Skip to main content

பயணக் கட்டுரை 8 : இருபதும் எழுபதும்

8. கரிகாலன் கட்டிவைத்தான் கல்லணை


காமாட்சி உணவகத்தின் சுவை மாறுமுன்பே கொல்லிடம் கல்லணைக்குப் பயணமானோம். தஞ்சையிலிருந்து திருச்சிக்கு ஒரு மணிநேரப் பயணம்தான்.திருச்சியிலிருந்து கொல்லிடத்துக்கு முக்கால் மணி நேரப் பயணம். சில பயணங்களின்போது கல்லணையைக் கண்ணாறக்  காணவேண்டுமென்று ஆட்டோ ஓட்டுனர்களைக் கேட்டபோது, அது ரொம்ப தூரம் சார். ஆட்டோ சவாரிக்கு போவாது சார் என்று என் எண்ணத்தை மழுங்கடித்துவிடுவார்கள். கார் பயணத்தில் முக்கால் மணி நேர ஓட்டம் ஆட்டோ சவாரிக்கு  வெகுதொலைவில்தான்.

மழைக்காலம் முடிவடையும் காலமாதலால்  தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.கண்ணெட்டும் தூரம் வரை நீர் மைதானம் பரந்து கிடந்தது. நீர்ப்பெருக்கு நீரணையில் மோதி சீறிப்பாய்ந்து நதியில் சேர்ந்து கும்மாளம் போட்டது.எட்டியிருந்து பார்த்தபடியே  உடல் நனைய குளித்துக்கொண்டிருந்தோம். நீர்ப்பரப்பைத் தொட்டு வந்த காற்று இனிமையாய் மோதிச்சென்றது. வானம் நீர்ப்பரப்பைக் கண்ணாடியென நினைத்து முகம் பார்த்து ஒப்பனை செய்துகொண்டிருந்தது. கல்லணை நீர்ப்பரப்பு என் மீது தியானத்தை ஏற்றிவைத்ததுப்போல நான் சில கணங்கள் மெய்மறந்திருந்தேன்.
கல்லணையை மிகவும் திட்டமிட்டு கட்டியிருக்கிறான் கரிகாற்சோழன். அதனை எழுப்பி 1900 ஆண்டுகள் ஆயிற்று என்று விக்கி சொல்கிறது. அன்றைக்கு அவனுக்கிருந்த தூர நோக்குச் சிந்தனை, நீர் பாசனத்துறை அறிவு , ஒரு இருநூறு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னாலிருந்த அரசியல் தலைவர்களுக்கு இருந்திருந்தால் தமிழகத்தில் கோடை காலத்தில் தண்ணீருக்குக் குடம் தூக்கிச் சாலையின் குறுக்கே போராட்டம் நடத்த வேண்டியிருந்திருக்காது. இங்கே அரசியல் தலைவர்கள் வாக்காளர்களுக்கு வாய்க்கரிசி போட்டு ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வருவதிலேயே கண்ணாய் இருக்கிறார்கள். எப்படி நாற்காலியைப் பிடிப்பது எப்படிப் போட்ட பணத்தை மீட்டெடுப்பது என்பதிலேயே கண்ணாய் இருக்கிறார்கள்.மக்கள் சேவையில் கவனம் செலுத்துவது குறைவாகிப் போனது. நான் விசாரித்தவரை திருச்சி தஞ்சை போன்ற நகரங்களில் நீர்த்தட்டுப்பாடு குறைவு ஆனால் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில்  வெயில் காலத்தில் நீருக்கு அல்லாடவேண்டியிருக்கிறது மக்கள்.
தமிழ் நாட்டின் முடிசார்ந்த மன்னர்களில் மிக முக்கியமானவன் கரிகாற் சோழன். வடநாடு வரை போர்த்தொடுத்து ஆரியர்களை வென்றவன்.இமயம் வரை படையெடுத்தவன் மட்டுமல்ல சென்றவிடங்களை கையகப்படுத்தியவன்.இதனாலேயே பொருனராற்றுபடை எனும் ஆற்றுப்படைநூல் கரிகாலனை பாட்டுடைத்தலைவனாகப் பாடியிருக்கிறது.
 சிறுவயதில் அவன் கால்கள் தீயில் பட்டு கருத்துவிட்ட காரணத்தால் அவனுக்குக் கரிகாலன்  என்ற பெயர் வந்திருக்கிறது.
கரிகாலன் மணிமண்டபம்
அவனுக்குத் திருமாவளவன், பெருவளத்தான் என்ற பட்டப்பெயரும் உண்டு. அவன் காலத்தில் அவனைச் செயலாற்றலில் மிஞ்சக்கூடிய மன்னர் இல்லை என்றே சொல்லப்படுகிறது.
இக்கல்லணை இந்தியாவில் முதன் முதலாகக் கட்டப்பட்ட கல்லணை.உலகின் மிகப் பழமையான நீரணை என்று போற்றப்படுகிறது. உலகக் கல்லணை நிபுணர்கள் பார்த்து பிரமிக்கும் வண்ணம் இதன் கட்டுமானம் இருக்கிறது.காவேரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி பல்லாயிரம் விவசாய நிலங்களுக்கு நீர் அனுப்பும் சிறப்பைப் பெறுகிறது இக்கல்லணை. அவன் காலத்தில் தன் குடிகள் அடிக்கடி காவேரி வெள்ளத்தில் அவதியுற்றதால் கரிகாலன் இக்கல்லணையைக் கட்ட முடிவெடுத்திருக்கிறான் என்று வாசிக்கும்போதே அவன் மக்கள் நலத்தில் எவ்வளவு அக்கறை கொண்டவன் எனப் பறைசாற்றுகிறது. சில தலைவர்கள் 'தம்'மக்கள் நலத்திலேயே குறியாய் இருப்பார்கள். அவர்கள் பல எண்ணெய்க் கிணறுகளுக்கு உரிமையுள்ள அரபு கோடீஸ்வரர்களுக்கு இணையாக வாழவேண்டும் என்றே தம்மக்களை பேணிக் காத்து வளர்த்து விட்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் மக்கள் வரிப்பணமும், மக்களிடமிருந்து வாறிய பணமும்தான் ஆதாரம்.
டாக்டர் மிமியின் கணவர், மிமி,நான் , ஹரி

கரிகாலன் கல்லணை வளாகத்துக்கு நீங்கள் நுழையும்போதே அதன் இருபுற நீர்த்தேக்கம் உங்களைக் கவர்ந்துவிடும். நடுவில் பாலம் அமைக்கப்பட்டு இருமருங்கும் தண்ணீர் தேசத்தைக் காணலாம். கண்குளிரப் பாருங்கள் என்ற சொற்றொடர் தண்ணீரைப் பார்த்த கண்ணால் பாருங்கள் என்றுதானே பொருள் தருகிறது. தண்மை நீர் தானே தண்ணீர் என்றாகிறது. தண்மை என்றால் குளிர்மை என்றல்லவா பொருள்! எனவே கண்களைக் குளிர்ந்த தண்மைக்குள்ளாக்கும் நீரணைகளில் இந்தக் கொல்லிடம் நீரணையும் ஒன்று. இதனை நம் வீரச் சோழன கட்டியதனாலோ என்னவோ நாம் பெருமை அடைகிறோம்.தமிழ் நாடு முழுவதும் பெரும் பெரும் கோயில்களின் சிற்பங்களும் அதன் பிரம்மாண்ட கட்டமைப்பும், கல்லணையின் சுற்றுப்புற ரம்மிய அமைப்பும் நம்மை வியக்க வைக்கின்றன. கரிகாலன் மணிமண்டபம் ஒன்றும் கல்லணை அருகே கட்டப்பட்டு அவன் வரலாற்றைப் பறைசாற்றிய வண்ணமிருக்கிறது. நீரணையின் அருகே அவன் யானை மீதமர்ந்து கம்பீரத்தோடு காட்சிதரும் சிலை ஒன்றுண்டு. 
கரிகாலன் சிலை
என் நண்பர் அடிக்கடி என்னைக் கேலி செய்வார். "ஏன்யா தமிழ்நாடு தவிர வேற எங்கியும் போக மாட்டியா நீ?" என்று. தமிழ்நாடு  வரலாற்றுச் சிறபுக்களை உள்ளடக்கிய ஒரு நிலம்.தமிழ் மொழியின் தாய்ப்பால் சுரக்கும் நிலம், வீர சரித்திரத்தைப் பேசும் பாட்டுடைத்தலைவர்கள் கொண்ட இடம்,பல்வேறு கடவுளர்களின் பக்தி இலக்கியம் கொடை தந்த பெருநிலம். பாடல் பெற்ற எண்ணற்ற திருத்தலங்கள் கொண்ட ஊர்கள் நிறைந்த ஊர். இன்றைக்கு முதல் பார்வையில் அது தூய்மையற்றுக் கிடப்பதுபோலத் தோன்றினாலும் நான் வியந்ததற்கும் மேலாக செம்மாந்து திகழ்கிறது இந்நிலம். கல்லணையில் ஒரு மணி நேரம் கண்களைப் பறிகொடுத்துவிட்டு  அங்கிருந்து மீண்டும் தஞ்சை மண்ணுக்குப் பயணம். 
அடுத்து திர்ப்பட்டூர் பிர்ம்மபுரீஸ்வரர் ஆலயத்தைப் பர்த்துவிட்டு,
நாளை காலை திருவண்ணாமலைக்குப் புறப்படுகிறோம். எப்படியென்றுதான் புரியவில்லை!

                                                           நிகழும்.....  
  



Comments

பெ.மகேஸ்வரி said…
சிறப்பு. கல்லணைக்கு சென்று வந்த உணர்வும், ஒரு முறையாவது சென்று வரணும் என்ற ஆவலையும் தூண்டும் தொடர்.
பெ.மகேஸ்வரி said…
சிறப்பு. கல்லணைக்கு சென்று வந்த உணர்வும், ஒரு முறையாவது சென்று வரணும் என்ற ஆவலையும் தூண்டும் தொடர்.
வாணிஜெயம் said…
இந்த அத்தியாயத்தை மிக அமைதியான சூழலில் வாசிக்க நேர்ந்தது. வாசிப்பிற்கு நெருக்கமாக உணர்கிறேன். கல்லணைக்குச் சென்ற அனுபவம் எனக்கிருந்ததாலும் இப்படி தோன்றியிருக்கலாம். நான் சென்றிருந்த போது வறண்ட காவேரியை தான் தரிசிக்க நேர்ந்திருந்தது. காணொயில் கண்ட செழுமை அன்று காவேரியில் இல்லை.அக்காட்சி மனதில் ஊற்றெடுக்க செய்கிறது. கரிகாலனை சார்ந்த குறிப்புகள் சிறப்பு.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...