Skip to main content

பயணக் கட்டுரை 12 : இருபதும் எழுபதும்

12. பத்தாவது ஆண்டு விஷ்ணுபுர இலக்கிய விழாவும் உரையாடலுக்கான அங்கமும்



காலை 9 மணிக்கெல்லாம் ராஜஸ்தானி மண்டபம் கலைகட்டிவிட்டது. மளமளவென சுமார் 300க்கும் மேலானோரால் மண்டப இருக்கைகள் நிரப்பப்பட்டுவிட்டன. வாசலில் மூன்று இடங்களில் புத்தகங்கள் விறபனைக்கு வைக்கப்பட்டிருந்தன. நான் தேடிய பல நூல்கள் அங்கிருந்தன. நவீன எழுத்தாளர்களின் நூல்கள் நிறைய கிடந்தன. சிலவற்றை நேரம்  கிடைக்கும் போதெல்லாம் ஒரு சில பக்கங்களை வாசித்து வாசித்து வாங்கி வைத்துக்கொண்டேன். இப்போதே 10 கிலோவைத் தாண்டிவிட்டிருந்தது. சென்னையில் போய் வாங்கவேண்டுமென்ற திட்டத்தை  கைவிட்டேன். நான்கைந்து புத்தகங்களை மட்டும் கோவை விற்பனையாளர்கள் சென்னை கடைக்காரர் உங்களைத் தேடி வந்து கொடுப்பார் என்றார். அப்படியேதும் நடக்கவில்லை. நாங்கள் தான் போய் வாங்கினோம்.

ஜெயமோகனைப் பார்த்துப் புன்னகைத்தேன். என்னை யாரோவென்று பார்த்தார்.மீண்டும் காலை பசியாறலின்போது கை கொடுத்தேன் சரியாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் முதல் நாள் கடைசி அங்கத்தில் கவிஞர்
ரவிசுப்பிரமணியத்தின் கலந்துரையாடல் முடிந்தவுடன் என்னை அவரை கௌரவிக்க அழைத்தார்கள். அதன் பின்னரே நான் வந்திருப்பதைக் கண்டுகொண்டார் ஜெ. என் முடி நீக்கம் பலரை ஏமாற்றிவிடுகிறது.நலம் விசாரித்தார்.சில நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

நாஞ்சில் நாடன் தன் இருநூல்களைக் கொடுத்தார். ஏன் நீங்கள் வந்திருப்பதைத் தெரிவிக்கவில்லை என்றார். அவர் கோவையில்தான் இருக்கிறார். நான் இயல்பிலேயே கூச்சமுள்ளவன்.  தேவதேவனோடு படம் எடுத்துக்கொண்டோம். அவர் இயல்பிலேயே அதிகம் பேசாதவர். மாறாகக்  கவிதைகள் அளவில்லாமல் பேசக்கூடியவை.
ராஜகோபால், கிருஷ்ணன், ராஜமாணிக்கம்,இவர்களோடு ஏற்கெனவே நட்பு இருந்தபடியால் ஒழிச்சலான நேரங்களில் பேச வாய்ப்பு கிட்டியது. சு.வேணுகோபால் கட்டித் தழுவிக் கொண்டார்.வீட்டுக்கு வரும்படி வற்புறுத்தினார். அன்பான ஜீவன் கள்.இதெல்லாம் நிகழ்ச்சியின் இடைவேளையில் நடந்தது.


விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா, விருது வழங்குபவரை மட்டும் கௌரவித்து அனுப்பிவிடுவதல்ல.ஆனால் அவர் படைத்த நூல்கள் சார்ந்து , அவரின் இலக்கிய சார்பு சார்ந்து, அவருடனான ஒரு விரிவான உரையாடலை நிகழ்த்துவது. மலேசியாவில் பெரும்பாலும் அவ்வாறு நடப்பதல்ல. கௌரவிப்பவரைவிட கௌரவிப்பு வழங்குபவர் முன்னிலைப் படுத்திக்கொள்வார்கள். படைப்பு பற்றிய உரையாடல் நடக்காது. அக்குறிப்பிட்ட எழுத்தாளரைப்பற்றி விரிவாகத் தெரிந்தவர்களை ஏதோ காரணத்தால் அழைக்க மாட்டார்கள். மேலோட்டமாக பேசுபவர்கள் அவ்வாய்ப்பைப் பயன் படுத்திக்கொள்வார்கள். இலக்கியம் சாராத அரசியல் வாதிகள் நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தினராக அழைக்கப்படுகிறார் என்றால் நான் அந்நிகழ்ச்சிகளை முடிந்தவரை தவிர்த்துவிடுவேன். அது போன்ற முன்னேடுப்புகள்,  இலக்கிய நிகழ்ச்சி என்ற அந்தஸ்த்தை இழந்தவை.

இம்முறை விஷ்ணுபுரம் விழாவில் கவிஞர் அபிக்கு விருது வழங்கப்பட்டது. அவரைப் பற்றி அவரின் கொள்கைகள், இலக்கியம் சார்ந்த பார்வை பற்றிய அரங்கத்துக்கு கௌரவிப்பு  அங்கத்தைவிட முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

அவருடைய பேச்சு மெய்யியல் சார்ந்தே இயங்கியது. கேட்கப்பட்ட அனைத்து வினாக்களையும் அவ்வாறே அணுகினார். சில சமயம் இருண்மையாக இருந்தது. கவிஞர் பெருந்தேவி, ஜெயமோகன்,அசாம் எழுத்தாளர் ஜானவி பருவா,கேரளக் கவிஞர்  கே.ஜி சங்கரன் பிள்ளை ஆகியோர் விருது வழங்கும் அரங்கில் பேசினர். அபியைப்பற்றி வாசித்துவிட்டு நிறைவாகப் பேசினார்கள். அபியோடு ஒன்றரை மணி நேரக் கலந்துரையாடல் அபியின் ஆளுமைக்குச் சான்றாக விளங்கியது. தமிழ் நாட்டில் கொடுக்கப்படும் பெரும்பாலான விருதுகளில் அரசியல் கலந்திருக்க, இவ்விழா நிஜமான ஆளுமைக்கு வழங்கப்படும் மரபைப் பின்பற்றி வருகிறது. இன்னும் நேர்மையாகச் சொன்னால் அரசு விருதுகளால் ஆள் பார்த்து தேர்வுசெய்து, ஆளுமைகளை ஓரங்கட்டுவது காலங் காலமாக நடந்துவருகிறது. இங்கேயும் அப்படித்தானே. யார் தன்னை புகழ் சூட்டில்  அடைகாக்கிறார்களோ அவர்களின் முட்டைகளே குஞ்சு பொரிக்கும் . (இலக்கிய ஆளுமைகளா? அப்படின்னா என்னாங்க?)

அஸ்ஸாம் எழுத்தாளுமை, ஜானவி பருவா, சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் இம்முறை., கணவரோடு பெங்களூரில் வசித்து வருகிறார் . மருத்துவத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். ஆனால் எழுத்தாளர் என்றே பரவலாக அறியப்படுகிறார். அவர் அஸாம் வாழ்க்கையை எழுதியவர். இந்தியாவின் வட மாநில பிராந்திய வாழ்க்கையைப் பின்புலத்திலேயே அவருடைய கதைகள் எழுதப்படுகின்றன.அவருடைய நான்கைந்து சிறுகதைகள் ஜெயமோகனின் தளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாயின.

நான் மிகவும் அதிர்ச்சியடைந்த அரங்கம் வெண்பா கீதாயனியின் அரங்கம். 25 வயதே நிரம்பிய இளம்பெண்.' நீ கூடிடு  கூடலே' என்ற தொடர்வழி சமூகத்தில் பெரிய அலையை உண்டாக்கியவர். நீ கூடிடு  கூடலே தொடர் பற்றி நான் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் வாசிக்கக் கிடைக்கவில்லை. இப்போது கிண்டியில் கிடைக்கிறது.  ஆண் வர்க்கத்தின் புரிதலின்மை பற்றிப் பேசுகிறது.பெண்கள் ஆண்களிடமிருந்து பரிசுக்காக ஏங்குபவர்கள் என்பதையும் ஆண்பெண் உறவுச்சிக்கல் பற்றி விரிவாக எழுதப்பட்ட தொடர். அது நூலாக வந்திருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லையென்றே பதிலிறித்தினார்.என்ன காரணம் என்று வினவியதற்கு அது நூலாக வருவதில் அரசியல் காரணங்கள் பெரும் தடையாக இருந்தன என்றார். அவரின் இன்னொரு நூல் அந்நூல் திருமணமாகாத  ஆண் பெண் சேர்ந்து வாழும் நவீன வாழ்க்கைபற்றிய விடயங்களை உள்ளடக்கியது. மரபாக தாலிகட்டித் திருமணம் செய்து கொண்டு  வாழும் வாழ்க்கை போலல்லாமல் ஒப்பந்த அடிப்படையில் வாழ்வது.உனக்கும் எனக்கும் எப்போது பிணக்கு உண்டாகிறதோ அப்போது இவ்வுறவை முறித்துக்கொள்ளலாம் என்ற ஒப்பந்தம். இது மேலை நாடுகளில் மிகச் சாதாரணம். இது தொடர்பாக உங்களுக்குக் கேள்வி எழலாம். எல்லா சந்தேகங்களுக்கும்  நிபந்தனைகள் அடிப்படையிலான ஒப்பந்தம் பதில் சொல்லலாம். இது பண்பாட்டு அழிவில்லையா என ஒரு பெண்மணி கேட்டார்.இப்போதுள்ள சமூகக் கட்டமைப்பில் மட்டும் பண்பாடு அழியவில்லையா ? என்று பதில் கேள்வி எழுப்பினார். வெண்பாவின் அம்மா உங்கள் எழுத்துபற்றி ஏதும் கருத்துரைக்கவில்லையா என்ற கேள்விக்கு ,என் அம்மா ஒரு மனோதத்துவ நிபுனர்' என்றார். அவர் இதையெல்லாம் பெரிதாகக் கருதவில்லை என்றும் சொன்னார்.
மலேசியாவில் இது பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. நகர வாழ்வில் இந்த நவீன வாழ்க்கைக்கான சாத்தியக்கூறுகள் உண்டு.வெண்பா கீதாயனை அந்த நவீன வகை எழுத்துக்காகவே மேடையேற்றினார்கள்.இங்கே , மலேசியாவில் நவீன இலக்கியம் என்ற சொல்லே கசப்பை ஏற்றிவிடுகிறது.நவீனம் என்றாலே பாலியல், கெட்ட வார்த்தை.மரபான வாழ்க்கைக்கு உலைவைக்க வந்தது என  குறுகிய சிந்தனை கொண்டு போர்க்கொடி ஏந்துகிறார்கள். இன்றைக்குள்ள நவீன உலக வாழ்க்கை நவீனமாகத்தான் மடைமாறும் என்று சொல்லிப் புரியவைக்கத் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டியுள்ளது.காலத்துக்குத் தகுந்த மாதிரிதான் வாழ்வியலும் மாறும் என்பது எழுதப்படாத விதி.இதனை யாராலும் மாற்ற முடியாது.

எனக்குப் பிடித்த அரங்கம் யுவன் சந்திரசேகரனுடையது. தத்துவார்த்தமாக இருந்தது. இசை அவர் எழுத்தை இயக்குகிறது என்றார்.சமீபத்தில் அவருடைய நாவலான 'கானல் நதி'யை வாசித்தேன். இசையில்தான் அவர் ஆன்மா இயங்குகிறது என்பதைப் புரிந்துகொண்டேன்.

யுவன் இசையில் அபார ஞானமுள்ளவர்.  'எழுதும் யுவன் வேறு.அவன் உங்களோடு இப்போது பேசிக்கொண்டிருக்கும் யுவன் அல்ல அவன்' என்றார். எழுதும் யுவன் முற்றும் முழுதாக இயல்பான யுவனை இழ்ந்துவிடுபவன் என்று சொன்னார். அத்தருணத்தில் தான் டிரான்ஸ் நிலையில் இருப்பேன் என்று கூறினார். அவர் எழுத்தைப் படித்தால் நாமும் நம்மை இழந்துவிடுவோம்.  தி ஜானகிராமனின் மோகமுள் நாவலில் மோகம் அதிகமும் இசை குறைவாகவும் உள்ளதை எள்ளல் செய்தார். நான் வாசித்த தி.ஜாவின் மரப்பசு முற்றும் முழுதும் பாலியல் நாவல் . அம்மா வந்தாள் நாவலில் நாயகனின் தாய் சோரம் போவதை மிகமென்மையாகச் சொல்லியிருப்பார்.

அமிர்தம் சூர்யா தன் கதை கவிதைகள் குறித்த பின்புலத்தை சுவாரஸ்யமாகச் சொல்லிக்கொண்டு போனார். நூல்கள் பற்றி நீங்கள் உங்கள் தளத்தில் பேசுகிறீர்களே எல்லா நூலுமா உங்களுக்குச் சிறந்த நூலாகப் படுகிறது என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில் , சிரமப்பட்டு எழுதுறாங்க அதன் போதாமைகளைப் பேச வேண்டாமே என்றார். மிகக் கரிசனமுள்ளவர். ஆனால் தேர்ந்த இலக்கியம் வளர இந்தச் செய்கை தடையாகிவிடும் என்பது பலரின் கருத்தாக இருந்தது. அமிர்தம் சூர்யா கல்கி மாத இதழின் துணை ஆசிரியர் என்பதால் அச்சுப் பத்திரிக்கையின் விற்பனைச் சரிவு பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டது. அச்சு ஊடகங்களின் சரிவு தவிர்க்க முடியாதது என்றார்.

கவிஞர் இசையின் அரங்கம் சுவையாக இருந்தது. அவர் நடிகர்களின் பெயரை தன் கவிதைகளில் பயன்படுத்துவது பற்றிக் கேள்விகள் எழுந்தன. சிவாஜி வானிஸ்ரீ வடிவேலு போன்றவர்களின் நடிப்பில் கவித்துவமுள்ளதால் அவர்கள் தன் கவிதைகளிலும் நிழலாக வருவதாகச் சொன்னார்.

பெருந்தேவி, கே என் செந்தில், சுரேஸ்குமார் இந்திரஜித் ஆகியோரின் அரங்கமும் பல்வேறு வினாக்களை எதிர் நோக்கியது.

சுரேஷ்குமார் இந்திரஜித் வாசகர் கேள்விக்கு நேர்மையாக பதில் சொல்வது கடினம் என்றார்.மறைத்துதான் பேசவேண்டியுள்ளது என்பதை ஒப்புக்கொண்டார் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு மணிநேரம் கொடுத்திருந்தார்கள். அவர்களின் எழுத்தின் பின்புலத்தைக் கொண்டுவர இந்த நேர அளவு பேருதவியாக இருந்தது. மலேசியாவில் எழுத்தாளருக்கு 5 நிமிடமும், ஏற்பாட்டாளர்களுக்கு ஒரு மணி நேரமும்  எடுத்துக் கொள்வார்.தங்களின் வீரதீர பிரஸ்தாபங்களை எடுத்துரைக்க இதனைப் பயன்படுத்துவது தப்பில்லைதான் என நினைக்கிறேன்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சி முடிவுறும்வரை மண்டபத்தில் இருக்க முடியவில்லை. பல மணி நேரம் பேருந்தில் பயணம் செய்வது சிரமமாக இருந்ததால் கோவையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் போகலாம் என்று சொன்னேன். சென்னையில் ஹரியின் நண்பர் பத்ரியிடம் சொல்லி  விமான டிக்கட் முன்பதிவு செய்தாயிற்று. எனவே இரண்டு மணி நேரத்துக்கு முன்னாலேயே விமான நிலையத்துக்குப் போக வேண்டியதாயிற்று.


                                                             நிகழும்.....






Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...