Skip to main content

பயணக் கட்டுரை 11 : இருபதும் எழுபதும்

11. சிறுவாணி நீரூற்று

சிறுவாணி நீரூற்று

  அன்று இரவு 11 மணிக்குத்
திருவண்ணாமலையிலிருந்து பேருந்து புறப்பட்டது. சொகுசுப் பேருந்துதான்.  நெடுஞ்சாலையில்தான் ஓடியது. சில பயணப்பேருந்துகளில் பயணம் செய்வது நீங்கள் இலக்கையடையும்போது உங்கள் உள்ளுறுப்புக்களை உங்களின் அனுமதியில்லாமல் இடம் மாற்றி வைத்துவிடும். ஆனால் தமிழக நெடுஞ்சாலை ஓட்டம் கிட்டதட்ட மலேசியாவை ஒத்தது . அதனால் அலுங்காமல் குலுங்காமல் போய்ச் சேர்ந்தோம்.

கோவை விடிகாலை 3-க்குச்  சாம்பல் பூத்திருந்தது. பனி சன்னமாய் பொழிந்துகொண்டிருந்தது. வாகன சத்தங்கள் குறைந்து  சாலை ஓய்ந்திருந்தது. இரவு மனிதர்கள் சிலருக்காக டீக்கடைகள் விழித்திருந்தன. கொதிநீர் பானையிலிருந்து ஆவி கலைந்து கலைந்து பறந்துகொண்டிருந்தது. அது வெறும் நீராவிதான் என்று ஹரிக்கு தைரியமூட்டிக்கொண்டிருந்தேன். உறக்கம் என் விழிகளுக்கு மிக அருகில் நின்று கவ்வியபடி இருந்தது.

இந்த விடுதியை ஹரி இணையத்தின் மூலம்  பதிவு செய்து வைத்திருந்தார். வேஸ் மூலம் நடந்தே இலக்கை அடைந்தோம்.விஷ்ணுபுர விழா நடக்கும் ராஜஸ்தானி சங் மண்டபம் இங்கிருந்து வெகுதூரமில்லை. விஷ்ணுபுர நண்பர் செந்திலும் மீனாம்பிகையும் எங்களுக்கான விடுதியை மண்டபத்துக்கு அருகிலேயே பதிவு செய்து வைத்திருந்தனர். ஆனாலும் ஓரிரவு இங்கே கழித்தாக வேண்டும். இலக்கிய ஆரவக் கோளாறு காரணமாக முதல் நாளே போய்ச் சேர்ந்துவிட்டோம்.
விஷ்ணுபுர விழாவுக்கு இன்னும் 24 மணிநேரமிருப்பதால் கோவையிலிருந்து 37 கிலோமீட்டர் தூரத்திலுள்ள சிறுவாணி நீர்வீழ்ச்சிக்கு போகலாம் என்று திட்டம் போட்டிருந்தார் ஹரி.  குற்றாலத்தின் இன்னொரு பகுதி சிறுவாணி. உலக த்திலேயே இரண்டாவது நீண்டதூரத்திலிருந்து பாயும் நீருற்று இது.காலை உணவை முடித்துக்கொண்டு சிறுவாணிக்குப் போகின்ற பேருந்தில் ஏறினோம்.ஒரு மணி நேரப் பயணத்துக்குபிறகு ஒரு நூறு மீட்டர் நடந்து வேறு முனையில் இன்னொரு பேருந்து ஏறி சிறுவாணியை அடைந்தோம். அந்த இடைப் பயணமே காட்டின் வாசத்தை கொடுக்க ஆரம்பித்துவிட்டது. சிறுவாணியில் குளித்தே ஆகவேண்டுமென்று ஹரி பிடிவாதமாய் இருந்தார்.

கரும்பச்சை போர்த்திய காட்டின் முகப்பில் பேருந்து இறக்கிவிட்டது. நகர நெருக்கடியிலிருந்து விடுபட்டு கானகத்தின் பேரமைதிக்குள் சங்கமமானோம்.அங்கிருந்து சிறுவாணி நீரூற்றுக்கு  நடந்துதான் செல்ல வேண்டும். ஒரு கிலோமீட்டர் இருக்கும். காட்டுப்பாதையில் நடந்தால் தூரமெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. காடே உங்களை உள்ளிழுத்துக்கொள்ளும். வனமே உங்களுக்கான நடையை தாரைவார்த்துத் தந்துவிடும்.  ஒற்றைக் கால்கள் தவமிருக்கும் ஆயிரமாயிரம் மரங்கள் நம் களைப்பை வாங்கிக்கொள்ளும்.

சிறுவாணிக்கு நுழையுமுன்னர் உல்லாசப்பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பொதுவாகவே இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் மக்கள் கூடும் இடங்களுக்கு பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். சமீபத்தில் கேஷ்மீர் இந்தியாவுக்குத்தான் சொந்தம் என இந்திய அரசு பிரகடனப்படுத்தியதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

நான் நிலக்கடலை வாங்கிப் பையில் வைத்திருந்தேன்.எப்படியாவது கடத்திக்கொண்டுபோய் நீரூற்றை ரசித்துக்கொண்டே சாப்பிடலாம் என்ற எண்ணத்தில். என்னைப் பரிசோதனை செய்தவர் அதனை வெளியே எடுக்கச் சொன்னார். நிலக்கடலை இருந்த நெகிழிப்பையை நீக்கிவிட்டு அதனைப் பொறுப்போடு ஒரு தாள் சுருளில் போட்டுக்கொடுத்தார். ஒரு நெகிழிப் பைகூட என் கண்ணில் படவில்லை நடைபாதையிலும் ஓடை அருகிலும்.நெகிழியை கான் உயிர் உணவென உட்கொண்டு  பெரும்பாதிப்புக்குள்ளாகின்றன. சில வகை கானுயிர்கள் இல்லாமலும் ஆயின.இப்படி இறந்த கானுயிர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் இந்தத் தடை.
நான் குளிக்கப்போவதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். ஊற்றை முழுமையாக உள்வாங்கக் கரையே தகுந்த இடம். சாரல் பட்டுக் குளித்தமாதிரியும் இருக்கும் அருவியின் அழகில் மூழ்கிய மாதிரியும் இருக்கும்.


காட்டு வழிப்பாதை சுகமாக இருந்தது.ஒரு 20 மீட்டர் தூரத்திலேயே மலையுச்சிலிருந்து கொட்டும் நீர் கண்களுக்குத் தண்மையை ஊற்றிவிட ஆயத்தமாகிறது. அருகில் நெருங்க நெருங்க அதன் அழகு நம்மை முழுமையாக உள்ளிழுத்துக்கொள்கிறது. மேலிருந்து பாயும் நீர் பளபளக்கும் வெள்ளி  மந்திரப் பாய்போல மிதந்து விரிந்து விழுந்து பேரிரைச்சலை உண்டுபண்ணுகிறது. நம் உச்சந்தலையில் மோதி உடலுக்குள் மெல்லப் புகுந்து உயிரைத் துழாவி பேரின்ப வாசலைத் திறந்துவிடுகிறது தண்ணீர். பாறையில் மோதும்போது நீர்ப்பஞ்சு சிதறி நம்மையும் நனைக்கிறது. இயற்கை அள்ளித் தந்த  கொடைகள் எல்லாமே அற்புதம்தான். அதிலும் நீரூற்று பேராணந்தம் தரும் எழில் நிறைந்த காட்சி. இல்லையென்றால் தூரம்கூடப் பாராமல் மனிதர்கள் இங்கு வந்து மண்டுவார்களா?
பாறைகளில் மரங்களில் குதித்தோடுகின்றன குரங்குகள் . ஒருவகையில் பாறையில் மோதிக் குதித்து இன்னொரு பாறையில் குதித்து, மேலும் இன்னொன்றில் குதித்தோடு நீரும் குரங்குதான். மனதையும் குரங்காக்கிவிடுகிறது பாயும் புனல்நீர்.

ஹரி தண்ணீரைச் சுவைத்துப் பாருங்கள் சார் என்று கைநிறைய அள்ளி வந்தார் ஊற்று நீரை. அவர் கையிலிருந்தே வாய்க்குள் உறிஞ்சினேன். அமிர்தம். இறைவன் நேரடியாக அருளிய தீர்த்தம். உலகின் சுவைமிகுந்த நீரில் சிறுவாணி நீரும் இடம் பிடிக்கிறது.

நீர் மேலிருந்து மிக வேகத்தில் பாறையில் மோதி விழுகிறது.பின்னர் மேலும் சில பாறைகளில் முட்டி கொப்பளித்து இன்னும் சிலவற்றை உரசி கடைசியில் புனலுக்குள் ஓடுகிறது. அதற்கப்புறம் அதன் வேகம் மட்டுப்பட்டு நிதானமாகப் பயணிக்கிறது. கடைசியாக அந்த நிதானத்தையும் இழந்து வயது முதிர்ந்து, நடை பழுதடைந்த, முதியவர் போல வலுவிழந்து  தள்ளாடி நகர்கிறது கடைசியில்.எப்பேற்பட்ட மனித ஆட்டத்தின் தத்துவம். இளமையில் ஆடிப் பின்னர் முதுமையில் அடங்கும் மானுட வாழ்வை இந்த விரைந்து விழுந்து நயந்து போன நீரோடு ஒப்பீடு செய்து பார்க்கிறேன். அதனால்தான் எல்லாரும் நீருக்குள் தன்னை ஒப்படைக்க நான் கரையில் மெய்மை தேடி அமர்ந்தேன்.

ஹரி நான் குளிக்கிறேன் என்னை விதம் விதாமாய் படம் எடுங்கள் என்றார். ஒரு சில கிளிக் பிடித்ததும் ஈரத்தோடு வந்து சரி பார்த்துக்கொண்டார். படங்கள் மிக முக்கியம் வரலாறைப் பதிவு செய்ய வேண்டுமென்றார்.

ஒரு மணி நேர இனிய நனைதலுக்குப் பிறகு கிளம்பிவிட்டோம். மதியப்பொழுது தாண்டிவிட்டிருந்தது.பசி வயிற்றில் கொழுந்துத் தீயாக ஜுவாலை விட்டது.

விடுதிக்குப் போகும் முன்னர் தலப்பாக்கட்டி பிரியாணி கடையில் சாப்பிடலாம் என்று முடிவெடுத்து உள்ளே நுழைந்தோம். சார் எல்லாரும் ஓய்வில இருக்காங்க வெறும் பிரியாணிதான் இருக்கு கொண்டாரவா என்று கேட்டார் ஒரு சிப்பந்தி. பசிக்கு எது கிடைத்தால் என்ன ? கொண்டுவந்தான் அண்டா பிரியாணி.

கோழித்துண்டை கிண்டிக் கிண்டி தேட வேண்டியதாயிற்று. கோழியும் ஓய்வுக்குப் போய்விட்டதோ? படு கேவலமாக இருந்தது பிரியாணி.சற்று நேரத்தில் வேறு மேசையில் கோழி பிரட்டலும் வேறு வகை உணவு வகைகளும் வந்து சேர்ந்தது. என்னய்யா இது ஒன்னும் இல்லான்னீங்க, என்று கேட்டேன். அசட்டு சிரிப்புதான் பதிலாய்க் கிடைத்தது. ஓய்வில் இருப்பவரை வேலை வாங்கினால் கடுப்பில் குறைந்தபட்ச சேவைதான் கிடைக்கும் போல!

உண்டது செரிக்கபோதிஸுக்குள் நுழைந்து சேலை தேடினோம். கணவனாய் 'வாக்கப்பட்டால்'சேலை வாங்குவது தலையாய கடமை எனக் கொள்க.நல்ல வேளையாக ஹரியிடம் பொறுப்பை ஒப்படைத்திருந்தார் என் மனைவி. சேலை வாங்கும் திறன் எனக்கில்லை என்பது அவர் எப்போதோ எடுத்த முடிவு. எப்படியோ சுமையை அவர் சுமக்க நல்லது கெட்டது எது வந்தாலும் நான் பொறுப்பல்ல!அவர் தேடி சிலவற்றை எடுத்து புலனம் வழி அனுப்பி வைத்தார். அதில் ஒன்று தேர்வாகியது.அப்பாடா ஒரு வில்லங்கம் முடிந்தது. போதிசில் என்ன விஷேசம் என்றால், சிறப்புச் சலுகையாகப் பட்டு சேலையில் பெயர் நெய்து தருவார்கள். நான் அன்புள்ள ஜானகிக்கு புண்ணியாவன் என்று எழுதிக் கொடுத்தேன். இந்த சேலைமுந்தானையைக் கவனமாய்ப் பாருங்கள்.

முந்தானையின் ஒரு மூளையில் அவ்வெழுத்து அழகாக அச்சேறி என் மனைவிக்கும் பிடித்துப் போனது. ஹரியும் அவ்வாறே அச்சிட்டு அக்காள் தங்கை அம்மா மூவருக்கு சேலை வாங்கினார்.

சில மணி நேரத்துக்குப் பிறகு விடுதியைச் சென்றடைந்தோம்.

அதிகாலை மணி மூன்றுக்கு இப்போது தங்கும் அறையைக் காலி செய்யவேண்டும் .தாமதமானால் முழுநாள் தொகை கட்டவேண்டும். ஹரியிடம் சொல்லி காலை 7.மணி வரைக்கும்  சலுகை கேளுங்கள் என்றேன்.அவர்கள் ஒவ்வொரு மணி நேரத் தாமதத்துக்கும் 100 ரூபாய் கேட்டார்கள். இது என்ன கணக்கு ? சொந்தப் பைக்கணக்கு போலும். சரி கொடுத்துவிடுவோம். அகால நேரத்தில் எழுந்து இன்னொரு விடுதிக்குப் போவது சுத்தப் பைத்தியக்காரத்தனமல்லவா?

காலை 7.30க்கெல்லாம் செந்தில் சொன்ன விடுதி அறைக்குப் போய்விட்டோம். வசதி நிறைந்த அறை. தரமான விடுதி. அன்று காலை நான் வாசித்த எழுத்தாளர்களைப் பார்க்கப் போகிறேனே என்ற ஆவலோடு ராஜஸ்தானி நோக்கி நடந்தேன்.

                                                           நிகழும்.....



Comments

வணக்கம்,ஐயா கோ.புண்ணியவான் அவர்களே. தனிமையில் வாசிப்பது தனி சுகம். தங்கள் பயணக் கட்டுரை வர்ணனையும் உத்தியும் எழுத்தும் யதார்த்தமாக வாசகனை ஈர்க்கிறது. மிக நீண்ட காலத்திற்குப் பின் வலைப்பூ வாசிப்பு நீர் வீழ்ச்சி சாரல் போன்று இருந்தது.

வாசுதேவன் இலட்சுமணன்

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...