Skip to main content

கவிதைக்கடவுளின் தரிசனமும் தூக்கம் துறந்த என் பின்னிரவுகளும்

( 2009 ஆண்டின் முதல் மூன்று மாதப் புதுக்கவிதைகளின் ஆய்வு.கவிதைப்பற்றிய புரிதலை உண்டாக்க கல்லூரி மாணவர்களை முன்வைத்து எழுதப்பட்டது.)

கோ.புண்ணியவான்



நேற்றைய தொடர்ச்சி........



மனிதர்கள் அணிந்து திரியும் எண்ணற்ற முகமூடிகளும்



இந்த உலகம் ஒரு நாடகமேடை,நாமெல்லாம் அதன் நடிகர்கள் என்கிறார் அறிஞர் ஷேக்ஸ்பியர்.என்ன தீர்க்க தரிசன நடப்பியல் உண்மை.நம்முடைய குணத்தை, உற்று கவனித்தால் நாம் எத்தனை பெரிய நடிகர்கள் என்று புரியும்.நாம் எப்போது அசலான நாமாகிறோம், என்று மனசாட்சியை கேட்டுப்பார்த்தால் அநேகமாக பதில் கிடைக்காது.மனசாட்சியும் குழம்பிய நிலைக்கு உள்ளாகும்.எல்லாரும் கண்ணுக்குப்புலப்படாத ஆயிரக்கணக்கான முகமூடிகளை வைத்துக்கொண்டு சந்தர்ப்பத்துக்கு தகுந்த மாதிரி மாற்றி மாற்றி அணிந்துகொண்டு திரிகிறோம். சுயநலமிகளின் உலகமல்லவா இது! வேறெப்படி இருக்கும்?



வேலைக்குச்செல்லும்போது

நண்பர்களைச்சந்திக்கும்போதும்

உறவினர்களைத்

திடீரெனச்சந்திக்க நேர்ந்தால்

வடிவமைத்துக்கொள்கிறோம்

பல முகமூடிகளை (பா.அ.சிவம் - மௌனம்)



வழிப்போக்கனின் முகத்தைப்

பொருத்திக்கொண்டு

வீதி வழி போகையில்

வியர்த்தலுக்குப்பின்

அதுவும் அலம்பப்படும்

என்பதை முன்பே தீர்மானித்திருந்தேன் (ஏ. தேவராஜன் - மௌனம்)



ஒவ்வொருவரையும் சந்திக்கும்போதும் என்ன முகமூடி அணிந்துகொள்வது என்று திட்டமிட்டு செயல்படுகிறோம் என்கிறார் கவிஞர்.ஒருவரைச்சந்தித்த பின், பிறிதொருவரைச் சந்திக்கும் இடைவெளியில் முன்னவரைச் சந்திக்கப்பயன் படுத்திய முகத்தை அலம்பிக்கொள்வாராம்.என்ன கற்பனை பாருங்கள்.ஆழ் மனத்தில் உலவும் நுண் உணர்வின் பிரதி பிம்பமாக தன்னை எழுதிக்கொள்கிறது கவிதை.



கைக்குலுக்கி விடைபெற்று நடந்து

மீண்டும் முகம் திருப்புகிறோம்

முகத்திலிருந்து கழற்றப்பட்ட ஏதும்

தென்படுகிறதாவென

மற்றவர் கைகளில் தேடுகிறோம் (ந.பச்சைபாலன் - மௌனம்)



ஒருவரோடு பேசிவிட்டுத்திரும்பும் தருணத்தில் கைகளில் ஏதும் முகமூடி வைத்திருக்கிறானா என்று தேடுவதாக அமைந்த கற்பனை அபாரம்.



எனக்கென்று புறப்பெயர்

மட்டுமே உள்ளது

இதயத்துக்குள் இருக்கும்

முகங்களுக்கு

எது புனைப்பெயர் ? (சை.பீர் முகம்மது- மௌனம்)



நம் கண்ணுக்குப்புலப்படாத அரிதாரத்தைப் பூசிக்கொண்டுதான் பிறரோடு பழகுகிறோம்.நாம் சந்தித்துப்பேசப்போகும் மனிதரின் எதிர்பார்ப்பையும்,நம்முடைய எதிபார்ப்பையும் நிவர்த்தி செய்யக்கூடிய அரிதார முகம் ஒன்று நமக்கு எப்போதுமே தேவைப்படுகிறது.இந்த ஒப்பனை முகங்கொண்டும் ஒப்பனை அகங்கொண்டும், அவரிடமிருந்து நமக்குக்கிடைக்கூடிய பயனின் குறிப்பறிந்து பாவனை செய்வதில், ஒத்திகையில்லாமலேயே பல சமயங்களில் நம்முடைய நாடகத்தை வெற்றிகரமாக அரங்கேற்றிவிடுகிறோம்.அதன் பயனையும் அடைந்து விடுகிறோம்.நம் புறத்தோற்றத்துக்கு ஒரு பெயரைச்சூட்டிக்கொண்டதுபோல அந்த முகங்களுக்கெல்லாம் என்ன பெயர் வைப்பது? அப்படி வைத்தால் எத்தனை பெயர் வைப்பது? சிக்கலான மனிதர்கள்தாம் நாம்!



நகர வாழ்வு - வணிகம் வளர்த்த வன்முறை



அவன் சுமந்திருந்த புனிதம்

சுருள் சுருளாக மிதந்து

நகரத்தின் பெரு துவாரத்தை

உற்பத்தி செய்து கொண்டது..

துவாரத்திலிலிருந்து

கடவுள்கள் வெளிப்பட்டார்கள்

நகரம் மனித ஒழுக்கக்கேடுகளை

விழுங்கிக்கொண்டு

கடவுள்களின்

புனித சேட்டைகளால்

நிரம்பிக்கொண்டிருந்தது (கே.பாலமுருகன் - மௌனம்)



இருண்மை வடிவத்திலான கவிதை இது.கவிதையை மறு வாசிப்புகளுக்கு எடுத்துக்கொண்டபோது பிரமிப்பான கருத்தாக்கங்களை முன் வைக்கிறது.மனிதர்கள் சீரழிந்து போவதற்கு நகரத்தின் பங்களிப்பு அதீதம்.எது வேண்டும் கேள் மனமே என்ற கிளர்ச்சியை உண்டுபன்ணும் வினாவோடு பயணியை எதிர் கொள்கிறது நகரம்.. கேட்டதெல்லாம் கொடுக்கும் அலாவுதின் விளக்குப் பூதமாக, அட்சய பாத்திரமாக திகழ்கிறது நகரம். இதனால் நகரத்துக்குள் நுழையும் ஒரு மனிதன் தன் சுயத்தை இழக்கும் நிலைக்குத்தள்ளப்படுகிறான்.கடவுள்கள் என்ற மனிதரைக் குறிக்கும் அவரின் குறியீடு மிகப்பொருத்தமாய் அமைகிறது.மனிதன் பிறப்பால் கடவுள் போல புனிதமானவன் தான்.குழந்தையும் கடவுளும் குணத்தால் ஒன்றுதானே! அவன் வளர வளர தீயவற்றுக்கு ஆட்படுகிறான். அதிலும் நகரம் விரித்து வைத்திருக்கும் வலைக்குள் அவன் சிக்கிச்சீரழிவதை வன்மையோடு சொல்கிறது கவிதை.



நகர வாழ்வில்

மூழ்கித்தொலைத்த

இயல்புகளைத்தேடப்போகிறேன்

என் தாய் மடியில்

...............

..................

என் சூன்யத்தை

நிரப்பிக்கொள்ள (தினேஸ்வரி -மௌனம்)



பரபரப்பான நகர வாழ்வு எப்போதுமே தனிமாயாளனை உள்வாங்கிகொள்வதில்லை.அது அவனை அவன் சொந்த இடத்துக்கே விரட்டியவண்ணம் இருக்கும்.சொந்த இடத்தின் காற்று,மண் வாசம், தாய் மடியின் சுகானுபவம், இவற்றின் ஸ்பரிசத்திற்காக ஏங்குகிறது. அது கிடைக்கும்பட்சத்தில் அதனை ஏந்திக்கொண்டு அதன் நினைவலைகளில் இன்புற ஆசைகொள்கிறது. தாய்க்கும் மகளுக்குமான பிணைப்பையும், நகரம் அவர்களைப்பிரித்துப்பார்க்கும் அழகியலையும் படிம நேர்த்தியோடு வெளிப்படுத்துகிறது கவிதை.



இன்றைக்கான நவீன கட்டமைப்பு கொண்ட கவிதை அகவய வெளிப்பாடாகவே தன்னை அடையாளம் காட்டிக்கொள்கிறது. அதன் உட்சரடு பின்னிப்பிரித்தெடுக்கமுடியாத ஒன்றாக இருக்கின்றது.கவிஞனின் உள்மனப் போராட்டத்தின் பிரதிபலிப்பாகவே கவிதைகள் உருப்பெறுகின்றன. முழுக்க முழுக்க உணர்வுத்தளத்தில் இயங்கி தன்னை வாசகனோடு சமரசம் செய்துகொள்ளகூடாத சர்வாதிகாரத்தன்மையோடு இயங்குகிறது.அதனால் கவிதையின் உள்ளுறையும் பொருளை முதல் வாசிப்பில் புரிந்துகொள்ளமுடியவில்லை.அவன் குறியீடுகளுக்கு உருவம் கொடுக்க முடியவில்லை. அவன் கையாளும் சொற்களின் உட்பொருளை உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை.இறுக்கமான மொழியில், மிகுந்த இருண்மை வடிவங்கொண்டு பயமுறுத்துகிறது.அதனைப்புரிந்துகொள்ள அக்கவிஞனின் ஒத்த வாழ்வனுபவத்தை நாம் கொண்டிருக்க வேண்டும்.இது அசாத்தியமானது.அவன் சேமித்து வைத்துள்ள நுண் உணர்வுக்கும்,அறிவுக்கும் ஈடான அறிவை நாம் அடைந்திருக்க வேண்டும்.அப்படி இல்லையெனில் கவிதை கவிதையாகவே ஸ்தம்பித்துவிடுகிறது. சாதாரண வாசக மனத்துக்குள் மேற்கொண்டு பயணிப்பதில்லை.

கவிஞன் என்ன பாடுபொருளை உள்ளீடாக வைத்துப்பின்னினானோ அதனை அப்படியே புரிந்துகொள்ளவேண்டும் என்கின்ற அவசியமில்லை.வாசகன் அதனை படைப்பாளனின் பிரதியாகப் புரிந்துகொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கினால், அவன் அறிவுநிலைக்கேற்ப எப்படி உள்வாங்கிக்கொள்கிறானோ அப்படியே புரிந்துகொள்ளட்டும் .வாசகனின் வாழ்வனுபவத்தையும்,அறிவையும் பொருத்ததாகவே இருக்கட்டும் கவிதையைப்பற்றிய அவனின் புரிதல், என்பதான வசதியைக்கொடுக்கிறது, இன்றைய விமர்சகர்கள் கூற்று.கவிதைசொல்லி தரமுனையும் ஒற்றைப்பொருளையும் விஞ்சும் வகையில், வாசகனின் புரிதலில் பல்வேறு பரிமாணங்களை உண்டாக்குவதும், புதிய திறப்புகளை உருவாக்குவதும், ஒரு வகையில் அவன் லாபக்கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம்தானே !

( முற்றும் )

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...