Skip to main content

பயணக் கட்டுரை 10 : இருபதும் எழுபதும்

10. ஞான பூமி

நாங்கள் டாக்டர் மாணிக்கம் தோட்டத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வேளையில் அங்கே நடக்கும் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரக் காட்சியைக் காண நேர்ந்தது. தமிழ்நாடு முழுவதும் கட்சி சார்ந்த பிரச்சாரக் கூட்டங்களைக் கடந்து வந்தாலும் இதனை மட்டுமே படம் எடுக்க வாய்த்தது.

பவா செல்லதுரை நூலகம் திறக்குமிடம்  4 கிலோ மீட்டருக்குள் இருக்குமென்றார். பவா கடந்த ஆண்டு கூலிம் நவீன இலக்கியக் களம் நடத்திய இலக்கியக் கூடலுக்கு வந்திருந்தார். அவரையும் சு. வேணுகோபாலையும் என் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தேன். அதனால் நான் நினைவில் இருந்தேன். ஹரி பேசிய காரில் அவர் இலக்கியக் கூடல் நடத்தும் இல்லம் சென்றோம்.


வயல்வெளிக்கு நடுவே ஒரு 'தீவு' நிலத்தில் அந்த இடம் அமைந்திருந்தது. சுற்றிலும் நிழல் மரங்கள் சாமரம் விரித்திருந்தன.வயல் பரப்பின் வெட்ட வெளி பாதிக்காத வண்ணம் அந்த இடம் தாய்க்கோழி தன் குஞ்சுகளை  ரெக்கைகளால் பாதுகாப்பதுபோல மரங்களால் மூடப்பட்டிருந்தது. திறந்த வெளியின் இளம்காற்று  இதமாக வீசிக்கொண்ருந்தது.

வீட்டுக்குச் செல்லும் நடைப்பாதையின் இரு மருங்கிலும் நிழல் மரங்களின் வரிசை பிடித்திருந்தது. இந்த வீட்டுக்கு வெளிப்புறத்தில்தான் கதைக்களம், இலக்கியக் கூடல் நடக்கும் காணொலிகள் யூ டியூபில ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன. அவ்விடத்தை அடையும் முன்னரே அங்கே பரபரப்பு கூடியிருந்தது. ஐம்பது பேருக்குமேல் அந்த இல்லத்தின் வெளிப்புறத்தில் பேசிக்கொண்டிருந்தனர். பவா ஒரு சிறிய கூட்ட நண்பர்களுக்கு வழக்கம்போல கதை சொல்லிக்கொண்டிருந்தார்.
அவரின் கதை சொல்லும் பாணி கேட்பவரைக் கிரங்க வைக்கக் கூடியது. பொதுவாக இந்தியாவின் குறிப்பாகத் தமிழ்நாட்டின் நல்ல கதைகளைத் தேர்வு செய்து அதற்கு புது அடையாளம் தரக்கூடிய கதைசொல்லி அவர். என்னை வரவேற்று கயிற்றுக்கட்டிலில் அமரச் செய்து நண்பர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தார்.

கோணங்கி வந்தவுடன் நான் கைகுலுக்கி மலேசியாவிலிருந்து வந்திருக்கிறேன் என்றேன். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. என் வீட்டுக்குப் பாண்டியன் அழைத்து வந்ததையும் புகைப்படம் எடுக்கும் போது கேமரா
பார்க்கவேண்டாம் நாம் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருப்பதை படம் எடுக்கட்டும் என்று சொன்னதையும் நினைவு படுத்தினேன். ஆனால் என் முகத்தை கண்மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் கண்களால் என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சீனர் சாப்பாடுக் கடையில் சாப்பிட்டோமே என்றவுடன் பிடித்துவிட்டார். நான் மொட்டை போட்டிருந்ததை நானே மறந்துவிட்டிருந்தேன். என் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றியிருந்தது அது. ஆமாம் அப்போ முடி கொஞ்சம் இருந்திச்சி என்றார். கட்டி அணைத்து அன்பைப் பரிமாறினார். பின்னர் சுங்கைப் பட்டாணியில் நடந்ததை வரிசையாய் அவரே நினைவு கூரத் தொடங்கினார்.

நாங்கள் வெகுநேரம் இருக்க முடியவில்லை. அண்ணாமலையாரைத் தரிசித்துவிட்டு கிரிவலம் போகவேண்டும் . எனவே, நூலகம் திறக்கும் வரை காத்திராமல் விடை பெற்றோம். அன்று இரவே கோவை பயணமாதலால் திருவண்ணாமலையை தரிசிக்காமல் போவது வாழ்நாள் இழப்பு.

நேராக டாக்டரின் இல்லம் சென்று விடைபெற்றுக்கொண்டு சிவனாலயத்துக்குச் சென்றோம். கோயிலுக்கு வெளிப்புறத்தில் எண்ணற்ற கடைகளில் சுறுசுறுப்பான வணிகம் நடக்கிறது. காலணிகளைப் பாதுகாப்பதை ஒரு திருப்பணியாக செய்யும் ஒரு கொட்டகையில் காலணிகளைக் கொடுத்துவிட்டு கோயிலுக்குள் சென்றோம்.இலவசமாகவே காலணிகளைப் பாதுகாக்கிறார்கள்.பஞ்சாப்பில் உள்ள பொற்கோயிலில் இப்படிப்பட்ட இலவசமாக காலணிகளை வைக்குமிடமுண்டு. நம் காலணிகளை வாங்கும்போது வணங்கி பெற்றுக்கொள்வார்கள்.

உள்ளே சென்றவுடந்தான் சிவன் கோயிலின் பிரம்மாண்டம் புலனாகிறது.
உயர்ந்தோங்கிய அண்ணாமலையின் அடிவாரத்தில் கோயில் அமைந்துள்ளது. பஞ்ச பூதங்களைக் கடவுளாக வணங்கும் தொன்ம பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டது இந்து சமயம். அதனால்தான் மலையையும் நம் முன்னோர் கடவுளாக்கி அதனை வழிபடும் முறையையும் கொண்டுவந்தார்கள். இந்து சமய வழிபாட்டு  முறையின் தொடக்கக் கட்டம் சற்று மூடத்தனமாக இருக்கிறதே என நினைக்கலாம். அதன் படிநிலை வளர வளர அது மெய்மையில் போய் முடியும். மெய்மை என்பது அறிவு நிலையின் உச்ச நிலையாகும்.மலை என்பது மண்ணின் வடிவம். ,காற்று, நீர்,நிலம்,நெருப்பு,வான் இவைதான் ஐம்பூதங்கள். இவற்றில் ஒரு  பூதம் பிரபஞ்சத்தில் இல்லையென்று வைத்துக்கொள்வோம்.இங்கே ஒரு சிற்றுயிர்கூட வாழ வழியிருக்காது. இது ஒர் அறிவியல் கூறு. நம் சமய நம்பிக்கைக்குள் அறிவியல் இருக்கிறது. இந்த ஐம்பூதங்களை வெவ்வேறு வடிவங்களில் நாம் கடவுளாக வணங்குகிறாம்.மலை மண்ணின் வடிவமாதலால் மலையும் நமக்குக் கடவுளாகிறது.
எனவேதான் அண்ணாமலைக்குக் கீழ் அமைகிறது திருவண்ணாமலை திருத்தலம்.

நான் அவதானித்த வரை திருவண்ணாமலை தென்னாட்டின் காசியாக இருக்கிறது. காசி எண்ணற்ற துறவிகளின் நிலமாகத் திகழ்கிறது. திருவண்ணாமலையும் கிட்டதட்ட காசி போன்ற திருக்காட்சியைத் தருகிறது. கிரிவலத்தைச் சுற்றி வரும்போது சராசரி மாநுடர் எண்ணிக்கையைக் காட்டிலும் காவியுடை அணிந்த பக்தர்களே, அல்லது துறவுபூண்ட  ஞானிகளே அதிக எண்ணிக்கையில் பார்க்க முடியும். புகழ்பெற்ற ரமண மகரிஷி இச்சிவாலயத்தின் அருளாளர்களில் ஒருவர்.
அருணகிரி நாதரின் வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய தலமும் திருவண்ணாமலைதான். பாம்பன் சுவாமிகளின் குமாரஸ்தவ  கல்வெட்டும் இங்குள்ளது. விஸ்வாமித்திரர்,பதஞ்சலி முனிவர்,வியாக்பாதர். அகத்தியர், சனந்தனர், முதலானோர் வழிபட்ட லிங்கங்கள் இங்குள்ளன. பல சுவாமிகள் தவமிருந்து ஞானம் பெற்ற மலைக்கோயில் இது.
கார்த்திகைத் தீபப் பெருவிழா இங்கே மிகச் சிறப்புடையது. (விக்கி, அகப்பக்கத்துக்கு நன்றி)

திருவண்ணாமலை தரிசனத்தை முடித்துக்கொண்டு கிரிவலம் புறப்பட்டோம். பேருந்துக்கு நேரமாகிக் கொண்டிருப்பதால் ஒரு ஆட்டோ பேசி கிரிவலம் போனோம். கிரிவலம் நடந்துதான் செல்லவேண்டும். ஆனால் உலகம் எவ்வளவு விரைவாகப் போகசொல்லி நம்மை விரட்டுகிறது. அதன் அலையில் சிக்கிக்கொண்டதால் சில மரபுகளை மீறவேண்டியுள்ளது. கிரிவலமென்பது எட்டு லிங்க வழிபாடாகும். சிவனின் அருவ வடிவமாக லிங்கம் திகழ்கிறது. இந்திரலிங்கம், யமலிங்கம்,அகினிலிங்கம்,வாயுலிங்கம்,நிருத்தலிங்கம், குபேரலிங்கம், வருணலிங்கம், ஈசானலிங்கம் எனப்படுவதே அஷ்டலிங்கமாகும். இந்த எட்டு லிங்கங்களையும் பேர்பெற்ற துறவிகள் வணங்கிய இடங்களாகும். திருவண்ணாமலையைச் சுற்றி இந்த லிங்கக் கோயில்கள் அமைந்திருக்கின்றன. இக்கோயில்களின் திருநூற்றைப் பெற்றுக்கொண்டு மீண்டும் விடுதியடைந்து பேருந்து நிலையம் நோக்கி நடந்த வேலையில்தான் ஹரி சந்திக்கத் துடித்த ஆட்டொ ஓட்டுனர் குறுக்கே வந்தார். கடந்த முரை ஹரி வந்தபோது அவர் பேருதவியாக இருந்திருக்கிறார்.

எங்களின் அடுத்த இலக்கு இலக்கியம். கோவையில் நடக்கும் விஷ்ணுபுரப் பெருவிழா.

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...