Skip to main content

கவிதைக்கடவுளின் தரிசனமும் தூக்கம் துறந்த என் பின்னிரவுகளும்( 2009 ஆண்டின் முதல் மூன்று மாதப் புதுக்கவிதைகளின் ஆய்வு.கவிதைப்பற்றிய புரிதலை உண்டாக்க கல்லூரி மாணவர்களை முன்வைத்து எழுதப்பட்டது.)

கோ.புண்ணியவான்



வாசகனுக்குக் கவிதையைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் எது முகாமையான காரணியாக அமைகிறது?

கருவியா? கருப்பொருளா?

ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன்னால் புதுக்கவிதை நம் நாட்டில் கால்பதித்தபோது அது ஏற்படுத்திய மிக முக்கியமான வினா இது?அப்போதைக்கு இதற்கான பதிலைத்தரமுடியவில்லை.ஏனெனில் மரபுக்கவிதை தன் அகன்ற சிறகை விரித்து மன்னர் ஆட்சி புரிந்து வந்தது.ஆனால் காலம் செல்லச்செல்ல இதற்கானச் சரியான பதில் கிட்டியது என்பது படைப்பிலக்கியத்துறையைக் கூர்ந்து கவனித்து வந்தவர்களுக்குத்தெரியும்.கருவியைப் பின்தள்ளிவிட்டு கருப்பொருள் தன்னை வலுவாக நிறுவிக்கொண்டது. இருப்பினும் நம் நாட்டில் புதுக்கவிதை பிறப்பெடுத்த காலத்தில் இருந்த அதன் வீச்சு பிற்காலத்தில் சூம்பிப்போனது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்கள் ஆய்வாளர்கள்.புதுக்கவிதை எழுதுவதற்கு எந்தக்கட்டுப்பாடும் தேவையில்லை என்று படைப்பாளன் சிந்தித்ததன் பலனாக கவிதை ஆற்றினுள் கசடுகள்போல மிதக்க ஆரம்பித்ததன.இப்படி வரும் கவிதைகளை காகித ஊடகங்கள் பிரசுரத்ததின் பாதிப்பாகவே இன்றைக்கு கோப்பை நிரம்பி வழிந்தோடும் அளவுக்கு, குடும்பக்கட்டுப்பாடு செய்யாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகள் மாதிரி வத வத வென கவிதைகள் பெருகிக்கொண்டிருக்கின்றன. சீடுக்கட்டு மாதிரி வார்த்தைகளை ஒன்றின்மேல் ஒன்று அடுக்கிவைத்துவிட்டால் அது கவிதை ஆகிவிடும், என்ற புதியவர்களின் சுய கருத்தாக்கம்தான், புதுக்கவிதைகள், கண்டுகொள்ளப்படாத பழமரத்திலிருந்து புளித்த பழங்கள்போல பொலபொலவென்று கொட்டி சிதறி மிதி படுவதற்குக் காரணமானது.

இதற்கு ஒரு சின்ன உதாரணத்ததைச்சொல்லிவிட்டு ஆய்வைத்தொடரலாம் என நினைக்கிறேன். நாவல், சிறுகதை, கட்டுரை போன்றவற்றுக்கு உரைநடை தன்மை எவ்வளவு முக்கியமோ,அவ்வளவு முக்கியம் கவிதைக்கு கவித்துவம். பெரும்பான்மையினர் புனையும் கவிதையில் கவித்துவம் கடுகளவுக்குக்கூட இருப்பதில்லை.உரைநடைத்தன்மையிலேயே கவிதையும் இயங்குகிறது என்பதை இங்கே கவிதை ஆர்வலர்களுக்குச் சொல்லத்தான் வேண்டும்.இந்தக்கவிதையைப்படியுங்கள்.







மலேசியர்கள்

நூறு ஆண்டுகளுக்கு

முன்பு

கள்சுமந்து

கட்டிய

ரயில்

முனையங்கள்

அரசாங்கக்

கட்டங்கள்

இப்போதைய

புதிய தலைமுறையினருக்குத்

தெரியவில்லை

காரணம்

அன்று

வெள்ளையர்கள்

எழுதிய

சரித்திரத்தில்

இன்று

கருப்புமை

அடிக்கப்பட்டு

விட்டது.

இதே போன்று இன்னொரு வார்த்தை வரிசை வலது பக்கம் இருந்தால் இதுவும் ட்டுவின் டவராகிவிடும்.இதில் உரைநடையில் இயங்குகிறது.கவித்துவம் காணவில்லை.இதனை வாசித்து முடித்த வாசகனுக்கு சொற்கள் தரும் வெற்றுப்பொருளைத்தவிர வெறெந்த உணர்வையும் எற்படுத்தாது.அதற்குமேல் வாசகனின் சிந்தனை நகராது.கவிதை அவனுக்குள் பயணம் மேற்கொள்ளாது.நடு வழியில் பழுதாகிப்போன வாகனம் மாதிரி முடங்கிப்போய்விடும்.

ஒரு நல்ல கவிதை எப்படி இருக்கும்?



மூன்று முனையிலே

மூனு குளம் வெட்டிவச்சேன்

மூனுல ரெண்டு குளம் பாழ்

ஒன்னுல தண்ணியே இல்ல.



ஆரவாரமற்ற எளிய சொற்களால் புனையப்பட்ட கவிதை இது.இக்கவிதை அர்த்தத்தை முழுமையாக ரத்து செய்துவிட்டு, உணர்ச்சியை மிகநேர்த்தியாக பதிவு செய்கிறது. ஏழை விவசாயி, தண்ணீர் காணாத கிராமம், வரண்ட பூமி, அவனைச்சுற்றி வாடும் காய்ந்த வயிறுகள், அவனின் இருண்ட எதிர்காலம் என அடுக்கடுக்கான பரிமாணங்களில் வாசகனை முற்றிலும் உணர்வுத்தளத்தில் இயங்க வைத்துவிடுகிறது. இந்தச்சொற்ப வார்த்தைகளிலிருந்து சொட்டும் சோகம், கவிதையை வாசித்து முடித்த பின்னரும் அவனை கவிதையிலிருந்து நகரவிடாமல் தனக்குள்ளேயே வைத்துக்கொள்கிறது. இதைத்தான் நாம் கவித்துவம் என்கிறோம்.





காதலில் - சொல்ல வந்ததும் சொல்லில் வந்ததும்



புதுக்கவிதை தளத்துக்குள் புதிதாய் நுழையவரும் படைப்பாளர்கள், பெரும்பாலும் காதலையே பாடுபொருளாக எடுத்துக்கொள்கிறார்கள். அதில் தவறேதும் இல்லை.மனித உணர்வுகளிலேயே காதல் மனிதன் வாழும் எல்லாக்காலத்திலும் மேலோங்கிநிற்கும் .”எனக்கு காதலிக்கும் எண்ணமே வரவில்லை,” என்றால் அவனிடன் ஏதோ கோளாறு இருக்கிறது என்று பொருள்.பருவ வயதை அடைந்தவுடன் காதல் உணர்வு கட்டவிழ்ந்து உதிர ஆரம்பிக்கிறது.அது உதிரும் தருணத்தில் காதலைக் கவிதையாகவும் சிலர் தரிசிக்கிறார்கள்.காதலாகிக்கசிந்து கண்ணீர்மல்கி உருகும் வார்த்தைகளில் காதலைப் புனைகிறார்கள்.அப்படி புனையும்போது அவனிடம் இருக்கும் சொற்ப வார்த்தைகளைக்கொண்டே கவிதை உதயமாகிறது.அதனைப்புனைந்தவன் மட்டுமே அதன் அதீத உணர்ச்சியில் லயித்து மகிழ்வானே தவிர, வாசகனிடம் அசைவையோ,அலையையோ உண்டாக்குவதில்லை. அவன் உணர்ந்ததை உணர்ந்தவாறு சொல்ல வரவில்லை.சினிமா மொழியில் சொன்னால் ‘வரு....ம்..... ஆனா வரா....து .“இது ஏன் உண்டாகிறது. தன் சொல்வங்கியில் சேமித்து வைத்துள்ள வார்த்தைகளின் எண்ணிக்கை அவ்வளுதான்.திவாளாகிக்கொண்டிருக்கும் ஒருவனின் சொல்வங்கியிலிருந்து எடுதுக்காட்டாக ஒரே ஒரு பருக்கை.

என் இதயத்தில்

உனக்கு அமைத்திருக்கிறேன்......

ஒரு சிம்மாசனம்

என்று வந்து அமரப்போகிறாய்

சொல் நிலவே.

சிம்மாசனம், நிலவு, இதயம் என்பதெல்லாம் காதலுக்கு மிகப்புராதனக்குறியீடுகள்.சொற்ப எண்ணிக்கையிலான சொற்களின் மூலதனத்தில்,கவிதை எழுத வந்தால்,அது பலவீனமான ,ரத்தச்சோகை கொண்ட சொற்கூட்டமாகத்தான் அமையும்.

காதல் கடவுளின் முகவரி என்றார் கவிக்கோ அப்துல் ரஹ்மான்.கடவுளின் முகவரியை கிழித்தெறியலாமா? காதலைக் கசக்கிக் கசக்கி பிழிந்து கடைசியில் கசக்க வைத்துவிட்டார்கள் நம் படைப்பாளர்கள்.

சில நல்ல எடுத்துகாட்டுகள்:

முந்தைய தினங்களில்

வெளிச்சம் வீசிய

எனது வானத்தில்

நீ பூசிச்சென்ற

கருமையில்

நிலவும் நட்சத்திரமும்

தோன்றாமல்

உன் முகம் மட்டுமே

தெரியவேண்டுமென்பதுதான்

உனக்கான

எனது யாசகங்கள். (ப.ராமு- நயனம்)

...................................................



பத்து பதினொன்று இருபது ஐம்பது

என ஏறிக்கொண்டே போகிறது

எழுத இயலாத எண்ணிக்கைகள்



காகிதங்கள் யாவையும் கிழித்துப்போட்டுவிட்டு

புறப்பட்டுவிட்டேன் ஒரே ஒரு முத்தத்தோடு (உமா- தென்றல்)



இவளுடைய காதலை வெற்று வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை.உணர்ச்சிப்பிழம்பாய் மாறிவிட்டபோது சொற்களில் அவற்றைக்கொண்டு வரமுடியவில்லை. ஒரே குறுக்கு வழி, ஓடிச்சென்று முத்தமிட்டுவிடுவது.(அதன் அடுத்த விளைவுகள் பற்றி கவிஞருக்குக் கவலையில்லை.)



காதலில் தோற்றுப்போனவளுக்குக் கரிசனக்குரலாய் ஒலிக்கிறது இந்தப்பாடல்.



அறிவு மங்கிப்போனபோதுதான்

இந்த மனதை

இருட்டு இழுங்கிவிட்டது.

காணாமற்போன

உன் காதலை

இந்தக்கருக்கிருட்டில்தான்

நீ இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறாய் (கனலன் - தென்றல்)

இக்கவிதையில் இருட்டு என்ற சொல் பொருத்தமான படிமமாய் விழுந்திருக்கிறது.



நீ தொடாதவரை

சாணைப்பிடிக்காத

கத்தியாய்க்கிடந்தேன்

தொட்டவுடன் தெரிந்துகொண்டேன்

எனக்குள் எண்ணிலடங்கா

கூர்மைகள் (துரைராஜ் முனியன் - தென்றல்)

இக்கவிதையில் குறியீடு படிம உத்திகள் சரியாகக்கையாளப்பட்டுள்ளன. சொற்சிக்கனம் கவிதைக்கான பல பரிமாணங்களை உருவாக்கும்.’தெரிந்துகொண்டேன்’ ‘எனக்குள்’ போன்ற வார்த்தைகளை நீக்கியிருந்தால் கவிதை இன்னும் பரிமளித்திருக்கும்.

...............................

இந்த ரோஜா அறியுமா

அதன் நிறத்திற்கு

எனது ரத்தமும்

அதன் மென்மைக்கு

எனது உயிர் மூச்சும்

எவ்வளவு முக்கியம் என்று. (அனு கோலாலம்பூர்- நிலா)

தன் காதலியை ரோஜாவாக உருவகப்படுத்தி காதலை மலரவைத்த சுமாரான கவிதை இது.



எனக்குப்பிடித்த எதுவும்

அவளுக்குப்பிடிக்கவில்லை

அவளுக்குப்பிடித்த எதுவும்

எனக்குப்பிடிக்கவில்லை

இருந்தபோதும்

வாழ்ந்துகொண்டிருக்கிறோம்

ஒருத்தொருக்கொருத்தர்

பிடித்து (சந்துரு- தென்றல்)



காதல் வெகு விரைவில் நீர்த்துப்போகாமல் இருப்பதற்கு எது காரணம்.விட்டுக்கொடுத்தலும் சகிப்புதன்மையும்தான்.உணர்ச்சிவயப்பட்டு வீசி எறியப்பட்ட வெற்று வார்த்தைகளால் எத்தனையோ காதல் கடை தேறாமல், எத்தனையோ குடும்பம் கரை சேறாமல் முறிந்து தொங்குவதை நாம் பார்க்கிறோம். அவனோ அவளோ முகத்துக்கு நேரே வெடித்த வார்த்தைகளின் வீச்சத்தை சதா சர்வ காலமும் சுமந்து கொண்டு திரிவதால் இந்தப்புனித உறவில் உடைப்பு நேர்ந்துவிடுகிறது. மிகைஉணர்ச்சி வயப்பட்டு உதிர்ந்த வார்த்தைகள்தானே, இதற்கு ஏன் அதிகபட்ச கனத்தைத்தரவேண்டும் என்ற தார்மீக சிந்தனை நமக்கு வருவதில்லை.ஆனால் மிதமான சிந்தனை கொண்டவன் வாழ்வு சொற்களால் தொலைந்து போகாமல் இருப்பதற்குப் புரிந்துணர்வைப் பகிர்ந்துகொள்வதற்குப் பாதை காட்டுகிறான். உனக்கும் எனக்கும் வெவ்வேறு ஆசைகள் இருக்கலாம்.வெவ்வேறு கொள்கைகள் இருக்கலாம், நாம் வெவ்வேறு உணர்ச்சிகளால் ஆக்கப்பட்டவர்களாக இருக்கலாம்! அதனால் என்ன? உனக்கு என்னையும், எனக்கு உன்னையும் எப்போதுமே பிடித்துப்போகிறது! அது போதும் நம் காதல் ஜெயிக்க.அது போதும் நம் வாழ்வு சுகிக்க, என்கிறான் கவிஞன்.அறிவுப்பூர்வமான வரிகள். (தொடரும்.........)

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...