருத்துவர் மிமி மதிய உணவைச் சுடச் சுடச் பரிமாறினார். ஆட்டிறைச்சி பிரியாணி, கோழிக் கறி, முட்டை  ரிஸ்தா என அமர்க்களப் படுத்தியிருந்தார். அவர் கைப்பட சமைத்தது என்றார். சமையலிலும் கைராசிக்காரர்தான். இருவரும் பசி அடங்க அடங்க உண்டோம். நாவும் வயிறும் இன்னும் இன்னும் என கேட்டுக்கொண்டே இருந்தது. பசி அடங்கியதும்தான் மற்றதை யோசிக்க முடிந்தது.  பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள்.அந்தப் பத்தில் இது இல்லையென்றால் இதனைப் பதினொன்றாகச் சேர்த்துக்கொள்ளலாம்.                               



கங்கை கொண்ட சோழபுரம் செல்வதே ஹரியின் முதல் நாளின் முதல் பயணத் திட்டம். அவர்களது காரிலேயே 2 மணி நேரப் பயணத்தில் அந்தப்  புராதன வரலாற்று இடத்தைச் சென்றடைந்தோம்.

 அரியலூரிலுள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோயிலும் தஞ்சை பெருவுடையார் கோயிலும் கட்டட அமைப்பில் ஓரளவு ஒத்து வந்தாலும் வேறுபாடுகள் நிறைந்தவை. இராஜ இராஜச் சோழனின் மகனான இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட் இந்தக் கோயிலின் நந்தி சுண்ணாம்பால் செய்யப்பட்டது. அதன் மேல் படும் சூரிய ஒளி மூலஸ்தான பெருவுடையார் மீது படுவது இக்கோயிலின் சிறப்பு. வடக்கே கங்கை வரை தனது எல்லையை விரித்ததன் வெற்றியாக, ஜெயங்கொண்டான் நகருக்குத் தனது தலைநகரை மாற்றி, தனது தந்தை எழுப்பிய தஞ்சை பெருவுரையார் கோயிலைக் காட்டிலும், பெரிய கோயிலொன்றை ஆங்கே நிறுவ திட்டம் கொண்டார். அதன் பயனாக உருவானதே கங்கை கொண்ட சோழபுரம். புற அமைப்பில் பெரியதாக இல்லையென்றாலும், ஆலயத்தின் பிரதானமானதாகக் கொள்ளப்படும் நந்தியும் சிவலிங்கமும் தமிழ்நாட்டிலேயே இங்குதான் பெரியது.  பெருவுடையாரின் கீழ் சந்திரகாந்தக் கல் பதிக்கப் பட்டுள்ளதால், வெயில் காலத்தில் குளிராகவும், குளிர் காலங்களில் சூடாகவும் இருக்கிறது இந்தத் ஸ்தல தீர்த்தக் கிணறுகள். இந்தக் கோயிலின் கும்பாபிஷேகத்தின் போது, தன்னிடம் தோற்ற மன்னர்களைக் கங்ககையிலிருந்து நீரைத் தலையில் சுமந்து வரப் பணித்து, அந்நீரைக் கொண்டே இராஜேந்திர சோழன் அபிஷேகம் செய்ததாக வரலாறு சொல்கிறது. 1025-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில்  ஐக்கிய நாட்டுச் சபையின் கல்வி, அறிவியல் , பண்பாட்டு நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது.



கோயிலின்  இடப்பக்கத்துமண்டபத்தில் தூணைப் பொறுத்திய பொறியியல் தொழில்நுட்பம் மிகவும் கலையம்சமானது. யானையாலும் அசைக்க முடியாத தூண்களைக் கொண்டு பொருத்தியிருக்கிறார்கள். சரியாகச் சொன்னால் கணக்காகக கச்சிதமாக வைத்திருக்கிறார்கள்.நான்கு தூண்களையும் கணமும் பிசகாத ஒரே நேரத்தில்.இம்மியும் இடமும் பிசகாக குறிப்பிட்ட இடத்தில் அடுக்கி இருக்கிறார்கள்.ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அசையாமல் அற்புதக் கட்டமைப்பு அது. இராஜேந்திரச் சோழன் , சோழ வம்சத்தின் சின்னமான புலியை இக்கோயிலின் இடப்பக்கத்தில் பெருஞ்சிலையாக வடித்துள்ளார்கள்.இச்சிலை தஞ்சை பெரிய கோவிலில் இல்லை என்பதே வியப்பு. எதற்காக ராஜ ராஜ சோழன் கட்டியது போன்றதொரு கோயிலைக் கட்ட வேண்டும்? இது என் சிற்றறிவுக்குப் புரியவில்லை.


அடுத்து நாங்கள் செல்ல வேண்டிய இடம் கும்பகோணம் ஐராவதேஸ்வரர் கோயில். 1 மணி நேரத்தில் அக்கோயிலைச் சென்றடைய வேண்டும். அதற்குள் இருட்டி விடும் போலிருந்தது. எங்கள் திட்டத்தில் காலம் இடையூறு செய்வதாக உணர்ந்தோம்.  நாங்கள் சென்ற நேரத்தில் இருள் கவிந்துவிட்டிருந்தது. இருந்தபோதிலும், கோயிலைப் பார்க்காமல் போவதில்லை என்பதில் திண்ணமாய் இருந்தோம்.  தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணத்தில் உள்ளது. இது இரண்டாம் ராஜராஜனால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுர கோயில் இக்கோயில் ஆகியவை ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அழியாப் பெருங்கோயிலாக காப்பாற்ற ப் பட்டு வருகின்றன.இந்தக் கோயிலின் சிறப்பென்னவென்றால், வாயிலின் முன் இசைப்படிகள் இடம்பெற்றிருக்கின்றன.


அவற்றைப் வேலியிட்டுப் பூட்டி வைத்துள்ளனர். பல ஆண்டுகளாய் ஏற்பட்ட சிதைவு மேலும் அப்படிகட்டுகளை நாசம் செய்யும் முன் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெடுப்பு இது. ஒரு பொக்கிஷத்தைப் பாதுகாக்கும் பண்பாட்டை நாம் வளர்த்துக்கொள்ளவில்லை. ஒரு வேளை வேலி போடாது விடப்பட்டிருந்தால், அப்படிக்கட்டுகள் மேலும் சிதைந்து போயிருக்கும். வரலாற்று இடங்களைப் பராமரிக்கும்  அடிப்படைக்  அறிவு கல்வி நிலையங்களில் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், நாமெல்லாம் வெறும் மதிப்பெண்கள் மீதே கவனம் செலுத்துகிறோம். எனவேதான், இந்த அவல நிலை.  இந்தப் படிக்கட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் இசையில் ஒலிக்கக்கூடியவை. ச,ரி,க,ம,ப,த,நி,ச,அ,உ,ம் ஆகியன அவற்றின் ஒலிகள். அதுபோக, இந்தக் கோயிலின் சிற்பங்கள் யாவும் பெரும் வியப்பை ஏற்படுத்துவன. மிக நுணுக்கமான கலை வேலைபாடுகளால் எழில் கொஞ்சும்  தளம்.





நான் வேறெந்த  ஸ்தலங்களிலும் இதுவரைக் கண்டதில்லை. எத்துணைச் சிறப்பான கலைஞர்கள் அந்த காலத்தில் இருந்திருக்கின்றனர். பன்னூறாண்டு கழித்தும் அழியா படைப்புகளுல் இதுவும் ஒன்று. நாம் இதையெல்லாம் இரசிப்பதற்கும் , பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாப்பதற்குமான மரபை  நம் முன்னோர் நம்மிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். இதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தும் அறிவை ஊட்ட வேண்டிய கடப்பாடு நம்முடையது. இந்தக் கோயிலின் சிற்பக் கலையின் சிறப்பைப் சொல்லும் வண்ணம் இன்னொரு சான்று. இந்தப் படத்தில் சிலைகள் செதுக்கப்பட்டுள்ள விதம், சமச்சீராய் இருப்பது.

 தலைமுறைகள் இதன் அவசியத்தை உணர வேண்டியிருக்கிறது.  நேரத்தோடு சென்றிருந்தால் இன்னமுமே அதிகம் பார்த்திருப்போம். இனி வரும் நாள்களில் பயணிக்க நிறைய இடங்கள் உள்ளதால், அன்றையப் பயணத்தை அங்கேயே முடித்துக்கொண்டு மருத்துவர் மிமி-யின் இல்லம் திரும்பினோம். மறுநாள், மதுரையை நோக்கி எங்களின் பயணம்...



நிகழும்...

Comments

சார். கட்டுரையை வாசித்தேன். அருமையான அனுபவப் பகிர்வு. சிந்தனைக்கு முன் வைக்கும் கருத்து அருமை. முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்றதைக் காக்கும் சிந்தனையும் வழிமுறையும் நமக்கு அவசியம் என்பதை நயமாகக் கூறியுள்ளீர்கள். தொடருங்கள்...

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...