Tuesday, April 1, 2014

ஜெயமோகனுடன் மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம் கன்னி முயற்சிஜெயமோகனுடன் மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம்
கன்னி முயற்சி1. முதற் குழப்பம்


    2010  லேயே ஜெயமோகன் மலேசியா வந்திருந்தார். எங்கள் நவீன இலக்கியக் களம் அவரை வரவழைத்திருந்தது. குறிப்பாக சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி நவீன இலக்கியக் களத்தை முன்னெடுப்பவர். அவர்தான் அதில் மும்முரமாக இருந்தார். சுவாமி இலக்கியத்திலிருந்துதான் ஆன்மிகத்துக்குப் போனார். பின்னர் இலகியத்தையும் ஆன்மீகத்தையும் சமமாகவே அவதானிக்கத் தொடங்கினார். அவர் படிக்கும் காலத்தில் அவரை இலக்கியத்துக்கு இழுத்தது மு.வ தான். மு.வதான் அவரை மெல்ல ஆன்மீகத்துக்கு கொண்டு சென்றார். ஆன்மீகத்தை எந்த அளவுக்கு நேசிக்கிறாரோ அந்த அளவுக்கு இலக்கியத்தையும் நேசிக்கிறார் இப்போது. இரண்டும் வெவ்வேறல்ல . இரண்டுமே தத்துவ நோக்கோடுதான் வாழ்க்கையைப் பார்க்கின்றன என்ற நிதர்சனத்தை முன்வைப்பவர்.
 ஜெயமோகனின் எழுத்துகளை அவருக்கு அறிமுகப்படுத்தியது நான்தான். ஜொமோவின் அகப்பக்கத்தை திறந்து கொடுத்த நாள் முதல் இன்றைய தேதிவரை ஜொமோவை விடாமல் விரட்டிக் கொண்டு வாசிக்கிறார். அவரை உள்வாங்கிய பின்னர்தான் அவரின் ஆளுமையின் முழு தரிசனம் கிடைக்கப் பெற்றார். பின்னர்தான் ஜொமோ இங்கு வரவேண்டும் என்று முன்மொழிந்தவரே அவர்தான். 2010 ன் அவர் விட்டுப்போன அழுத்தமான அடையாளத்தின் பலனாகத்தான் மீண்டும் அவர் இங்கே வந்தார்.

16.3.2014 மாலை 4 மணிவாக்கில் ஏர் ஏசியா விமானம் மூலமாக கோலாலம்பூர் எல்சிசிடி விமான நிலையத்தை வந்தடைந்தார்.


அவருடன் கிருஷ்ணனும். ராஜமாணிக்கமும் வந்திருந்தார்கள். கடந்த ஏழெட்டு ஆண்டுகளுக்கு மேலாக அவருடய தீவிர வாசகர்களாக ஆனவர்கள். நண்பர்கள் அரட்டை இல்லாமல் ஜெயமோகன்  இருக்க முடியாது என்பதை வைத்தே அவர் எவ்வளவு நட்பாகப் பழகக்கூடியவர் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இலக்கியம் ஆன்மீகம் சமூகவியல் என எல்லாத்துறையிலும் அவர் பிளந்து கட்டுவதை நம்முடைய திறமையோடு ஒப்பிடும்போது, நம்மை கொஞ்சம் எட்டியே இருக்கச் செய்கிறது அந்த பிரம்மாண்டம்.

16.3,14ல் ஜெமோ வந்திறங்கிய அன்று மாலை மணி 6 மணிக்கே அவர் உரையாற்றும் இலக்கிய நிகழ்ச்சி தொடங்கியிருந்தது. கோலாலம்பூரில் தீவிர கதியுடன் இயங்கும் வல்லினம் என்ற இலக்கிய குழுமம் அவரின் முதல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. விமானம் அரை மணி தாமதித்து தரை இறங்கிய காரணத்தால் அரக்கப் பரக்கக் குளித்து நேராக நிகழ்ச்சிக்கு போயிருக்கிறார்.

நிகழ்ச்சி முடிந்ததும் அவரோடு பேசலாமென்று காத்திருந்தேன். மணி 9.30 இருக்கும். நிகழ்ச்சி முடிந்து களைப்பாக இருப்பார்  இரவு உணவுக்குப் பின்னர் பேசலாம் என்றே தள்ளிப்போட்டேன். இந்த தள்ளிப்போடல்கூட என்னுள் உண்டாகியிருந்த  அச்சம்தான் காரணம்.

நான்தான் அவர் மலேசியாவில் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நிரலை அனுப்பியிருந்தேன். அன்றே அதற்கு அவர் பதிலிறுத்தியிருந்தார்.

"கல்லூரிகளில் பேச எனக்கு விருப்பமில்லை. அவர்கள் வாசிக்கமாட்டார்கள் என்று ஆசிரியராக இருந்த உங்களுக்குத் தெரியாதா. கல்லூரி நிகழ்ச்சியை முடிந்தவரை குறைத்துவிடுங்கள்," என்றிருந்தது.

"நான் முயற்சி செய்கிறேன் ஜெ," என்று பதில் போட்டேனே ஒழிய. என்னால் பெரிதாக எதையும் மாற்றிட இயலவில்லை. கல்லூரிகள் நிகழ்ச்சிகளுக்கு முன்னரே ஏற்பாடு செய்துவிட்ட காரணத்தால் அவற்றை மாற்றிட முடியாத நிலை. மொத்தம் மூன்று கல்லூரிகள். ஒவ்வொன்றும் அவர்களின் மேலதிகாரிகளிடம் அனுமதி கேட்டு ஏற்பாடு செய்துவிட்டிருந்தமையால் ரத்து செய்வது கடினம் என்று சொல்லிவிட்டார்கள். சரி ஜெமோ மலேசியா வரட்டும். வந்துவுடன் சமாளித்துக் கொள்ளலாம் என்றே எண்ணியிருந்தேன். ஜெமோ இதுபற்றிக் கேட்பாரே என்ற தயக்கம்தான் என்னுள் அச்சத்தைக் கிளர்த்தியிருந்தது.

பேசலாமா வேண்டாமா என்ற இரண்டுங்கெட்ட நிலையில் இருந்தபோதுதான் சுவாமியிடமிருந்து வந்த ஒரு அழைப்பு என்னை அதிரச்செய்தது.

"புண்ணியவான் ஜெயமோகன் பயங்கர கோபத்தில் இருக்கிறாராம் , நவீன் சொன்னான்" என்றே என்னையும் நடுங்க வைத்தார்.
"என்ன சாமி என்ன நடந்துச்சு?" என்றேன்.
" அடுத்தடுத்து நிகழ்ச்சி ஏற்பாடாயிருக்கே,நான் எழுத்தாளன் மேடைப்பேச்சாளனல்லவே," என்று கோபப்பட்டாராம் என்றார்.
நான் எதற்காக அவரிடம் பேச அஞ்சினேனோ அது நடந்தே விட்டதே என்று மனம் அழுத்தத்துக்குள்ளானது.
"நீங்க அவருகிட்ட பேசுங்க.." என்றார். "நாளைக்கு மலேசிய எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியை ரத்து செய்துடுங்க," என்றார்.
"சாமி அது நடக்காது, ரெண்டு மூனு நாளா பத்திரிகையில் செய்தி போட்டுட்டு வராங்க....இப்ப போயி.." என்றேன்.
"நீங்க அவருகிட்ட பேசுங்க ..." என்று மீண்டும் அழுத்தினார்.
" சாமி நீங்களே பேசுங்க.. நீங்க சொன்னா கேப்பாரு," என்றேன்.
"இல்ல இல்ல நீங்க மொதல்ல பேசுங்க. நான் அடுத்து பேசுறேன்," என்றார்.
"சரி சாமி நான் பேசுறேன்" என்றேன். மனதில் துணிச்சல் வர மறுத்தது. சற்று நேரம் ஆசுவாசப் படுத்திக்கொண்டு கைப்பேசியை எடுத்தேன்.

தொடரும்......


5 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

Very good start sir... நாம் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இந்திய ஆளுமைகளை ஆராதிக்க போகிறோம் சார். ஏதோ மனசுல தோனிச்சு...

ko.punniavan said...

நன்றி விக்கி,

நீங்களே ஆளுமை என்றுதானே அங்கீகரிக்கிறீர்கள். தமிழகம் எல்லாவற்றுக்கும் தாய்நிலம்.நாம் இன்னும் பின்னால்தான் இருக்கிறோம்.வழிகாட்டட்டும்.

ko.punniavan said...

நன்றி விக்கி,

நீங்களே ஆளுமை என்றுதானே அங்கீகரிக்கிறீர்கள். தமிழகம் எல்லாவற்றுக்கும் தாய்நிலம்.நாம் இன்னும் பின்னால்தான் இருக்கிறோம்.வழிகாட்டட்டும்.

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

உண்மைதான். ஆளுமைதான் அவர். அவர்களைப் படித்துவிட்டு, நமது இலக்கியங்களை வாசித்தால், உணவில் உப்பில்லாமல் சாப்பிட்டதைப்போன்ற உணர்வே மிஞ்சுகிறது. தரம் குறைத்து சொல்லவில்லை. தரம் உயர்ந்தால் என்னைப்போன்ற வாசகர்களுக்கு நன்றாக இருக்குமே என்கிற ஆதங்கம்தான்..
தொடருங்கள் சார்.வாசிப்போம். உங்களைப் பற்றியும் அவரின் ப்ளாக்கில் ஜெ.மோ எழுதியிருந்தார். உங்கள் வீட்டு கறிக்குழம்பு பிரமாதமாம்.! நல்ல நண்பர் என்றும் உங்களை பாராட்டியிருந்தார். மகிழ்ச்சி. :)

ko.punniavan said...

நன்றி விஜி