சீனர்கள் ஒலிம்பிக் விளையாட்டுகளில் தங்கங்களை குவிப்பதற்குக்
காரணம் தேடுபவர்கள் முதல் நாளில் நாங்கள் பார்த்த அக்ரோபேட்டிக்
விளையாடுகளைப் பார்த்தாலே புலனாகிவிடும்!
இரண்டு கைகளாலும் இரண்டில் தொடங்கி 20 பந்துகளை விடாமல் வீசிப்
பிடிக்கும் சாகசமும் சரி, ஒற்றை சக்கர வண்டியில் கம்பிமேல் பலவித
சாகசங்களை செய்து காட்டிய விளையாட்டிலும் சரி பார்ப்பவரை கண்சிமிட்ட
விடாது, பிரக்ஞை பிறழ விடாது அப்படியே சிலையாய் பிடித்து வைத்து
விடுகிறது. ஒரு மந்திரக்கோலின் அசைவுக்கு கட்டுப்பட்டதுபோல
பார்வையாளர்கள் நிலைகுத்திய பார்வையிலிருந்து விலகவில்லை! ஒருவன்
ஒற்றைச் சக்கர சைக்கிலில் சாகசம் செய்யும்போது நம் உயிர் நம் கையில்
இல்லை. நாம் விழுந்து தெறித்துவிடுவோமோ என்ற அச்சம் உடலில்
எறும்புபோல ஊடுருவிய வண்ணமே உள்ளது.
ஐநூறு பேருக்கும் மேல் கூடியிருந்த கூட்டத்தை என் ஒரு வயது பேரனின்
செய்கையும் சிரிக்கவைத்து விட்டது. ஒரு சாகச நிகழ்வு முடிந்த இன்னொஉரு சாகச நிகழ்வுக்கு இடையில் ஒரு 20
வினாடிக்கு விளக்கு அணைக்கப் படுகிறது. இருள் சூழ்ந்ததும் அவன் ஒரு
அதிருப்தி கூச்சல் போடுவான். அவ்வொரு முறையும் அதே போன்ற சிறு
சலனம். அவர்கள் சாகசத்தை இடைவிடாது பார்க்கவேண்டும் என்ற துடிப்பே
அவனை கூச்சலிட வைத்தது. அவன் கூச்சலிடவும் வெளிச்சம் விழுந்து
அடுத்த சாகசம் ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. நிசப்தம் நிலவும் அந்தத்
தருணத்தில் அவனின் குரலொலி சமிக்ஞை நமக்கு மேலுமொரு 'சாகச
நிகழ்வாகவே' பட்டது.
சாகசங்கள் அவ்வளவு நுட்பமாகவும் அத்துணை
நேர்த்தியாகவும் இருந்தது. வண்ண ஆடையில் இளம்பெண்களும் ஆண்களும்
தங்கள் உடலசைவுகளைக்கூட கலை நேர்த்தியோடு செய்யும் போது.. 'அடடே"
என்று வியப்பு வார்த்தைகள் நம்மிடமிருந்து கசியும். அவ்வளவு ஒழுங்கு,
இழை பிசகாத செய்நேர்த்தி!
அவ்வளவும் நெடுங்காலப் பயிற்சியும், உழைப்பும், வலியைத்
தாங்கிக்கொள்ளும் சக்தியும் அவர்களை இந்த முழுமையை நோக்கி
உயர்த்தியிருக்கிறது. இதுபோன்றன் நிகழ்வுகள உலக மக்களை ஈர்த்தும் இருக்கிறது. The chinese- really mean business.
ஆம்,இடைவிடாத பயிற்சி, தேச பக்தி, இனப் பற்று.. உலக நாடுகளை
அனைத்தையும் வென்று ஈடு இணையற்றுத் திகழ வேண்டுமென்ற வெறியை
நான் சீனர்களிடம் பார்த்தேன்.
அது ஒரு கம்னியூஸ்ட் நாடாக இருந்து பின்னர் அதிலிருந்து
விடுபட்டு, பொருளையலிலும், வணிகத்திலும், தற்காப்பிலும்
அந்நாடு காட்டும் முன்னேற்றம், இரண்டாம்
உலக யுத்தத்துக்குப் பிறகு ஜப்பான் முனேறியதை விடப் பன்மடங்கு
அதிகமாகும்.
சரி, அதை விடுங்கள்..
நிகழ்வு முடிந்து வெளியே வந்த போது இருட்டிவிட்டிருந்தது. கடிகாரத்தைப்
பார்த்தேன் மணி ஐந்து. அதாவது இரவு மணி ஐந்து. இங்கூயும் ஒரு முரண். நம்
நாட்டில் வெயில் மேற்கில் இறங்கும் நேரம் ஆனாலும் அதன் தகிப்பு
குறைந்திருக்காது. மாலை 5.00 நமக்கு.
மண்டபத்துக்கு வெளியே குளிர் கூடியிருந்தது. குளிர் மைனஸ் 10ஆகப்
பதிவாகியிருக்கிறது. மண்டபத்தின் உள்ளே சூடேற்றி இருந்தபடியால்
வெளியே 'கனன்றுகொண்டிருந்த' குளிர் தெரியவில்லை. வெளியே
வந்தவுடனே காற்று நம் மேல் குளிரின் உக்கிரத்தைப் பூசியபடி இருக்கிறது.
உடனே குழந்தைகளை ஒன்று சேர்த்து வேனுக்கு ஓடினோம். வேன்
இத்தனைக்கு 100 மீட்டருக்கு அப்பால்தான் இருந்தது.
ஹோட்டலுக்கு வந்ததும், பசி எடுத்தது. இந்தக்குளிரில் மீண்டும்
கடைத்தெருவுக்குள் இறங்க முடியாது. குஞ்சு குலுவானெல்லாம் தாங்காது
என்பதல்ல, எங்களால் கண்டிப்பாய் முடியாது.
என் மகன்களும் மருமகனும் போய் உணவு வாங்கி வந்தனர். கொய்த்தியோ,
பிரட்டிய சோறெல்லாம் அதிக விலை கொடுத்து வாங்கி வந்தார்கள். ஒரு
ஆள் உணவு கிட்டதட்ட 15 ரிங்கிட். சீனச் செலவாணிக்கு முப்பது யுவான்.
நம்முடைய பணத்துக்கு அங்கே இரட்டிப்பு மதிப்பு. ஆனால் விலைவாசியோ
விஷமாய் கிடக்கிறது.
மறுநாள், முன்னர் ஆண்ட ராஜ அரண்மனைக்குப் போவதாய்த் திட்டம்.
சீனப்பெருஞ்சுவரை கட்டி, உலக அதிசயங்களில் ஒன்றாக்கப் பட்ட அரச
பரம்பரை வாழ்ந்த அரண்மனைகள் அவை. மிங் என்ற கடைசி அரச
பரம்பரையோடு, (மிங் டினாஸ்டி) ஆட்சி நிறைவு பெற்றிருக்கிறது...ஒரு
மாபெரும் புரட்சியின் வழியே.
தொடர்ந்து பார்ப்போம்.....(படங்கள் அடுத்த தொடரில்.. சில தொழில் நுட்பச் சிக்கல்)
Comments