3.சீனப் பெருஞ்சுவர்உள்ளபடியே நாங்கள் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நகருக்குக் கிளம்பிய போது மாலை மணி 6.30. காலை மணி11.00 அல்ல. முன்னர் சொன்னது தவறு. பெய்ஜிங் மாநகரின் விமான நிலையத்தை வந்தடைந்தபோது நள்ளிரவைத்தாண்டி விட்டிருந்தது. இரவு மணி 1.00 இருக்கலாம். மலேசியாவுக்கும் சீனாவுக்கும் நேர வித்தியாசம் ஒரு 15 நிமிடங்கள்தான். அங்குள்ள கடிகார கணக்குப்படி. அது ஒன்றும் பெரிய வித்தியா.லேசியக் கடிகார நேரம்தான் அங்கேயும்.

விமானத்தில் இரவு உணவு கொடுத்தார்கள். முன்கட்டணம் வசூலித்த பணத்தில்தான். பரவாயில்லை பசிக்கு இறங்கும் சுவைதான்.
வந்திறங்கியதும் பசி வயிற்றைக் கிள்ளியது. எங்களின் சுற்றுப்பயண வழிகாட்டி தன்னை மைக்கல் என்று அறிமுகப் படுத்திக் கொண்டான். வெளியே இரண்டு மணி நேரம் காத்திருந்ததாகச் சொன்னார். சற்றும் தாமதிக்காமல் மெரியோட் 5 நட்சத்திர விடுதிக்கு ஒரு வேனில் அழைத்துச் சென்றார். விமான  நிலையத்திலிருந்து ஒன்றரை மணி நேர ஓட்டம். பெய்ஜிங் மாநகரம் ஒளி வெள்ளத்தில் பூத்திருந்தது. பனி கொட்டிக்கொண்டிருந்தது. விமானத் தளத்தின் வாசலிலிருந்து வேன் வந்து நின்ற இடத்துக்கு ஒரு மூன்று நிமிட நேர நடைதான். அந்த மூன்று நிமிட நேரத்தில், முழுதாய் மூடிக்கொண்டிருந்த எங்களாலேயே குளிரைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை! சில்லிட்ட காற்று முகத்தில் அறைந்தபோது முகம் உறிந்துவிட்டது. நல்ல வேளையாக வேனில் ஹீட்டர் இருந்ததால் சமாளிக்க முடிந்தது. வெளியே அந்த அதிகாலை வேளையில் குளிர் -12 ஐ அடைந்திருந்தது என்று சொன்னார் மைக்கல்.

வெளியே சில இடங்களில் பனி உறைந்து வெள்ளைச் சால்வைபோலப் படர்ந்திருந்திருந்தது. பிள்ளைகள் பனியைக் கண்டதும் குதூகளித்துக் குதித்தார்கள்.

பனிவெளிதானே (பனிப்பொழிவுதான்) மலேசியாவுக்கும் சீனாவுக்குமான பெரிய இடைவெளி! குளிரை உணர்வதுகூட உல்லாசப்பயணத்தில் ஒரு நோக்கம்தானே! ஒரு நோக்கம் என்று சொல்வதைவிட முக்கிய நோக்கம் அல்லவா! பருமாற்றம்தானே ஒரு நாட்டைப் பிறிதொரு நாட்டினின்றும் வேறொன்றாய்க் காட்டுகிறது. மக்களின் வாழும் சூழல், கலாச்சாரம், பழக்க வழக்கம், மண்ணின் தோற்றம் என்ற அக புற வாழ்வின் வித்தியாசங்களை  மையமிட்டுக் காட்டும் போதுதானே ஒரு இடம் நம்மை வசீகரம் செய்கிறத்!  ஆண்டு முழுதும் கிட்டதட்ட ஒரே மாதிரி சீதோஷ்ணத்தைக் கொண்ட மலேசியாவிலிருந்து, நான்கு வெவ்வேறு சிதோஷ்ண மாற்றத்தைக் காணும் சீனா போன்ற நாடுகளுக்குப் பயணம் போவது இந்த வித்தியாச தருணத்தை அனுபவிக்கத்தானே!

விடுதியைப் போய்ச்சேரவும், நான்கு அறைகளின் சாவிகளைப் பெற்றுக்கொண்டு அறைக்கு சென்றடையும் போது மணி மூன்றாகிவிட்டது. மறுநாள் காலை பதினோரு மணிக்கு வேன் வெளியே காத்திருக்கும் என்று சொன்னார் மைக்கல். விடுதியில் காலை பதினோருவரை பசியாறும் நேரம் என்றும் மைக்கல் சொன்னது கொஞ்சம் நிம்மதியாகத் தூங்கலாம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தது!

நாளை பகலில் சீன தேசத்தைப் பார்க்கப் போகும் ஆவலோடு படுக்கைக்குச் சென்றேன்.

Comments

ச்சீனா போன அந்த பழைய அனுபவத்தை மீண்டும் எனக்கு தருகிறீகள்...
அடுத்தக் கட்டுரை படிக்க வேண்டும்.
-செபஸ்தியன்
Anonymous said…
அருமையான பயணக் கட்டுரை..பாகம் 4.. எப்பொழுது தரப்போகிறீர்கள்..நகைச்சுவையாக எழுதி படிக்க ஈர்த்து விடுகிறீர்கள்...waiting for part 4
RAJOO MUNIANDY said…
அருமையான பயணக்கட்டுரை...நகைச்சுவை உணர்வோடு தாங்கள் கூறுவது படிக்கத் தூண்டுகிறது.... waiting for part 4
இதுவரையில் போகாத இடத்திற்கு எங்களை அழைத்துச்செல்கிறீர்கள் சார்.தொடருங்கள்.... அருமை.
ko.punniavan said…
நன்றி விஜி,
சில சமயம் சோர்வு தட்டுகிறது விஜி.நான் ஊடகங்களில் எழுதி எழுதி வந்த களைப்பு இது.இருந்தாலும் உங்களைப் போன்றவர் தரும் ஊக்கம் எழுதச் சொல்கிறது.
தொடர்வேன்.
ko.punniavan said…
நன்றி முனியாண்டி ராஜ்,
உங்களுக்காகக் கண்டிப்பாய்த் தொடர்வேன்.